கடந்த இரு வாரங்களில் சர்வதேச அளவில் இரு நிகழ்வுகள் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. முதலாவதாக இலத்தீன் அமெரிக்க நாடான ‘ஹைதி'(Haiti)யில் அதன் அதிபரான ‘ஜுவனால் மோஸ்’ ( Jovenel Moïse) வீட்டினுள்ளே புகுந்த கூலிப்படையினர் அவரை சுட்டுக்கொன்றது. இரண்டாவது தென்னாபிரிக்கா (South Africa) நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள். இந்த கலவரங்களுக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுவது தென்னாபிரிக்க நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்த ‘ஜேக்கப் ஜுமா’ (Jacob Zuma). ஊழல், பண மோசடி ஆகியவற்றிற்காக நீதிமன்றத்தால் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தென்னாப்ரிக்க நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்றுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறைகளால் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், அங்காடிகள், வங்கிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

சர்ச்சைகளின் நாயகன் ஜேக்கப் ஜுமா (Jacob Zuma)
‘ஜுமா’வின் அரசியல் பயணத்தை ஆராய்ந்தால் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரே பிளாஷ்பேக் போலத்தான் இருக்கிறது. என்ன வித்தியாசம் என்றால் நம்ம ஊர் அரசியல்வாதிகள் படித்த ஸ்கூலில் அவர் பிரின்ஸிபலாக இருந்திருக்கிறார். தன்னுடைய அரசியல் பயணத்தில் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தாலும் தன்னுடைய அரசியல் பலம் மூலமாகவே தனக்கு ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தையும் முறியடித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்வதென்றால் தென் ஆப்ரிக்காவின் அரசியல் வரலாற்றில் ‘ஜுமா’ அளவிற்கு சர்ச்சையான தலைவர் யாருமில்லை.

தென்னாப்ரிக்க நாட்டில் நிலவிய நிறவெறி அரசு 1994-ம் ஆண்டு முடிவிற்கு வந்தது. பின்பு நடந்த தென்னாபிரிக்காவின் ‘அனைத்து மக்கள்’ பங்கேற்ற முதல் பொதுத் தேர்தலில் மாபெரும் தலைவரான ‘நெல்சன் மண்டேலா’ (Nelson Mandela) தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்’ (African National Congress – ANC) வெற்றியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்ரிக்காவின் முதல் அதிபராக நெல்சன் மண்டேலா பதவி ஏற்றார். அந்த முதல் பொதுத் தேர்தலில்தான் தென்ஆப்ரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான ‘குவாஸுலு-நதால்’ (KwaZulu-Natal) மாகாணத்தின் “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்’ (African National Congress – ANC) கட்சியின் வேட்பாளராக ‘ஜுமா’ அறிமுகப்படுத்தப்பட்டார். இதற்கு முன்பே அவர் அந்த மாகாணத்தில் குறிப்பிடத்தக்க பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். தென்னாப்ரிக்கா குடியரசு நாட்டின் முதல் தேர்தலில் ‘ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ்’ மாபெரும் வெற்றியை ‘நெல்சன் மண்டேலா’ தலைமையில் வென்றெடுத்தாலும் ‘ஜுமா’ அவரது தொகுதியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
1994ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 400 இடங்களில் ‘ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ்’ 252 இடங்களில் வென்றது. மொத்தமாக 62.65% சதவிகித வெற்றியை பதிவு செய்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக முதல் தேர்தல் நடந்த 1994-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் வென்று இன்றைய 2021-ம் ஆண்டுவரை ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியே ஆளும்கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதல் தேர்தலில் இவர் தோல்வியடைந்தாலும் அடுத்த வருடத்தில் நதால் மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவிற்கான செயற்குழு உறுப்பினராக (Member of the Executive Council – Economic Affairs and Tourism) அரசால் நியமிக்கப்பட்டார். இதே வருடத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நதால் மாகாணத்திற்கான கட்சியின் தலைவராகவும், நதால் மாகாணத்திலிருந்து தேசிய செயலாளராகவும் இரு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி இரு பதவிகளை இவர் வகிப்பதற்கு எதுவாக கட்சியின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
1997-ம் ஆண்டில் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவின் மூன்றாவது துணை அதிபராக நியமிக்கபடுகிறார். இங்கிருந்து அவரது அரசியல் பயணம் அரசு பதவிகளுக்கான பயணமாக மாறுகிறது. துணை அதிபராக பதவியேற்ற 1999-ம் ஆண்டிலிருந்து 2005-ம் ஆண்டுவரை 7 ஆண்டுகள் பதவி வகித்தார் ‘ஜுமா’.
2005-ம் ஆண்டு பாலியல் கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பதவி இழந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ஆப்பிரிக்காவின் தான் சார்ந்த ‘ஜூலு’ (Zulu) இனத்தில் ஒரு பெண் பாரம்பரியமான குட்டை பாவடையான ‘கன்கா’ ( kanga -African wrap) அணிந்திருப்பது பாலியல் விருப்பத்திற்கான சமிஞ்கை என்றும் அதை முழுவதுமாக நிறைவேற்றுவது ஜூலு இனத்தின் ஆணாகிய தன்னுடைய கடமை என்று வாதிட்டார்.
குற்றம் சாட்டிய பெண் நடத்தை கெட்டவர் என்று நிரூபிக்கும் வகையில் வழக்கின் போக்கு நகர்ந்தது. மேலும் சில முயற்சியாக அந்தப் பெண் மனநல பாதிப்பிற்கு உள்ளானவர் என்றும் வாதிடப்பட்டது. குற்றம் சாட்டிய பெண்ணுடன் ஏற்பட்ட பாலியல் உறவு அந்த பெண்ணின் சம்மதத்துடன்தான் நிகழ்ந்தது எனக் கூறியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவர் மீதான குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. இந்த வழக்கு விசாரணையின் காலத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதியின் நான்கு வயது பேத்தி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதனால் அந்த நீதிபதி இவ்வழக்கிலிருந்து தானாகவே விலக நேர்ந்தது. நீதிபதியின் நான்கு வயது பேத்தி கொல்லப்பட்டதற்கும் இவ்வழக்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென காவல்துறை கூறியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பாலியல் குற்றச்சாட்டிலிருந்து ஜூமாவை விடுவித்த நீதிமன்றம் அந்த பெண் HIV தொற்று கொண்ட பெண்ணாக இருந்ததால் ஆணுறை இல்லாமல் உறவு கொண்டதற்காக கண்டனம் தெரிவித்ததும் மிக விசித்திரமானது. பாலியல் வழக்குகளைத் தொடர்ந்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் அவரை சுற்றிவளைத்தன. இந்த வழக்குகளில் இவரது நிதி ஆலோசகர் ‘ஷாபீர் ஷேக்’ (Schabir Shaik) 2006-ம் ஆண்டு 15 வருட சிறை தண்டனை பெற்றார்.

மிக மோசமான பாலியல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து இவர் மீண்டது வியப்பாக இருந்தாலும் 2007-ம் ஆண்டு மீண்டும் ஆப்பிரிக்க தேசிய கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முன்பு ஏற்பட்ட வியப்பை ஒன்றுமில்லாமலேயே செய்கிறது. ஆளுங்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதிகாரத்தின் அடுத்த நிலையான தென்னாபிரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்தது. 2009-ம் ஆண்டு ஜூமாவிற்கு அவர் விரும்பிய நாட்டின் உயர்ந்த பதவியான அதிபர் பதவியை பரிசளிக்கின்றது, மேலும் அதே வருடத்தில் இவரது நிதி ஆலோசகராக இருந்து ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் 15 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ‘ஷாபீர் ஷேக்’ மருத்துவ தேவைக்காக பரோல் வழங்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.
மொத்தம் 15 வருட சிறைத்தண்டனையில் இவர் சிறையில் கழித்தது இரண்டு வருடங்களும் நான்கு மாதங்களும் மட்டுமே. 2009ம் ஆண்டிலிருந்து டர்பன் நகரில் ஒரு பங்களாவில் உடல்நல மருத்துவ தேவைக்கான வீட்டுக்காவல் என்ற பெயரில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ( கடந்த 2020ம் ஆண்டு நல்லிணக்க தினம் என்ற நாளை தென்னாபிரிக்கா அரசு அனுசரிப்பதால் 14,500 சிறை கைதிகளை விடுவித்தது அதில் ஷாபீர் ஷேக்கும் ஒருவர். இவரின் விடுதலைக்கு தென்னாபிரிக்க அரசு குணப்படுத்த இயலாத வியாதியால் அவர் அவதிப்படுவதாலும் மேலும் கண்ணியமான மரணத்தை விரும்புவதாலும் விடுவிப்பதாக பொருத்தமற்ற காரணத்தை கூறியது)
இதைத் தொடர்ந்து தென்னாப்ரிக்காவின் நான்காவது அதிபராக 2009-ம் ஆண்டு பதவி ஏற்கிறார். அதே 2009-ம் ஆண்டு பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தென்ஆப்ரிக்காவின் ‘தேசிய வழக்கு ஆணையம்’ (National Prosecuting Authority -NPA) ‘ஜுமா’ மீதான குற்றங்களுக்கு ’சாத்தியமின்மை அல்லது விருப்பமின்மை’ காரணமாக ‘ஜுமா’ மீதான விசாரணையை கைவிடுவதாக அறிவித்தது. (The National Prosecuting Authority (NPA) on Monday said it was “neither possible nor desirable for the NPA to continue with the prosecution of Mr Zuma”). தென்னாப்ரிக்க நாட்டின் அதிபராக 2009ம் ஆண்டுமுதல் 2018ம் ஆண்டுவரை ஏறத்தாழ 9 ஆண்டுகள் நாட்டின் உயரிய பதவியில் இருந்திருக்கிறார். ஆனால் இவரின் பதவி காலத்தில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டாலும் அதை தனது அதிகாரத்தினால் முறியடித்தார்.

காலம் ஒருபோதும் நிலையானதில்லை. டிசம்பர் 2017ல் ‘சிரில் ரமபோசா’ (Cyril Ramaphosa) ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வென்றார். இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜுமா நாட்டின் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அவரின் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், மோசடி வழக்குகள் புதுப்பிக்கப்பட்டு விசாரணை தொடங்கியிருக்கிறது. இந்த விசாரணையில் அவருக்கு சிறை தண்டணை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் நாடெங்கும் கலவரங்களிலும் வன்முறைகளிலும் இறங்கியிருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க வகையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறிவைக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள், கடைகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. ஏன் என்பதையும் பார்ப்போம்.
இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்
இந்தியாவின் பல அரசியல் திருப்பங்களுக்குக் காரணமான நபர்களை தோற்றுவித்த உத்திரப்பிரதேச மாநிலமே இன்றைய தென்னாப்ரிக்க நாட்டின் கலவரங்களுக்கும் காரணம் என்றால் வியப்பானதாகவே இருக்கும். ஆனால் உண்மையே. 1990-ம் ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து (Uttar Pradesh’s Saharanpur) ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்கள் குடிபெயர்ந்தனர். குப்தா சகோதர்கள் என்றழைக்கப்படும் அஜய் குப்தா, ராஜேஷ் குப்தா மற்றும் அதுல் குப்தா (The Gupta brothers – Ajay Gupta, Rajesh Gupta, and Atul Gupta) ஆகிய மூவரும்1993-ல் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அந்த நாட்டில் சஹாரா கம்ப்யூட்டர்ஸ் (Sahara Computers) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் அதுல் குப்தா. தொடக்கத்தில் ஒரு சிறிய குடும்ப வணிகமாகத் தொடங்கிய அந்நிறுவனம் தற்போது 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஆண்டு வருமானமாக சுமார் 22 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் கொண்டுள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது.

மெல்ல மெல்ல கணினி வணிகத்திலிருந்து குப்தா சகோதரர்கள் சுரங்கம், தொழில்நுட்பம், ஊடகம் போன்ற பிற தொழில்களில் நுழைந்து இறுதியாக அரசாங்கத்தில் நுழையுமளவிற்கு ஆதிக்கம் செலுத்தினார்கள்.
2015-ம் ஆண்டு தங்களில் ஒருவருக்கு அரசின் அமைச்சராக பதவி தந்தால் தென்னாபிரிக்க பணத்தில் 60 கோடி ராண்டுகள் (இந்தியா ரூபாயில் 375 கோடி) இலஞ்சமாக தருவதாக உறுதியளித்ததாக 2016-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க துணை நிதியமைச்சர் மெசெபிசி ஜோனாஸ் ( Mcebisi Jonas) குப்தா சகோதரர்கள் மீது குற்றம் சாட்டினார். இதைத்தவிர குப்தா சகோதரர்கள் மீது அரசாங்க கருவூலத்தை முறைகேடாக ஊழல் செய்து கொள்ளையடித்ததாக ஏரளமான குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.
தென்னாப்ரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் அடிப்படையில் அதுல் குப்தா 2016 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் ஏழாவது மிகப்பெரிய பணக்காரர் ஆனார். இதன் நிகர மதிப்பு R10.7 பில்லியன் (அமெரிக்க டாலர் மதிப்பில் $ 773.47 மில்லியன்).
ஜுமாவின் மனைவிகளில் ஒருவரான போங்கி என்ஜெமா-ஜுமா (Bongi Ngema-Zuma) குப்தாவின் நிறுவனங்களுள் ஒன்றான ஜே.ஐ.சி சுரங்க நிறுவனத்தில் பணியாற்றினார். ஜுமாவின் மகள் டுடுசில் ஜுமா (Duduzile Zuma) தென்னாப்பிரிக்காவில் குப்தாவின் ஆரம்ப முயற்சியான சஹாரா கம்ப்யூட்டர்ஸில் இயக்குநராக பணிபுரிந்தார். ஜுமாவின் மகன் டுடுசேன் ஜுமா (Duduzane Zuma) குப்தாவுக்குச் சொந்தமான ஒரு சில நிறுவனங்களின் இயக்குநராக இருந்தார். இப்படி ஜுமாவின் நெருங்கிய சொந்தங்களை தனது நிறுவனத்தில் இயக்குனர்களாக, பணியாளர்களாக நியமித்ததன் மூலம் ஜுமாவின் அதிகாரத்தில் மிகப்பெரிய பங்குதாரர்களாக மாறினார்கள் குப்தா சகோதரர்கள். ஜுமாவின் குடும்பத்தையும் குப்தாவின் குடும்பத்தையும் இணைத்து ‘ஜூப்டாஸ்’ (Zuptas) என்று புதிய வார்த்தை ஊடகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புழங்கியது.
2013ம் ஆண்டில் தங்களது சகோதரி மகள் திருமணத்திற்காக இந்தியாவிலிருந்து அவர்களின் உறவினர்கள் வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனிப்பட்ட விமான சேவைக்காக (Waterkloof Air Base near Pretoria) வாட்டர் குளூப் விமான தளத்தை தனிப்பட்டமுறையில் பிரத்தியேகமாக பயன்படுத்தினார்கள். இது குப்தாகேட் ஊழல் என்று தென்னாபிரிக்க ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டது.
தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா செல்லும் தென்னாப்ரிக்க விமான நிறுவனத்தின் விமானசேவை பயணத்தடத்தை முற்றிலுமாக விலக்கி அந்த தடத்தை தாங்கள் பங்குதாரராக இருக்கும் மற்ற தனியார் விமான நிறுவனங்களுக்கு வழங்கும்படியும் அப்படி வழங்கினால் பொதுத்துறை நிறுவன அமைச்சராக பதவி வழங்குவதாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வைட்ஜி மென்டர் (Vytjie Mentor) குற்றம் சாட்டினார்.
2017 ஆம் ஆண்டில் வ்ரேட் பண்ணைத் திட்டம் (Vrede farm project) என்ற குப்தா சகோதரர்களின் புதிய திட்டத்திற்காக தென்னாபிரிக்க அரசின் நிதி முறைகேடாக அதுல் குப்தாவின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக பரிமாற்றம் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டு அது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஏறத்தாழ தென்னாப்ரிக்க அரசை முழுவதுமாக மறைமுகமாக குப்தா சகோதரர்கள் கைப்பிடியில் இருந்ததாகவே தெரிகிறது. இதை குப்தா சகோதரர்களின் ஆட்சி என்றே விமர்சிக்கப்பட்டது.
ஜுமாவின் ஆட்சி நிர்வாக காலத்தில் நடந்த ஊழல்களின் மையமாக குப்தா சகோதரர்கள் இருப்பதால் ராஜேஷ் குப்தா மற்றும் அதுல் குப்தா ஆகிய இரு சகோதரர்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் எதிராக தற்போது சர்வதேச காவல்துறையான ‘இன்டர்போல்’ சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய நிலையில் குப்தா சகோதரர்களின் சொத்துக்கள் தென்னாப்பிரிக்க நீதிமன்றங்களால் முடக்கப்பட்டுள்ளன. தென்னாப்ரிக்க அரசின் பிடி இறுகியதை தொடர்ந்து குப்தா சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்கள்.
ஏன் கலவரங்கள், வன்முறை நடந்தது?
ஜுமா அதிபராக பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள தொடர்ந்து தவறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஜுமா தன்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றசாட்டுகளை மறுத்தது மட்டுமல்லாமல் சட்ட விசாரணை செயல்முறைக்கும் ஒத்துழைக்கவில்லை. ஜுமாவின்ஆதரவாளர்கள் வழக்கம்போல் அவரது தண்டனையை ரத்து செய்ய அல்லது குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்த வழக்கு விசாரணையில் ஒத்துழைக்க மறுத்ததால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை ஜுமாவின் ஆதரவாளர்கள் ஏற்காததால் கலவரங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நாடெங்கும் நிகழ்த்தப்பட்டன.

குப்தா சகோதரர்களின் மீதான வெறுப்பு அங்கு வியாபாரம் மற்றும் வர்த்தகம் செய்யும் மற்ற இந்தியர்களின் மீதான வெறுப்பாக மாறி இந்தியர்களின் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. இந்த வன்முறைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக சிறையில் ஜுமா மிகவும் சொகுசாக இருப்பதாக போலி புகைப்படங்களும், நாடெங்கும் போராட்டங்கள் நடப்பதாக போலி புகைப்படங்களும் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களால் பரப்பப்பட்டு மேலும் மேலும் வன்முறைகள் ஊக்கப்படுத்தப்பட்டன.
இதுவரை 212 நபர்கள் வன்முறையால் உயிரிழந்திருக்கின்றனர். மிகப்பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. ஒரு நாட்டையும் அரசையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஊழல் கும்பல் அந்நாட்டைவிட்டு தப்பியோடியிருக்கிறது. ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம் ஆனால் மக்கள் சக்தியே மகத்தானது. அசைக்கமுடியாத பலத்துடன் வலம் வந்த ஜுமா சிறை கம்பிகளுக்கு பின்னால், இது ஒரு படிப்பினை.