பாலஸ்தீன்

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்? பெருந்தொற்று காலத்தில் தீவிரமாகும் மோதல்கள்

ஜெருசலேம் நகரில் வழிபாட்டாளர்கள் மீது ஏவப்பட்ட வன்முறையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால்
35-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்ன நடக்கிறது ஜெருசலேமில்?

ஜெருசலேம், ஒரு நகருக்காக இந்த பூமியின் மூன்று முக்கிய மதக்குழுக்களும் தொடர்ந்தது உரிமை கொண்டாடும் நகரம். சுமார் நூறு ஆண்டுகளாக யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே கடுமையாக நடக்கக்கூடிய நேரடி மற்றும் மறைமுக மோதல்களுக்கு சாட்சியாக விளங்கும் நகரம். இஸ்லாமியர்கள், யூதர்கள், மற்றும் கிறித்துவர்கள் ஆகியோருக்கான புனித தளங்கள் நிறைந்த நகரம் ஜெருசலேம். அதனாலேயே குறிப்பிடப்பட்ட மூன்று மத நம்பிக்கையாளர்களின் உணர்ச்சிமிகு உறவுகொண்ட நம்பிக்கைகளின் மையப்பகுதியாக அது விளங்குகிறது.

கடந்த சில வாரங்களாக பழைய ஜெருசலேமின் சில பகுதிகளில் பாலஸ்தீன ஆர்பாட்டக்காரர்களுக்கும், இஸ்ரேலிய காவல்துறையினருக்கும் இடையே சில மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே இஸ்லாமியர்களின் புனித மதமான ரம்ஜான் மாதத்தில் பாலஸ்தீனியர்களின் ஒன்று கூடல்கள் மற்றும் கூட்டுத் தொழுகைகளின் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் கிழக்கு ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலிருக்கும் பாலஸ்தீனியர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு எடுத்திருப்பது சூழ்நிலையை இன்னும் இறுக்கமாகியிருக்கிறது. வலுக்கட்டாயமாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஏற்கனவே அங்கு உச்சத்திலிருக்கும் மோதல்களுக்கு இன்னும் வலுசேர்த்திருக்கின்றன.

கடந்த வாரத்தில் மே 2-ம் தேதி புனித மலையடிவாரத்தில் எதிரொலித்த கையெறிகுண்டுகளின் சத்தத்தில் நகரம் அதிர்ந்திருக்கிறது. அங்கு நடந்த மோதலில் கற்களை மட்டுமே தங்கள் ஆயுதமாகக் கொண்ட பாலஸ்தீன போராட்டக்காரர்களுக்கும், கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடிக்கச் செய்த இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

இஸ்ரேலிய ராக்கெட் தாக்குதலில் எரியும் ஜெருசலேம் நகர்
இஸ்ரேலிய ராக்கெட் தாக்குதலில் எரியும் ஜெருசலேம் நகர்

ஏன் ஜெருசலேம் சர்ச்சைகளின் மையத்திலிருக்கிறது?

முற்றிலும் முரண்பாடான இரு இனங்களின் தலைநகராக கருதப்படுவது. இஸ்ரேல் தங்களது பார்வையில் ஜெருசலேம் நகரை தங்களது ‘ஒன்றுபட்ட’ ‘நிரந்தர’ தலைநகராகக் கருதுகிறார்கள். மேலும் அவர்கள் குறிவைக்கும் பகுதியில் பழைய ஜெருசலேம் நகரும் அடக்கம். இஸ்ரேல் 1967-ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்குப் போரில் மேற்குக் கரை மற்றும் காஸாவுடன் பழைய நகரத்தை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனியர்களின் தலைநகராக செயல்படுவதால் பாலஸ்தீனியர்கள் தங்களது எதிர்கால செயல்பாடுகளுக்கு அவர்கள் இழந்த மற்ற நிலப்பகுதிகளையும் மிக முக்கியமாகக் கருதுகின்றனர். ஆனால் கிழக்கு ஜெருசலேமின் பல பகுதிகளை இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் அங்கீகாரங்களைப் பெறாமல் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

ஒவ்வொரு வருடமும் மே 9-ம் தேதி கிழக்கு ஜெருசலேம் நகரை தன்னுடன் இணைத்துக் கொண்டதன் நினைவாக ‘ஜெருசலேம் நாள்’ தினத்தை கொண்டாடுவதை இஸ்ரேல் வழக்கமாக கொண்டிருக்கிறது. இந்த நாளின் ஒரு அங்கமாக ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் குறிப்பாக யூத மத நம்பிக்கை கொண்ட இஸ்ரேலிய தேசியவாதிகள் பழைய ஜெருசலேம் நகர் வழியாக அணிவகுத்துச் செல்கிறார்கள். பழைய ஜெருசலேம் நகர் இஸ்லாமியர்களும், பாலஸ்தீன ஆதரவாளர்களும் அடர்த்தியாக வாழும் இடங்களில் ஒன்றாகும். இந்த அணிவகுப்பு அவர்களை திட்டமிட்டு கோபமூட்டும் இஸ்ரேல் அரசின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலியர்கள் திட்டமிட்டு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். ஒவ்வொரு நிகழ்வும் பல்வேறு விதங்களில் அங்கு வசிக்கும் பாலஸ்தீனியர்களுடன் சிறிய மற்றும் தீவிரமான மோதல்களுக்கு வழிவகுத்தது.

ஜோர்டான் தலைநகர் அம்மானில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடும் பெண் ஒருவரை தடுக்கும் காவல் துறையினர்

புனித மலையடிவாரம்

திங்கள்கிழமை நடந்த மோதல்கள் பழைய நகரத்தின் அல்-அக்ஸா மசூதி மற்றும் அதைச் சுற்றிலும் நடந்திருக்கின்றன. ஒரு பரந்த மேற்பாங்கான நிலப்பகுதியில் இருக்கும் இந்த மசூதி இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான தளமாகும். மேலும் இதன் குவிமாடத்தில் தங்கம் பதிக்கப்பட்டிருப்பதால் ‘கோல்டன் டோம் ஆஃப் தி ராக்’ (Golden Dome of the Rock) என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் இந்த மசூதியின் வளாகத்தை ‘உன்னதங்களின் சரணாலயம்’ (Noble Sanctuary) என்று குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு ஜெருசலேம் நகரில் இருக்கும் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமான மசூதி

அதே மலையடிவாரத்தில் இருக்கும் ‘மேற்கு சுவர்” என்றழைக்கப்படும் ஒரு சுவர் பகுதி யூதர்களுக்கு புனித இடமாகக் கருதப்படுகிறது. குன்று கோவில் (Mount Temple) என்றழைக்கப்படும் யூதர்களின் சிதிலமடைந்த கோவிலின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. பைபிளில் குறிக்கப்படும் இந்த கோவிலை ரோமானியர்கள் கி.பி 70-ம் ஆண்டில் முற்றிலுமாக அழித்திருக்கிறாரகள். அந்த அழிவின் எஞ்சிய மிச்சம்தான் இந்த மேற்கு சுவர்.

யூதர்களின் புனித தலமான ‘மேற்கு சுவர்’

இந்த இடம் தொடர்பான சர்ச்சைகள் சர்வதேச அளவில் மிகப்பெரியதாக விரிவடைந்ததைத் தொடர்ந்து இதன் எல்லையில் இருக்கும் ஜோர்டான் நாடு அதன் புனிதத் தளங்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது. தற்போது மசூதி இஸ்லாமியர்களின் சொத்து பாதுகாப்புப் பிரிவான ஜோர்டானின் வக்ப் பிரிவின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. புனித பயணம் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக அவ்வப்போது திறக்கப்படும் இந்த மசூதியில் இஸ்லாமியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே போல் ‘மேற்கு சுவர்’ பகுதியில் யூதர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மசூதியும், யூதர்களின் புனிதத் தலமான ‘மேற்கு சுவர்’ இரண்டும் அருகருகில் இருப்பதை காட்டும் படம்

சமீப காலமாக, அங்கு இஸ்ரேலிய காவல்துறையினரால் அதிக எண்ணிக்கையில் யூதமத மற்றும் தேசியவாத யூதர்களின் குழுக்கள் இந்த வளாகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்கள் 1967-ம் ஆண்டிற்குப் பிறகு இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளை மீறி பிரார்த்தனை செய்கின்றனர். யூத மதக்குழுக்கள் மற்றும் இஸ்ரேலிய தேசியவாத குழுக்கள் அங்கு அடிக்கடி வருவதும் அத்துமீறும் பிரார்த்தனை விதிகளும் பாலஸ்தீனியர்களை இயல்பாகவே ஆத்திரமூட்டுகிறது.

இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் சண்டைகள் அல்லது கடுமையான மோதல்களை தூண்டுகிறது.

சில இஸ்ரேலியர்கள் இந்த தளங்கள் அனைத்து மதநம்பிக்கையுடையோருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.இந்த கருத்தை பாலஸ்தீனியர்கள் மறுக்கிறார்கள். இப்படி திட்டமிட்டு நடத்தப்படும் நடவடிக்கைகள் மோதல்களாக மாறுமாயின் அதன் இறுதியில் இஸ்ரேல் எப்படியும் அந்த இடத்தை கையகப்படுத்தும் அல்லது பிரிக்க முயற்சிக்கும் என்று பாலஸ்தீனியர்கள் கருதுகிறார்கள். ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்போது நீடித்திருக்கும் நிலைமையை மாற்றும் எண்ணம் இல்லை என்று கூறுகிறார்கள்.

பாரபட்சமான விதிமுறைகள்

கிழக்கு ஜெருசலேமில் பிறந்த யூதர்கள் இஸ்ரேலிய குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். அங்கு வாழும் பாலஸ்தீனியர்களுக்கும் அங்கு நிரந்தர குடியுரிமை இருக்கிறது. அதேவேளையில் வேறு எங்கேனும் அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியைக் கடந்து தங்க நேர்ந்தால் அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீண்டும் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கும் உறுதியில்லாத தேர்வு செயல்முறையைக் கொண்டுள்ளது. இந்த பகுதியிலிருக்கும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை இன்றுவரை பாலஸ்தீனியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இந்த வழிமுறையை அவர்கள் ஏற்பதில்லை.

இதுவரை இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம் நகரில் ஏறத்தாழ 2,20,000 மக்கள் வாழக்கூடிய வீடுகளை கட்டி யூதக் குடியேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி திட்டமிட்டு அதிகரிக்கப்படும் யூத மக்கள்தொகை ஏற்கனவே அங்கு பெருமளவில் வாழக்கூடிய பாலஸ்தீனியர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நெருக்கடியான இந்த மக்கள் தொகைப் பெருக்கத்தில் இடமில்லாமல் மிகமிக நெருக்கமாக அங்கீகாரம் பெறாத ஏராளமான வீடுகளைக் கட்டியிருப்பதால் அவற்றில் பெரும்பாலானவை இடிபடும் நிலையை எதிர்நோக்கியிருக்கின்றன.

இஸ்ரேலிய மனித உரிமைகள் குழுவான B’Tselem மற்றும் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை கிழக்கு ஜெருசலேமில் நிலவும் பாரபட்சமான கொள்கைகளை மேற்கோள் காட்டி இனவெறி குற்றத்தில் இஸ்ரேல் குற்றவாளி என்று வாதிட்டன. ஆனால் இஸ்ரேல் அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து ஜெருசலேம் நகரில் வாழ்பவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறது.

பாலஸ்தீனியர்களை வெளிவேற்றுவது

அண்மையில் நடந்த சில இரவு மோதல்கள் ரமலானின் தொடக்கத்தில் தொடங்கியது. இஸ்ரேலிய காவல்துறையினர் பழைய ஜெருசலேம் நகரின் டமாஸ்கஸ் வாயிலுக்கு (Damascus Gate) வெளியே தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்த இடம் புனித ரமலான் மாதத்தில் விடியற்காலை முதல் மாலை வரை இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றபின் மாலை தொழுகைக்குப் பின் ஒன்றுகூடும் பிரபலமான இடம். இதன் பின்பு எழுந்த எதிர்ப்புகளுக்குப் பின்னர் அவர்கள் தடைகளை அகற்றினர். ஆனால் பின்னர் கிழக்கு ஜெருசலேம் நகரின் புறநகரான ஷேக் ஜர்ரா (Sheikh Jarrah)விலிருந்து ஏராளமான பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்றபடப்போவதாக அச்சுறுத்தப்பட்டதால் பதட்டம் அதிகரித்திருக்கிறது.

பழைய ஜெருசலேம் நகரத்திற்கு வெளியே நெரிசலான பாலஸ்தீனிய சுற்றுப்புறங்களில் பாலஸ்தீனியர்களின் சொத்துக்களைப் அபகரிக்கும் நோக்கில் அங்கு குடியேறிய யூத கருத்தியல் கொண்ட குடியேற்றக்காரர்களுடன் பாலஸ்தீனியர்களின் குடும்பங்கள் நீண்ட சட்டப் போரில் சிக்கியுள்ளன. இஸ்ரேல் இதை ஒரு தனியார் நில உரிமையாளர்களின் தகராறு என்று சித்தரிக்கிறது. ஆனால் பாலஸ்தீனிய குடும்பங்களின் நிலை உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நீண்டகாலமாக தொடரும் சர்ச்சைகள்

ஜெருசலேமில் குறிப்பாக அல்-அக்ஸாவில் நடந்த மோதல்கள் பெரும்பாலும் இப்பகுதி முழுவதும் எதிரொலிக்கின்றன.

காசாவை ஆட்சி செய்யும் பாலஸ்தீனிய போராளிக்குழு ஹமாஸ், அல்-அக்ஸாவுக்கு வந்த இஸ்ரேலிய அரசியல்வாதியின் வருகையால் 2000-ம் வருடத்தில் ஏற்பட்ட எழுச்சியான ‘இன்டிபாடா’ (intifada) போன்ற எழுச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. காஸா போராளிகள் தங்களுக்கு கிடைத்த சாதனங்களுடன் ராக்கெட்டுகள் மற்றும் பலூன்களை வீசியுள்ளனர். இஸ்ரேலுடன் முறைசாரா போர்நிறுத்தத்தை இதுவரை பேணிய இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இப்போது களமிறங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும், இஸ்ரேலுக்குள் உள்ள அரபு சமூகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் மேற்குக் கரையில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு அங்கு மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *