விவசாயி ஓ.என்.ஜி.சி

திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் இருக்கிற எருகாட்டூர் கிராமத்தில் தனசேகரன் என்கிற விவசாயியின் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி (ONGC) எரிவாயு குழாய் வெடித்து விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது.

இந்த வருடம் சம்பா சாகுபடிக்கு பயிர் செய்திருந்த விளைநிலம் இன்று இந்த கச்சா எண்ணெய் கசிவினால் வீணாகியுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த விபத்தை இன்று காலை வரை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் பார்வையிடவில்லை என்கிற காரணத்தால் அந்த விவசாயி இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். 

விளைநிலங்களில் வெளியேறியுள்ள எண்ணெய்/ வீடியோ: நன்றி – வரதராஜன்

இதே விவசாயியின் விளைநிலத்தில் கடந்த வருடமும் இதேபோன்று எண்ணெய் குழாய் வெடித்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. அப்பொழுது அவர் கிட்டத்தட்ட  3-4 லட்சம் ரூபாய் அளவிற்கு பணம் செலவழிக்க வேண்டி இருந்திருக்கிறது. ஏனென்றால் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் அந்த இழப்புக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு பாதிக்கபட்ட விளைநிலத்தை சரிசெய்ய எந்த பணமும் கொடுக்கவில்லை என தெரிகிறது. 

பாதிக்கப்பட்ட விவசாயி தனசேகர்/ வீடியோ: நன்றி – வரதராஜன்

உயிரோட்டமான மண் என்பது 4 முதல் 5 அடுக்குகளில் தான் இருக்கும். (இந்த மண் இது போன்ற பாதிப்பிற்கு உள்ளானால் மீண்டும் விவசாயம் செய்யமுடியாத மண்ணாகிவிடும்). இதன் காரணத்தால் அந்த விவசாயி தன் சொந்த செலவில் மேல் மண்ணை முழுவதும் வெட்டி அப்புறப்படுத்திவிட்டு புது மண்ணைப் போட்டு விவசாயத்தை தொடர்ந்து வந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அந்த விவசாயி பாதிக்கப்பட்டுள்ளார். 

10 ஆண்டுகளாக நடக்கும் வெடிப்பு சம்பவங்கள்

இதே பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும் வெள்ளகுடி, கமலாபுறம், பெருங்குடி போன்ற அருகாமை கிராமங்கள் உட்பட டெல்டா பகுதிகள் முழுவதிலுமே இது போன்ற பல வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற பல்வேறு இடங்களில் எண்ணெய் குழாய் வெடிப்பு விபத்துகள் டெல்டா பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் படலமானது உடலில் படும்போது எரிச்சல், அரிப்பு போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், வயல்களில் வாழும் நண்டு போன்ற உயிரினங்களும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டு இறப்பதாகவும் தெரிகிறது.

காலாவதியான குழாய்களே விபத்திற்குக் காரணம்

இது குறித்து மெட்ராஸ் ரேடிகல்ஸ் (Madras Radicals) இணையதளத்திடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ’நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், ”இரவில் இருந்து எந்த அதிகாரிகளும் இங்கு வரவில்லை. பகலில் வந்த அதிகாரிகளும் மேல் மண்ணை மாற்றுவதற்கான மண் எங்கிருந்து பெறப்பட்டது, யாரிடம் அனுமதி பெறப்பட்டது போன்ற கேள்விகளை கேட்டு விவசாயியைத்தான் முதலில் மிரட்டினர். தற்போது 75,000 பணம் தருவதாக சமாதானம் பேசமுற்பட்டிருக்கிறார்கள். பாதிக்கபட்ட விவசாயி ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்.” என்று தெரிவித்தார்.

ஜி.வி.வரதராஜன்

மேலும் அவர், இது போன்ற விபத்துகள் தொடர்வதற்கு, நிலத்திற்கு அடியில் போடப்பட்டிருக்கும் குழாய்கள் காலாவதியாகி விட்டதும், அவை உரிய நேரத்தில் மாற்றபடாததும் தான் காரணம் என்று தெரிவித்தார். இந்த எண்ணெய் ஒரு முறை விளைநிலத்தில் பரவிவிட்டால் நிலம் விளையும் தன்மையை முற்றிலும் இழந்து விடும் அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் தன்மை உள்ளமையால் இந்த விபத்ததை நாம் சாதாரணமாக கடந்து செல்ல இயலாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வரதராஜன், இது போன்ற தொடர்ச்சியான விபத்துகளால் பல இடங்கள் பாலை நிலத்தைப் போன்று விளையாத நிலங்களாக மாறி வருவதகாவும் தெரிவித்தார். 

ஒவ்வொரு வருடமும் தொடரப் போகும் இந்த விபத்துகளுக்கு யார் இழப்பீடு கொடுப்பது என்பதும், பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் தொடர் நடவடிக்கைக்கான திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கிடப்பில் கிடக்கும் வேளாண் மண்டல அறிவிப்பு

தொடர்ந்து பேசிய வரதராஜன், ”பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் தங்கள் போக்கிற்கு ரிக் அமைத்து எண்ணெய் எடுக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இது போன்ற சூழலியலை நாசம் செய்கிற, விளைநிலத்தை நாசம் செய்கிற திட்டங்களிலிருந்து  பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்றார். 

”இது போன்ற விளை நிலத்திற்கு கீழ் இருக்கும் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். குழாய்கள் அமைந்திருந்த பகுதியிலிருந்து மேல் மண் வரை உள்ள மண்பகுதியை மாற்றித்தர வேண்டும். அதற்குமுன் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடித் தீர்வாக விரைவாக இழப்பீடு வழங்க வழிசெய்ய வேண்டும். மேலும் இந்த மண்ணையும் குடி நீரையும் நாசம் செய்கிற இது போன்ற நச்சுத் திட்டங்களையும், எரிவாயு நிறுவனங்களையும் டெல்டா பகுதிகளிலிருந்து வெளியேற்ற வேண்டும்.” என்ற கோரிக்கைகளை வரதராஜன் முன்வைத்தார்.

”பெரிய அளவில் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயியின் நிலத்தில் இது போன்ற விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தை ஒதுக்கிவிட்டு மற்ற இடங்களில் விவசாயத்தை தொடர முடியும். ஆனால் 1 ஏக்கர் 2 ஏக்கர் மட்டுமே வைத்து இருக்கும் விவசாயிகளின் நிலைமை தான் கவலைக்குரியது. அவர் அந்த விளைநிலத்தை விட்டு வெளியேறி கூலித் தொழிலாளியாக வேறு இடத்திற்கு இடம் பெயர வேண்டிய துயரநிலை ஏற்படும்” என்று வேதனையுடன் முடித்தார்.

எண்ணெய்க் குழாய்களின் வெடிப்பில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வுக்கு தமிழக அரசு தீர்வினைக் கொடுக்க முன்வருமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *