கடந்த வியாழக்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டத்தின் (Port City Economic Commission Act) மூலம் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் அதிகாரத்திற்குட்பட்ட பிராந்தியமாக மாற்றப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் மூலம் இலங்கையில் ஹம்பந்தோட்டாவிற்கு அடுத்தபடியாக கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட உள்ளது.
சிறப்பு கடவுச் சீட்டு, யுவான் பணப்பரிமாற்றம்
இந்த சீனக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தனிச் சிறப்பு கடவுச் சீட்டு (Special Passport) அவசியமாகும் என தெரிவிக்கப்படுகிறது. இன்னும் இதனை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மேலும் இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் சீன யுவான் பணப்பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சட்டத்தின் வாயிலாக அமைக்கப்பட இருக்கிற துறைமுக நகர பொருளாதார ஆணையம் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையின் மூலம் நடக்கும் வணிகத்தை நிர்வகிக்கும்.
இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா
இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இச்சட்டம் இலங்கை இறையாண்மைக்கு எதிரானது என குறிப்பிட்டு எதிர்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. நீதிமன்றமானது குறிப்பிட்ட மசோதாவின் மீது சில திருத்தங்களைக் பரிந்துரைத்தது. நீதிமன்றப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு திருத்தப்பட்ட மசோதா கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், பெரும்பான்மையாக 149 உறுப்பினர்கள் இம்மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர்; இதன் மூலம் துறைமுக நகர பொருளாதார ஆணைய மசோதா சட்டமானது.
இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜேவிபி உள்ளிட்ட எதிர்கட்சிகள், ‘இது இலங்கை இறையாண்மைக்கு முற்றிலும் எதிரானது மற்றும் சீனப் பிராந்தியமாக மாற்றக்கூடிய நடவடிக்கையாகும்’ எனக் குறிப்பிட்டனர். மேலும் இச்சட்டமானது சீனாவிற்கு இலங்கை பாராளுமன்ற, அரசியலமைப்பைக் கடந்த அதிகாரத்தை தருவதாகக் குறிப்பிட்டனர்.
கொழும்பு துறைமுக நகரமானது 269 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. 2014-ம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற சீன அதிபர் ஜின் பிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மதிப்பு 140 கோடி அமெரிக்க டாலர்களாகும். துறைமுகங்களை இணைக்கும் சீனாவின் முத்துமாலை திட்டத்தில் ஹம்பந்தோட்டா ‘கொழும்பு துறைமுக நகரமும்’ ஒன்றாகும்.

இலங்கை தெற்காசியாவின் பொருளாதார மையமாக மாறுவதாகக் கூறும் ராஜபக்சே
இத்திட்டம் பற்றி கூறிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே (சீனாவின் சிறப்பு அதிகாரத்திற்குட்பட்ட), ”இத்திட்டத்தின் மூலம் இலங்கையின் தலைநகரம் தெற்காசியாவின் பொருளாதார மையமாக மாற இருக்கிறது” என்றார். இத்திட்டத்தின் விற்பனை மற்றும் விளம்பர இயக்குநர் யமுனா ஜெயரத்னே, ”உலக வர்த்தகத்தின் மிக முக்கியமான புவியியல் அமைவிடத்தைக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கையானது ஹாங்காங் மற்றும் துபாய் வணிக மையங்களைக் காட்டிலும் பல வணிக சாதக அம்சங்களை அனுபவித்து வருவதாகக்” கூறினார்.
சீன-அமெரிக்க போட்டி
உலக புவிசார் அரசியலில் மிக முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திட்டமாக இத்திட்டம் அமைந்திருக்கிறது. இப்பிராந்தியத்தின் மீதான மேலாதிக்கத்திற்காகத் தான் இத்தீவில் வாழ்ந்த தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். தமிழினப்படுகொலைக்குப் பின்னர் சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான இப்பிராந்திய மேலாதிக்கப் போட்டியில் இலங்கைத் தீவின் நிலப்பகுதி தற்போது சீனாவின் அதிகாரத்திற்குட்பட்ட பிராந்தியமாக மாறியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே தீவிரமடைந்திருக்கும் ‘இந்தோ-பசுபிக் கடற் பிராந்தியத்தின் மீதான’ மேலாதிக்கப் போட்டியில் இலங்கைத் தீவின் மீதான சீனாவின் அதிகார நிலைநிறுத்தல், இப்பிராந்தியத்தில் தமிழர்களின் இருத்தலை மேலும் பிரச்சனைக்குள்ளாக்கும்.
புவிசார் அரசியல் ஒழுங்கை பிரச்சினைக்குரியதாய் மாற்றுகிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இது குறித்து, குறிப்பிட்ட துறைமுக நகர பொருளாதார ஆணைய மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ”தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை இறையாண்மையின் பேரில் மறுத்த இலங்கை அரசு, (தற்போது இலங்கை இறையாண்மைக்கு எதிராக) சீனாவை அனுமதிக்கிறது. இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் இடைக்கால சுயாட்சியை ஒரு காகித ஆவணமாகக் கூட ஏற்க மறுத்தீர்கள். ஒரு இடைக்கால ஏற்பாடென்றாலும், அதனை மறுத்தீர்கள். தமிழ் மக்களின் சுயாட்சி உணர்வுக்காக நீங்கள் அவர்களை அழித்தீர்கள், இனப்படுகொலை செய்தீர்கள். தற்போது எவ்வித சங்கடமுமின்றி, தயக்கமின்றி அத்தகையதொரு வேலையை வேறொரு காரணத்திற்காக செய்கிறீர்கள்; உலக வல்லரசுகளின் (பிராந்திய மேலாதிக்க போட்டி) நலனுக்காக செய்கிறீர்கள்” எனப் பேசினார்.
மேலும் அவர், ”(அமெரிக்க-ரஷ்யப் பனிப்போர் நிலவிய) கடந்த காலத்தின் அமெரிக்க ஆதரவான இலங்கை அரசின் நிலைப்பாட்டின் காரணமாக தமிழர்களின் தேசம் பெரும் விலை கொடுக்க நேர்ந்தது. தற்போது ராஜபக்சேவினுடைய ’சீன-மைய’ ஆட்சியானது இப்பிராந்திய புவிசார் அரசியல் ஒழுங்கை மீண்டும் பிரச்சனைக்குரியதாக மாற்றுகிறது’” என்றார்.
இந்தோ-பசுபிக் கடற் பிராந்திய மேலாதிக்கப் போட்டியில் சீனாவால் இலங்கைத் தீவில் வாழும் தமிழீழத் தமிழர்களும், அமெரிக்கத் தலைமையிலான QUADல் இடம்பெற்றிருக்கும் இந்தியாவால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் புவிசார் அரசியலின் நெருக்கடியை எதிர் நோக்கவுள்ளனர்.