ஐந்து இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தரப்படவேண்டும். இதுவன்றி ஒரு இலட்சத்து ஐம்பதாயிம் பேரை இந்தியாவும் இலங்கையும் சமமாகப் பிரித்துக் கொண்டு குடியுரிமை தரப்பட வேண்டும். இரத்தமும் சதையும் உணர்வுமாக, இயற்கை ஜீவிகளாக வாழ்ந்த மானுட இனம் வெறும் எண்களாக மட்டுமே எஞ்சிய துயர நாட்கள் அவை.
அவர்கள் ஒரு நூற்றாண்டின் முன்பு பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்தால் தேயிலைத் தோட்டங்களிலும் துப்புரவுத் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு, காலமாற்றத்தில் மலையக மக்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
காலனியவாதிகளால், இந்திய இலங்கை அரசுகளால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்.
எழுபதுகளில் மலையகத் தமிழர்களின் நிலை
எழுபதுகளில் இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சார்ந்த ஊட்டியிலும் தேயிலையும் காப்பியும் விளைகிற கோத்தகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களிலும் குடியமர்த்தப்படுகிறார்கள்.
இவர்களில் சிறுபகுதியினர் நான் வாழ்கிற இடத்திலிருந்து குறுந்தொலைவில் ஹோப் காலேஜ் எனும் இடம் தாண்டி ஒதுக்குப்புறமான இடத்தில் குடியமர்கிறார்கள்.
இலங்கையில் இந்தியப் பூர்வீகத் தமிழர் என விரட்டப்பட்ட இவர்கள் தமிழகத்தில் சிலோன் தமிழர் எனும் அடையாளம் இடப்பட்டு ஊர்களின், நகர்களின் ஒதுக்குப் புறத்தில் காலனி என அழைக்கப்பட்ட இடங்களில் வாழலாயினர்.
இந்திய தமிழக சாதி அடுக்கில் காலனி என்பது தலித் மக்கள் வாழும் குடியிருப்புகள். மலையகத் தமிழர் அல்லது அல்லது சிலோன் தமிழர் அல்லது நாடு திரும்பிய பூர்வீக இந்தியத் தமிழர் இவ்வாறுதான் ஓரநிலை மக்களாக இந்திய அரசினால் நடத்தப்படலாயினர்.
எனக்கு கிடைத்த வாசிப்பு
பள்ளிப் படிப்பு முடித்த பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலில் ஈடுபட்ட எழுபதுகளின் நாட்களில் ஒன்றில்தான் சிலோன் தமிழர் குடியிருப்புக்குச் செல்ல நேர்ந்தது. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த எம் போன்றோர்க்கு மலையகத் தமிழர் பற்றிய எமது அறிதலின் முதல் பதிவாக பொன்விலங்கு-குறிஞ்சி மலர் போன்ற நாவல்களை எழுதிய நா.பார்த்தசாரதியின் மேகங்கள் மூடிய அந்த மலைகளின் பின்னால் எனும் குறுநாவல் அமைந்தது.
எண்பதுகளின் ஈழ விடுதலைப் போராட்ட ஊழி தமிழகத்தின் சிற்றூர்கள், பெருநகர்களைப் புரட்டிப்போட்டது. இலங்கை வாழ் வட கிழக்குத் தமிழர்-மலையகத் தமிழர்-கொழும்புத் தமிழர் என மூவகைத் தமிழர்கள் பற்றிய வாசிப்பு என்பது எமக்கு அப்போதுதான் துவங்குகிறது.
ஈழப் போராட்ட இயக்கங்களில் மலையகத் தமிழர் குறித்த ஒரு முழுமையான நூலை மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற இயக்கமான ஈரோஸ் அன்று தமிழகத்தில் போராட்டத்தின ஆதரவாளர்களிடையே விநியோகித்தது.
பிற்பாடுதான் பி.ஏ.காதரின் நூல், தமிழோவியன் கவிதைகள், ஏ.சிவானந்தனின் நாவல், மு.நித்தியானந்தனின் நூல் போன்றவற்றைப் படிக்க நேர்ந்தது. அந்த நூல்களின் தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் மலையகம் குறித்த ஆய்வு நூலான சரவணனின் கள்ளத்தோணி.
ஆதி முதல் சமகாலம் வரை சொல்லும் கள்ளத்தோணி
சரவணனின் நூல் மலையகத்தின் நூற்றைம்பைது ஆண்டுகால வரலாற்றை ஆதி துவங்கி சமகாலம் வரை தொகுத்துத் தருகிறது.
ஒரு நூலில் வாசகனுக்கு அறிந்துகொள்ள என்ன இருக்கிறது, அதிலிருந்து அவன் என்ன கற்றான் என்பதுதான் அவனது அறுதித் தேர்வாக இருக்கும். 254 பக்கங்களில் அணிந்துரையையும் முன்னுரையையும் விட்டுவிட்டால் நூலில் 23 கட்டுரைகள் இருக்கின்றன.
கட்டுரைகளின் அடிநாதமாக நடந்து முடிந்து சிங்கள பௌத்தப் பெருந்தேசிய அரசினால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தமிழர் போராட்டத்தில், வடகிழக்கு, மலையகம், கொழும்பு என முத்தரப்புத் தமிழரிடமும் இருந்திருக்க வேண்டிய புரிந்துணர்வு, ஒற்றுமை போன்றவற்றை அவாவும் கட்டுரைகள் அது இல்லாமல் போனதற்கான பிராந்திய, வரலாற்று, அரசியல் தனித்தன்மை சார்ந்த விஷங்களையும் அலசுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தவிர, பின்வந்த இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் எவ்வாறு தமது சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்தார்கள் எனும் வரலாற்றைத் தரவுகளுடன் நிறுவுகிறது.
காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டமைத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாகக் கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.
துவக்கத்தில் மலையகத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடு காட்டிய வடகிழக்குத் தமிழ்த் தலைவர்கள் எவ்வாறு பிற்காலத்தில் சிங்கள அரசின் சேவகர்களாக மாறி அவர்களைக் கைவிட்டார்கள் என்பதையும் பேசுகின்றன.
மேலே சொன்ன தரவுகள் யாவும் இன்று மலையகம் தொடர்பாக எழுதப்படும் வரலாற்று நூல்களில் இருந்து பொதுவாகவே நாம் தொகுத்துக் கொள்ள முடிகிறவைதான்.
கள்ளத்தோணியின் சிறப்பம்சம்
இந்த நூலின் குறிப்பான சிறப்பம்சமாக நான் காண்பது இனவாதம் என்பதையும் தாண்டி மலையகத் தமிழர் பிரச்சினையில் இருக்கிற சாதி சார்ந்த தரவுகளையும் அது சார்ந்த ஒப்பீட்டு ரீதியிலான தமிழர் அரசியலையும் பேசும் கட்டுரைகளை இந்த நூல் கொண்டிருக்கிறது என்பதுதான்.
மலையகத் தமிழரில் 80 சதவீதமானவர்கள் தலித்துகள்தான். 20 சதவீதமானவர்கள் சமஸ்கிருதமயமாதலை வாழ்முறையாக் தேர்ந்த இடைநிலைச் சாதியினர். தமிழகச் சாதியப் படிநிலையில் நிலவுகிற முரண்கள், அதிகார மனநிலைகள் அண்மைக்காலத்தில் மலையகத்தில் வேகம் பெற்றிப்பதை குறிப்பாக இந்நூல் தரவுகளுடன் சுட்டுகிறது.
ஈழத்திலும் தமிழகத்திலும் இப்போது முனைப்புப் பெந்றிருக்கும் சைவ- பார்ப்பனிய, இந்துத்துவ அரசியல் கூட்டுடன் இணைவைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இது.
வரலாற்றை இடதுசாரி நோக்கில் இருந்து அணுகுபவனாக எனக்குப் புதியன கற்பதாகவும் மகிழ்வு தரக்க்கூடியதாவும் இருந்த கட்டுரைகள் நாடு, இன, மத, நிற, சாதிய மனநிலை தாண்டிய உன்னதமான சில மனிதர்கள் குறித்த கட்டுரைகள்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து இலங்கை வந்து மலையகத் தமிழர் வாழ்வு மேம்பாட்டுக்குத் தம்மை ஒப்புவித்துக் கொண்ட நடேசய்யர் தம்பதிகள், இங்கிலாந்தில பிறந்து ஆஸ்திரேலியா வழி மலையகம் வந்து ஒரு சாகசவாதியாக வாழ்ந்து மலையகத் தமிழரின் போராட்டங்களில் பங்கு கொண்ட மார்க் அந்தோனி பர்ஸ்கேடல் போன்றவர்கள் பற்றிய கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட கட்டுரைகள்.
எந்த உரிமைப் போராட்டமும் மிகச் சாதரணமான மனிதர்களின் அசாரணமான தருணத்தில் நிகழும் உயிரீகத்தினால்தான் அதன் கொதிநிலையை அடைகின்றன. அப்படியான ஒரு மாமனிதன் பற்றிய எழுத்து மலையகத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் தியாகியான முல்லோயா கோவிந்தன் பற்றிய உணர்ச்சிகரமான கட்டுரை.
இரண்டு பிரச்சினைகள்
இறுதியாக இரண்டு பிரச்சினைகள். ஒன்று இனவாதத்தைக் கடக்க முடியாத வர்க்கப் பிரக்ஞையின் வரலாறாகவே இலங்கை இடதுசாரிகளின் வரலாறு இருக்கிறது என்பதை இடதுசாரிக் கட்சிகளின் தளும்பல்களை முன்வைத்து இந்நூல் சுட்டிச்செல்கிறது.
பிறிதொன்று, நூலின் அரசியல் தொனியின் நீட்சியாக சுய அனுபவத்தில் இருந்து தலித்தாகத் தானும் தலித் அல்லாத இடதுசாரிகளும் தமது அன்றாடத்தில் சாதிகடந்த பிரக்ஞை நோக்கி நகர்வதை மிகுந்த வலியுடன் நூலின் இறுதி மூன்று கட்டுரைகள் பேசுகின்றன.
இந்த நூலின் இருவகைப் பண்புகளில் ஒன்று ஆய்வுகளைத் தொகுத்துத் தரும் பண்பு. மலையக வரலாறு குறித்த கட்டுரைகள் அந்தப் பண்பு கொண்டன. பிறிதொன்று நிலவும் வரலாறாக ஆய்வுகள் குறித்த மறுஆய்வு. வரலாற்றின் பின்னிப் பிணைந்துள்ள, அதிகம் பேசப்படாத விஷயங்களை முக்கியத்துவப்படுத்தி நுணுகிச்சென்று பேசுபவை இவை. சாதியம். இடதுசாரிகள், உன்னதமான போராளிகள் பற்றியது அக்கட்டுரைகள்.
மலையகம் குறித்த பிரச்சினைகளை ஆதி அந்தமாக அலசும் ஒரு நூல் என சரவணனின் கள்ளத்தோணி நூலைச் சொல்வேன்.
– யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன் அவர்கள் தமிழ்ச் சூழலில் அரசியல் கோட்பாடு, திரைப்படங்கள், இலக்கியம், மொழிப்பெயர்ப்பு என பன்முக அடையாளத்துடன் பல்வேறு நூல்களை எழுதியுள்ள குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார்.
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)