அசோசியேட் பிரஸ்
செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர்கள் தார் யாசின், முக்தார் கான், சன்னி ஆனந்த்
ஆகிய மூவருக்கு காஷ்மீரில் நடந்த ஒடுக்குமுறை குறித்த புகைப்படங்களை எடுத்ததற்காக இந்த
ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
புலிட்சர் விருது
என்பது பத்திரிக்கை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்காற்றி வருபவர்களுக்கு
அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 21 பிரிவுகளின்
கீழ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்படும். இந்த முறை கொரோனா
தொற்றின் காரணமாக இணையதளத்தில் ஒரு காணொளி வழியாக இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் நின்று அம்மக்களின் வலிகளை வெளிக்கொண்டு வந்ததற்காக
மூன்று புகைப்படவியலாளர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின்
அவலத்தைப் பேசிய படங்கள்:
கடந்த 2019ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் பாஜக அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்த காலம் தொட்டு
காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு தன்னாட்சி உரிமையான பிரிவு 370-ஐ துப்பாக்கி முனையில்
நீக்கியது. இதன் காரணமாக காஷ்மீரின் சுயாட்சி உரிமை பறிபோனதுடன், எவர் வேண்டுமானாலும்
காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்றொரு நடைமுறையையும் வந்தது.
இது காஷ்மீர்
மக்கள் மத்தியில் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இந்திய அரசாங்கம் காஷ்மீர் மக்களின்
முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னாள் முதல்வர், செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோரை
கைது செய்தது. தொலைக்காட்சி இணைப்புகள், தொலைபேசி சேவைகள், இணையதளம் என அனைத்தும் முடக்கப்பட்டன.
மாதக்கணக்கில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீதிகள் முழுதும் அரசின் ஆயுதப்
படையினர் குவிக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் கூட பல்வேறு தடுப்புக் காவல் சட்டங்களில்
கைது செய்யப்படுகிறார்கள்.
ஆனாலும் காஷ்மீரிகள்
போராடித்தான் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழல்களுக்கு மத்தியில் பல கடினமான சவால்களை
எதிர்கொண்டு காஷ்மீரிகள் மீதான அடக்குமுறையையும், அவர்களின் போராட்டங்களையும் உயிர்ப்புத்
தன்மையுடன் புகைப்படங்களாக வெளிக்கொண்டு வந்தன இந்த மூன்று புகைப்படவியலாளர்களும்.
மேலும் கடந்த
2019 பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதல் நடைபெற்ற போதும் பல்வேறு பகுதிகளில் காஷ்மீர்
மக்கள் ஆயுதப்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். அதனையும் இவர்கள் புகைப்படக்
கருவியின் வழியே பதிவாக்கியிருக்கிறார்கள்.
அவர்களின் புகைப்படங்கள்
ஒவ்வொன்றும் பல கதைகளை, வலிகளை மக்களிடம் உரையாடுகிறது. அடைக்கப்பட்ட சாலைகள், போராடும்
மக்கள், ஆயுதப் படைகள் இவற்றுக்கிடையில் மக்களின் வாழ்க்கை நிலை என அனைத்தையும் அப்புகைப்படங்கள்
பேசுகின்றன. பல ஆபத்தான நிலைகளில் மிகத் துணிவுடன் இப்புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.