இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்

ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்

எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்படுத்திய முழுமையற்ற முரண்பாடான கருத்துக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ”இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்” என்ற தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்களின் கருத்துக்க்ள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூலை யமுனா ராஜேந்திரன் மற்றும் பா.பிரபாகரன் ஆகியோர் தொகுத்துள்ளனர்.

பொதியவெற்பன், சுகுணாதிவாகர், பா.பிரபாகரன், யமுனா ராஜேந்திரன், அரவிந்தன் சிவக்குமார், கௌதம சித்தார்த்தன், ராஜகோபால் சுப்ரமணியம், புலியூர் முருகேசன், விலாசினி, முத்துமோகன், சு.வெங்கடேசன், மேலாண்மை பொன்னுசாமி, க.காமராசன், ராஜ்தேவ், ஸ்டாலின் பெலிக்ஸ், தமிழ்நதி, மோகன் ராஜேந்திரன், மகேஷ் ராமநாதன், ரவீந்திரன், ஜமாலன், ராஜநாயகம், ஜோதிகுமார் போன்ற மிக முக்கியமான எழுத்தாளர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.

வெளியீடு: கருப்பு பதிப்பகம்; விலை ரூ: 760 ;
எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக புத்தகம் தீரும் வரை 20% கழிவு விலையில் புத்தகம் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
புத்தகத்தை பெற: 9840644916

ஆர்.எஸ்.எஸ் இந்தத்துவா பாசிஸ்டு மீதான அன்பு, வைதீக மரபுகளை பாதுகாக்கம் பொருட்டு கட்டியமைக்கப்படும் சிந்தனைத் தொகுப்பு, படைப்புகளினுடாக விதைக்கப்படும் வெறுப்பரசியல், சனாதனத்தை பாதுகாக்கும் பொருட்டு பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தின் மீது வாரி இரைக்கப்படும் அவதூறு, அத்தோடு ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் உள்நோக்கம் என ஜெயமோகன் எழுத்துக்களில் உள்ள மைய விழிப்பை வெளிப்படையாக இந்த கட்டுரைகள் பேசுகிறது. செய்தித்தாள் கூட படிக்க மறுக்கும் தீராத இலக்கிய வாசகர்கள் இந்த கட்டுரைகளை திறந்த மனதுடன் வாசிப்பது நல்லது. 

இந்த கட்டுரைத் தொகுப்பில் முறியடிக்கப்படும்  சில  அரசியல் பொய் பிரச்சாரங்கள்:

காந்தி கொலை

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் காந்தியின் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று எழுதியுள்ள ஜெயமோகனின் கருத்து உண்மையா? ரஜ்னீஷ் குமார், துஷார் காந்தி போன்றவர்களின் ஆய்வுக் கருத்துக்களை முன்வைத்து, காந்தி கொலை வழக்கை நடத்தியவர்களின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து ஜெயமோகனின் வாதம் முறியடிக்கப்படுகிறது. 

பெரியார் 

வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்கு எந்த பங்கும் இல்லை என்றும், கைது செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர் மட்டுமே என்றும், அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு அரசியலில் பெரியார் முக்கியமானவராக கருதப்பட்டவர் இல்லை என்றும், கேரளத்தில் பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்களித்தாக எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் பெரியார் குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஜெயமோகன் முன்வைக்கும் கருத்துகள் தகுந்த வரலாற்று சான்றுகளுடன் முறியடிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர்

இந்திய தலித்துகள் அனைவருக்கும் அம்பேத்கர் தலைவர் அல்ல; அவருடைய அரசியல் வெற்றி பெற்றதே இல்லை; மகர் சாதியைத் தாண்டி அவருடைய அரசியல் விரிவடையவில்லை; மேலும் மகர்களைத் தாண்டி அவருக்கு  ஆதரவு கிடையாது; புனே ஒப்பந்தம் நடந்தபோது அம்பேத்கர் மட்டும்  தலித்துகளின் ஒரே பிரதிநிதி அல்ல; அவர் இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை நேரில் சந்திக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை; அவர் எந்த போராட்டத்தையும் முன்னெடுத்ததில்லை; அவர் மக்கள் தலைவரே கிடையாது; அவர் பிரிட்டிஷாரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார்; அம்பேத்கர் இந்து என்ற உணர்வு இருந்ததால்தான் இந்து சட்டத்தை மறுஅமைப்பு செய்தார் என்றெல்லாம் அம்பேத்கர் மீது ஜெயமோகன் முன்வைக்கும் ஆதாரமற்ற கருத்துக்கள் தகுந்த வரலாற்று ஆதாரங்களுடன் உடைக்கப்பட்டுள்ளது.

மார்க்ஸ் 

காரல் மார்க்சின் வீட்டு பணிப் பெண்ணாகவும், குடும்பத்தில் ஒருவராகவும் இருந்த ஹெலன் டெமுத்துக்கும் மார்ஸ்க்கும் இருந்த உறவு பற்றியும், லெனின் மற்றும் ஸ்டாலின் குறித்தும் பின்வருமாறு தனது புனைவில் நஞ்சை விதைக்கிறார்  ஜெயமோகன்.

”ஹெலன்  டெமூத்தை படுக்கை அறைக்குப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த மார்க்சுக்கு ஜென்னி மீது என்ன மரியாதை இருந்திருக்க முடியும்? பிரெஞ்சுக் காதலிக்காக குரூப்ஸ்கயாவை துரத்திவிடத் தயாராக இருந்த லெனினுக்கு பெண்கள் மாற்றி அணியும் உடை அன்றி வேறு என்ன? ஸ்டாலின் தனது மனைவியைக் கொன்றவர்”  

மார்சியம் குறித்து எந்த விதமான அடிப்படை வாசிப்பும் புரிதலும் இல்லாமல், மார்க்சிய தலைவர்களின் மீது வாரியிறைக்கப்படும் பொய்கள்,  ஆயிரக்கணக்கான பக்கங்கள் வாசிக்கப்பட்டு ஆதாரம் திரட்டப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

தமீழீழ அரசியல்

இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் தமிழர்களை கொலை செய்து, தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி தூக்கிவீசிய இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை மூடி மறைத்து மாற்றுப் பிரச்சாரத்தை பின்வருமாறு முன்வைக்கிறார் ஜெயமோகன்.

”கற்பழித்தா இந்திய ராணுவம்?

புலிகளின் இந்த பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் பாசிஸ்டுகள், அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்திய விரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம் வெளுக்கச் செய்தனர். இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து, அதை தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச் சொன்னபோது அதையும் வழக்கமான மிகை பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக் கொண்டார்கள். இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசி காலங்களில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமல் போனதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.”

இந்த பொய் பிரச்சாரத்தை அடியோடு அம்பலப்படுத்தும் வகையில் தமிழ்நதியின் பதிவுகளினூடாகவும், பல வரலாற்றுத் தகவல்களும்  தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தமீழீழ விடுதலைப் போராட்டம் குறித்து ஜெயமோகனின் இந்திய சார்பு மனநிலை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்று ஏறத்தாழ 40 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கும் விரிவான முன்னுரை இந்த புத்தகத்தின் நோக்கத்தையும் தேவையையும் உணர்த்துகிறது. இந்துத்துவா பாசிஸ்ட்டுகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கும் இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் நம்மைச் சுற்றியுள்ள அறிவுத் தளத்தின் மீது விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.

– சத்திராஜ் குப்புசாமி, Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *