Federalsim indian economy

நிதி உரிமைக்காக மாநிலங்கள் எழுப்பும் போர்க்குரல்! கூட்டாட்சி மதிக்கப்படுமா?

மாநிலங்களின் நிதி மூலங்கள் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு வழிகளால் இந்திய ஒன்றிய அரசின் பிடிகளுக்குள் சென்று விட்டதால் தற்போது கொரோனாவை எதிர்கொள்ள மாநில அரசுகள் நிதி உரிமையைக் கோரி நிற்கின்றன. கொரோனாவுக்கு எதிரான போர் என்ற வார்த்தையை மோடி உரையாற்றும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனாவுக்கு எதிரான போரை உண்மையில் மாநில அரசுகள் தான் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்றிய அரசோ வெறும் அறிவிப்புகளையும், ஆணைகளையும் மட்டுமே வழங்கி வருகிறது.

மாநிலங்களின் அதிகார எல்லைகளுக்குள் புகுந்து சர்வாதிகாரப் போக்குடன் தன்னிச்சையான அறிவிப்புகளை இந்த பேரிடரைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு செய்து வருகிறது. மாநிலங்களின் நிதிச் சுமையை போக்குவதற்கு நிதி அறிவிப்புகளை செய்ய வேண்டிய ஒன்றிய அரசு யானைப் பசிக்கு சோளப் பொறிகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது.

தமக்கிருக்கும் குறைந்த நிதி ஆதாரங்களை பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகள் கடுமையான உழைப்பை செலுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசோ கை தட்டச் சொல்வது, விளக்கு ஏற்ற சொல்வது, ராணுவ ஹெலிகாப்டர்களை வைத்து பூ தூவுவவது போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளைத் தான் நிகழ்த்தி வருகிறது.

மக்களிடமிருந்து வரிகளைப் பெற்றுக் கொண்டு, பேரிடர் சமயத்தில் நிதிச்சுமையினை மக்களிடமும், மாநில அரசுகளிடமே விட்டுவிட்டு கடந்து கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

எவ்வளவு கேட்கின்றன மாநிலங்கள்?

கொரோனாவுக்கு எதிராக மாநிலங்கள் இரண்டு மாதங்களாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மகாராஷ்டிரா 50,000 கோடியும், சட்டீஸ்கர் 30,000 கோடியும், கேரளா 80,000 கோடியும், ராஜஸ்தான் 40,000 கோடியும், மேற்கு வங்கம் 25,000 கோடியும், தமிழ்நாடு 13,000 கோடியும் ஒன்றிய அரசிடம் கேட்டு நிற்கின்றன. ஆனால் ஒன்றிய அரசோ அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கடத்தி வருகிறது.

மாநிலங்களின் பொருளாதார தற்சார்பை முறித்த ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை கொண்டு வந்ததன் மூலமாக வரி நிர்ணய உரிமையை மாநிலங்கள் முற்றிலுமாக இழந்து நிற்கின்றன. அதன் காரணமாகத் தான் ஜி.எஸ்.டி-யை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு பாராளுமன்றத்தில் கடுமையாக சண்டையிட்டது. இதனால் மாநிலங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை உயர்த்திக் கொள்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் கொரோனா பெருந்தொற்று மாநிலங்களை கடும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டில் 1369 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு இந்த நேரத்தில் அளித்திருக்கிறது. இத்தனைக்கும் தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு அளிக்கின்ற வரிப்பணத்தில் 1 ரூபாய்க்கு 40 பைசா மட்டுமே தமிழகத்திற்கு திரும்ப அளிக்கப்படுகிறது. தென்மாநிலங்கள் பெருமளவுக்கு இப்படி வஞ்சிக்கப்படுகின்றன.      

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை ஆதரித்த மாநிலங்கள் கூட தற்போது அதனை மறுபரிசீலனை செய்யத்துவங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் அதிகாரப் பரவல் மற்றும் கூட்டாட்சி குறித்த விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

உலகம் முழுதும் அதிகாரப் பரவல் குறித்து எழுந்துள்ள விவாதம்

அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் காவின் நியூசம், தாங்கள் தனிநாடாக செயல்படப் போகிறோம் என்று சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் ஃபெடரல் அரசு கலிபோர்னியா மாகாணத்துக்கு முறையான உதவிகளையோ, மருத்துவ உபகரணங்களையோ வழங்கவில்லை என்பதைத்தான் அவர் முதன்மை குற்றச்சாட்டாக முன்வைத்தார். இனி அமெரிக்க அரசை நம்பி பயனில்லை, கலிபோர்னியா மாகாணத்தின் சார்பாக தாங்களே மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இதே போன்று இத்தாலி அரசு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கேட்ட போது, ஐரோப்பிய ஒன்றியம் கைவிரித்து விட்டது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் அதிகாரங்கள் ஒற்றைப் புள்ளியில் குவிவதை எதிர்த்த விவாதங்களை பரவலாக உருவாக்கியிருக்கின்றன.

மாநிலங்களை வதைக்கும் ஒன்றிய அரசு

இப்போது அத்தகைய விவாதத்தின் துவக்கப் புள்ளியாகத் தான் இந்தியாவின் மாநில அரசுகள் கோரிக்கையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசோ இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான நிதிச் செலவுகளைக் கூட மாநில அரசுகளின் தலையில்தான் கட்டியிருக்கிறது. மாநில அரசுகள் உருவாக்கிய முதலமைச்சர் நிவாரண நிதி நன்கொடை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு CSR சலுகையைக் கூட அளிக்கவில்லை.

மாநிலங்களின் கோரிக்கைகள் என்னென்ன?

15 வது நிதி ஆணையக் குழுவின் ஆணை மூலமாக நிதிப்பங்கீட்டில் பெருமளவு இழப்பினை சந்தித்துள்ள மாநிலமான தமிழ்நாடு, அந்த ஆணையக் குழுவின் ஆணைகளை நிறைவேற்றுவதில் தற்காலில் விலக்கினை கோரியுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் 15வது நிதி ஆணையக் குழுவில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார்கள். தனது கடன்பெறும் அளவினை மேலும் 33% அளவுக்கும் அதிகமாக அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. நிதி ஆணையக் குழுவிலிருந்து தமிழ்நாட்டின் உள்ளூராட்சிகளுக்கு அளிக்க வேண்டிய நிதியில் 50 சதவீதத்தை உடனடியாக ஒதுக்கக் கேட்டுள்ளது.

பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தைக் கூட அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன. நிதிப் பற்றாக்குறையின் (Fiscal Deficit) காரணமாக கடன் பெறும் அளவுக்கான உட்ச வரம்பு விகிதத்தினை ஜி.டி.பி மதிப்பின் 3 சதவீதம் என்ற அளவிலிருந்து 5 சதவீதமாக உயர்த்தக் கோரியுள்ளன.

ஜி.எஸ்.டி இழப்பீட்டின் காரணமாக வழங்க வேண்டிய தொகையினை கால தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளன. மாநில அரசுகள் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகையினை 3 மாத காலத்திற்கு நீக்கம் செய்திடவும் கோரியுள்ளன.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சொரேன் தங்களுக்கு நிதியினை அளிக்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றிய அரசினை நீதிமன்றத்திற்கு இழுப்போம் என்று எச்சரித்திருக்கிறார்.

விவசாயிகளுக்கான கடன் மற்றும் நிதி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் 10,000 ரூபாய், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து தற்காலிக விலக்கு என பல்வேறு கோரிக்கைகளை மாநிலங்கள் எழுப்பியுள்ளன. அவை காற்றில் அடித்து செல்லப்பட்டவைகளாக விடப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசு கூட்டாட்சியினை மதிப்பதே தீர்வு

ஒரு பக்கம் பேரிடரைப் பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களையெல்லாம் ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக அரசு முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் மாநில அரசுகள் இழந்த உரிமைகளுக்காக குரல் எழுப்பத் துவங்கியுள்ளன. கூட்டாட்சி குறித்த இந்த முரண் விவாதங்கள் கூர்மை பெறுவது சமூகத்திற்கு தேவையானதே. இன்று இந்தியாவின் மக்கள் கொரோனாவை எதிர்த்து நிற்க முடிந்திருப்பதற்கு காரணம் சுகாதாரத் துறையானது மாநில அரசுகளிடம் இருப்பதுதான். மொத்தமும் மையப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் கைகளில் இருந்திருந்தால் பாதிப்புகள் இன்னும் மோசமாகி இருக்கக் கூடும்.

மாநிலங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு புறக்கணிக்கும் பட்சத்தில் இந்த முரண் விவாதங்கள் வேறு பரிமாணத்தையும் அடையக் கூடும். எனவே கூட்டாட்சியினை மதித்து மாநிலங்களுக்கு தேவையான நிதியினை உடனடியாக பகிர்ந்தளிப்பதே சமூகத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *