அனைத்து முனைகளிலிருந்தும் மிகப்பெரிய சீரழிவு நடந்து வருவதை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை (உலகளாவிய காலநிலை மாற்றம் 2020 ) விவரித்துள்ளது.
1993 ம் ஆண்டிலிருந்தே உலக வானிலை ஆய்வு நிறுவனம் “கடந்த ஆண்டின் உலகளாவிய காலமாற்றத்தின் நிலை” என்னும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு 2020 ம் ஆண்டிற்கான வரைவு வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டுகளின் வரிசையில் 2020 ம் ஆண்டும் தன்னை இணைத்துக்கொண்டது. இதுவரை பதிவு செய்யப்பட்ட ‘மூன்று அதிகபட்ச வெப்ப நிலை நிலவிய ஆண்டு’களில் 2020 ம் ஆண்டும் ஒன்றாகும்.
2011 – 2020 வரை இடைப்பட்ட ஆண்டுகளே அதிக வெப்பமான 10 ஆண்டுகளாக புதிய வரலாற்றை பதித்துள்ளது. இதில் 2015 க்கு பிறகான எல்லா ஆண்டுகளும் அதி வெப்பமான ஆண்டுகளாகும்.
கார்பன் டை ஆக்சைடு (CO2) உறிஞ்சுதல் காரணமாக கடலியல் சுற்றுசூழலில் அமிலத்தன்மை ஏற்கனவே அதிகரித்து காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு பரவலான விளைவுகளினால் பெருங்கடல்களில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இதுமட்டுமில்லாது 80 சதவீதத்திற்கும் அதிகமான கடல்பரப்பில் அடிக்கடி ஒரு விதமான வெப்ப அலையை உணரமுடிவதகாவும் ஆய்வு கூறுகிறது.
இந்த அறிக்கையானது பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும், பல்வேறு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பை கொண்டுள்ளது.
இந்த அறிக்கையில் தீவிர காட்டுத்தீ, வெள்ளம், மற்றும் வரலாறு காணாத அடலாண்டிக் சூறாவளி போன்ற அதிகம் தாக்கம் கொண்ட நிகழ்வுகள் எவ்வாறு பாதித்தது என்பதையும், இதுமட்டுமில்லாது கொரோனோ பெருந்தோற்றின் தாக்கத்தையும் அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் எவ்வாறு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆய்வின் இறுதி அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த உலக வானிலை ஆய்வு நிறுவனம் தற்காலிகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 12 தலைப்புகளில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
பசுங்குடில் வாயுக்கள் :
பூமியை வெப்பமடைய செய்யும் பசுங்குடில் வாயுக்கலான கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் 2019 ம் ஆண்டை விட 2020 ம் ஆண்டு அதிகரித்துள்ளது.
உலகளாவிய வெப்பமயாதல் :
உலகளவில் வெப்பத்தின் அளவானது இதுவரை பதிவாகியுள்ள ஆண்டுகளின் அளவை விட இந்த ஆண்டு பதிவாகியுள்ள வெப்பத்தின் அளவானது அதிகம். 2020 ம் ஆண்டையும் சேர்த்து கடந்த 6 ஆண்டுகளுமே அதிக வெப்பமயமான ஆண்டுகளாகும்.
உயரும் கடல் மட்டம் :
கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டத்தின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதை கடல்மட்டம் உயரமாணியின் பதிவு காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி கடல் மட்டம் 2019 ஆம் ஆண்டைப் போலவே இருந்தது மற்றும் இரண்டும் நீண்டகால போக்குடன் ஒத்துப்போகின்றன. இந்த கடல் மட்டத்தின் சிறிதளவு உயர்வும் லா நினா( La Nina ) சூழலை உருவாக்கும்.
நீர்நிலைகளில் வெப்ப அலைகள்:
கடல் பகுதியில் வசிக்கும் 80% க்கும் அதிகமானவர்கள் 2020 ஆம் ஆண்டில் ஒரு விதமான கடல் வெப்ப அலைகளை உணர்ந்துள்ளனர். ‘மிதமான’ (28%) ஐ விட ‘வலுவான’ (43%) என வகைப்படுத்தப்பட்ட கடல் வெப்ப அலைகள் அதிகம்.
பெருங்கடல் வெப்பமயமாதல் :
2019 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த அளவில் கடல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் கடல் வெப்பநிலை அளவே கடந்த 10 ஆண்டுகளில் பதிவாகியுள்ள சராசரி வெப்பநிலை அளவை விட அதிக வெப்பநிலை அளவாகும். இது கிரீன்ஹவுஸ் ( பசுங்குடில் ) வாயுக்களால் ஏற்படும் கதிர்வீச்சு ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தொடர்ந்து வெப்பம் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
ஆர்க்டிக் கடல் பனி :
ஆர்க்டிக்கில் பகுதியில் ஆண்டின் குறைந்தபட்ச கடல்-பனியின் அளவானது இரண்டாவது மிகக் குறைவான அளவாகும் மற்றும் ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் கடல்-பனியின் அளவுகள் குறைந்து காணப்பட்டன. அண்டார்டிக் கடல் பனியின் அளவுகள் நீண்ட கால சராசரிக்கு அருகில் இருந்தது.
கிரீன்லாந்து பனி :
கிரீன்லாந்தின் பனிப்பரப்பின் நிறையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தபோதும் கிரீன்லாந்தின் தரைப்பகுதியின் நிறையானது நீண்ட கால சராசரியை பொறுத்தமட்டில் சற்று நெருக்கமாக உள்ளது. இந்த பனிப்பாறைகள் கடலில் ஓரத்தில் இருப்பதன் காரணமாக உருகி கடலில் விழுந்து விடுகிறது. 2019 செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை இதன்மூலம் மட்டும் கிட்டத்தட்ட 152 gt அளவிலான பனிபாறைகள் உருகியுள்ளது.
மழை மற்றும் வெள்ளம் :
2020 ஆம் ஆண்டில் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் சஹேல், ஆப்பிரிக்காவின் கிரேட்டர் ஹார்ன், இந்திய துணைக் கண்டம் மற்றும் அண்டை பகுதிகளான சீனா, கொரியா மற்றும் ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் பாதித்ததுள்ளது.
அட்லாண்டிக் சூறாவளிகள் :
நவம்பர் 17 நிலவரப்படி வடக்கு அட்லாண்டிக் சூறாவளி பருவத்தில் 30 பெயரிடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சூறாவளிகள் பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. பருவத்தின் கடைசி புயலான அயோட்டவும் மிக தீவிரமான புயலாகும். இந்த புயலுக்கு 5 ம் எண் கொண்ட எச்சரிக்கை விடபட்டது.
மற்ற வெப்ப மண்டல புயல்கள் :
இந்த வெப்ப மண்டல புயலால் கடுமையான பாதிப்புகள் இல்லை. இருந்தபோதிலும், பிற படுகைகளில் வெப்பமண்டல புயல் செயல்பாடுகள் நீண்ட கால சராசரிக்கு அருகிலும் குறைவாகவும் இருந்துகொண்டிருக்கிறது.
கடுமையான வறட்சி :
2020 ஆம் ஆண்டில் கடுமையான வறட்சி உள் தென் அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்ததுள்ளது, அதிலும் குறிப்பாக வடக்கு அர்ஜென்டினா, பராகுவே மற்றும் பிரேசிலின் மேற்கு எல்லைப் பகுதிகள் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் கூடுதல் இழப்புகளுடன் பிரேசிலில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விவசாய இழப்புகள் ஏற்பட்டது.
காலநிலை உந்துதல் இடம்பெயர்வு :
காலநிலை மற்றும் வானிலை நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பகுதி மற்றும் மத்திய அமெரிக்கா உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை இந்நிகழ்வுகள் கடுமையாக பாதித்துள்ளது.