டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்

புதியதாக அமல்படுத்தப்பட்ட விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடங்கிய “Dilli chalo” டெல்லி நோக்கிய பேரணி தொடர்ச்சியாக இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. மேலும் உத்திர பிரதேஷ், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்லியை நோக்கி வரத்தொடங்கினர்.

தில்லியை நோக்கி வந்த விவசாயிகள் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் ஆகிய டெல்லியின் எல்லைபுறங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு டெல்லிகுள்ளேயே ஒரு மைதானத்தில் இடம் ஒதுக்கி போராட அனுமதித்தது.

அதை ஏற்க மறுத்த விவசாயிகள் எங்கே தடுத்து நிறுத்தப்பட்டனரோ அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசு முன்நிபந்தனைகளுடன் அறிவித்த கூட்டத்திற்கு செல்ல மறுத்து வந்தனர் இதை தொடர்ந்து இன்று டிசம்பர் 3 ஆம் தேதி விவசாய அமைப்புகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்த சூழலில் இன்று விவசாய போராட்டத்தில் நடந்த முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை நடந்துள்ளவை:

 • கடந்த 1/12/2020 அன்று மத்திய அமைச்சர்களுடனான மூன்று மணி நேர சந்திப்பிற்கு பிறகு, குழு ஒன்றை அமைப்பதாக முன்வைத்த அரசின் கோரிக்கையை 35 உழவர் தலைவர்களும் நிராகரித்தனர். மேலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக தெரிவித்து இருந்தனர்.
 • கெளதம் புத் டிவர் இடத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து டெல்லி- நொய்டா எல்லைகளும் மூடப்பட்டன.
 • விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வீட்டின் முன் போராட்டம் நடத்திய
 • இளைஞர் காங்கிரஸ் அணியை சேர்ந்தவர்கள் மீது அரியானாரியாணா மாநில காவல்துறை தண்ணீர் பீச்சி அடித்து விரட்டியது.
 • முன்னர் போராட்டம் காரணமாக மூடபட்டியிருந்த கலிண்டி குஞ்ச் எல்லை தற்போது திறக்கப்பட்டன.
 • தில்லியின் பார் கவுன்சில், விவசாய விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் வணிக மற்றும் ஒப்பந்த ரீதியான பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக துணை மாஜிஸ்திரேட் அல்லது மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்களுக்கு அனுப்பப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் “அரசு அதிகாரிகளிடம் நீதி கிடைப்பது யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் இந்த சட்டம் பொதுமக்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும்” என தில்லியின் பார்கவுன்சில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளது.
 • “507 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசும் வரை ஒன்றிய அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை” என கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ‘ANI’ தெரிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு போராடும் விவசாயிகளை பிரித்தாள முயற்சிப்பதாகவும் தெரிவித்தது.
 • 60 வயதான விவசாயி குர்ஜாந்த் சிங் திக்ரி எல்லையில் இறந்ததாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புதன்கிழமை(2/12) செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை டெல்லி போராட்டத்தில் 5 நபர்கள் இறந்துள்ளனர்.
 • இன்று(3/12) மதியம் 12:43 மணியளவில் விவசாய அமைப்பின் தலைவர்கள், பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் ஒன்றிய அரசு சார்பில் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

 • ‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திர சேகர் ஆசாத் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்தார்.” அரசு சர்வதிகாரியாகிவிட்டால் மக்கள் தெருவிற்க்கு(போராட) வர வேண்டும். அரசு இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.விவசாயிகளுக்கு ஆதரவளிக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம், கடைசி வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என அவர் தெரிவித்தார்.
 • பஞ்சாப் முன்னாள் முதல்வரும் ஷிரோமணி அகாலிதளத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை “இந்திய அரசு விவசாயிகளுக்கு செய்துள்ள துரோகத்தை” கண்டித்து திருப்பி கொடுத்துள்ளார் என ‘ANI’ செய்தி தெரிவித்துள்ளது. மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா-வும் தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திருப்பி அளித்துள்ளதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி தெரிவித்துள்ளது.
 • காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியின் தலைவர்கள் சிலர் மீண்டும் பாராளுமன்ற அவையை கூட்டி விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பரிந்துரைத்தனர்.
 • மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் அவர்கள் பகுதிகளில் இருக்கும் தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை நோக்கி ஊர்வலம் சென்றனர் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது
 • டெல்லி ‘விஞ்ஞான் பவனில்’ ஒன்றிய அரசுடன் விவசாய சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், சிறப்பு பாராளுமன்ற அமர்வு ஒன்று ஏற்பாடு செய்து புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள விவசாய விரோத சட்டங்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியதாக ‘ANI’ செய்தி தெரிவித்துள்ளது.

மீண்டும் இன்னொரு சந்திப்பு கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறும் என ‘ANI’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதரவு தெரிவித்த பிற அமைப்புகள்:

இந்திய தேசிய மாணவர் சங்கம்(National Students Union of India). விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக 30 ராஜஸ்தான் எம்பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

“மூன்று விவசாய விரோத சட்டங்களை பார் கவுன்சில் உறுப்பினர்களும் எதிர்ப்பதாக”மூத்த வழக்கறிஞர் எச்.எஸ். பூல்கா ‘ANI’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும் அவர் “இச்சட்டம் விவசாயிகளுக்கு வேண்டிய நீதியை ஒருபோதும் வழங்காது” என தெரிவித்தார்.

அகில இந்திய போக்குவரத்து காங்கிரஸ், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறினால் டிசம்பர் 8 முதல் வட இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சங்கம் சுமார் 95 லட்சம் லாரி ஓட்டுநர்களை உறுப்பினர்களாக கொண்டது.

500 க்கும் மேற்பட்ட வேளாண் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள், பண்ணைத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் உட்பட மாநிலத்தில் 80 -கும் மேற்பட்ட கிளை அமைப்புகளை கொண்ட அகில இந்திய கிசான் சபா விவசாய போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு, விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாகவும், விவசாயச் சட்டங்களை அகற்றுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக ‘நியூஸ் 18’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அவர்கள் மின்சார திருத்த மசோதா, 2020 நீக்கக் கோரியும் வலியுறுத்தினர்.

போராட்டத்திற்கு மத்தியில் கொச்சையாக பேசி வந்த பாரதிய ஜனதா கட்சியினர்:

“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளை தவறாக திசைதிருப்பி வருவதாக” மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

“எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் விவசாயிகளை தவறாக திசை திருப்பி வருவதாக” பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர சிங் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் குறித்து பேசிய ஹரியானா அமைச்சர் ஜே.பி.தலால், “விவசாயிகள் பெயரில் இந்தியாவை சீர்குலைக்க சீனாவும் பாக்கிஸ்தானும் முயற்சிக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளதாக ‘ANI’ செய்தி தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை ‘ஷாஹீன் பாக்’ போன்ற போராட்டமாக மாற்ற “துக்தே துக்தே கும்பல்(உதிரி குழுக்கள்)” முயற்சிப்பதாக பாரதிய ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த குழுக்கள் இந்தியாவை துண்டாட முயற்சிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *