வரும் நூற்றாண்டின் முடிவிற்குள் பூமியின் வெப்பம் 3°C அதிகரித்து விடும் என ஐநா-வின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக தொழிற்சாலைகள் மூடியும், வாகனப் போக்குவரத்துகள் செயல்படாமலும் இருந்ததன் காரணமாக உலகளவில் கரியமிலவாயு வெளியேற்றம் 7% அளவிற்கு குறைந்தது. இருப்பினும் பூமியின் வெப்பம் 3°C அளவிற்கு அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
9/12/20 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (UN Environment programme’s ‘Emission Gap Report’) இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. இது ஐ.நா சார்பாக வெளியிடப்படும் அறிக்கையாகும்.
அறிக்கை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்
- வசதியான 1% மக்கள், உலகில் உள்ள 50% ஏழை மக்களை விட இருமடங்கு அதிகமாக மாசுபடுத்தி வருவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
- மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய பணக்கார நாடுகளுக்கு தாங்கள் பாரிஸ் ஒப்பந்ததில் ஒத்துக்கொண்ட தீர்மானத்தை செயல்படுத்துவதில் அதிக பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
- கொரோனா தொற்றுக்கு முந்தையகால கணிப்புகளின்படி ஜி-20 உறுப்பு நாடுகள் தங்கள் இலக்குகளை அடையும் பாதையில் இல்லை என அறிக்கை கண்டறிந்துள்ளது.
பாரிஸ் ஒப்பந்தம்
கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், நிலையான கரியமில வாயு இல்லா எதிர்காலத்திற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகளை விரைவுபடுத்துவதை தீவிரப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
அதிகரித்து வரும் வெப்பநிலை
ஆனால் பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்ட பின்பும் பூமியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
- கடந்த 2010-ம் ஆண்டு முதல் 1.4% அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
- அதிகபட்சமாக 2019-ம் ஆண்டு அதிகமான காட்டுத்தீ ஏற்பட்ட காரணத்தினால் 2.6% வெப்பநிலை அதிகரித்ததாக தெரிகிறது.
- உலகளவில் அதிகமாக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. அதாவது சுமார் 3.7 ஜிகா டன் கரியமில வாயு ஆண்டுதோறும் வெளியேற்றி மாசுபடுத்தி வருகிறது.
- மேலும் பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஐரோப்ப நாடுகள் முறையே 14, 6.6 மற்றும் 4.3 ஜிகா டன் கரியமில வாயுவை வெளியேற்றி வருகின்றன.
இலக்கை அடைய சரியான நடவடிக்கை தேவை
கொரோனா தொற்று நோயிலிருந்து மீட்டெடுப்பதின் ஒரு பகுதியாக அரசாங்கங்கள், காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் முதலீடு செய்து, அடுத்த 2021 நவம்பரில் வர இருக்கும் கிளாஸ்கோ சந்திப்பில் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கரியமில வாயு வெளியேற்றத்தை 2°C அளவில் நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
“இந்த அறிக்கை பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான 1.5°C எனும் வரம்பை எட்டவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் வலுவான நடவடிக்கைகளை எடுத்து 2030-ம் ஆண்டிற்குள் காலநிலை இலக்குகளை எட்டும் லட்சியப் பாதைக்கான நடவடிக்கைகளை எடுத்து உலகளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை 45% அளவிற்கு குறைப்பதன் மூலமாக அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளில் சிலவற்றை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கு கொரோனா தொற்று மீட்பு நிதியின் ஒரு பகுதியை ஒதுக்குவது நமது இலக்கினை அடையும் தூரத்தை குறைக்கக் கூடும்” என ‘கிளைமேட் அனலிட்டிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பில் ஹரே தெரிவித்துள்ளார்.
முகப்புப் படம்: கோப்பு – காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, கார்பன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி கிரீன்பீஸ் அமைப்பினர் ஜெர்மனியில் நடத்திய போராட்டம்