விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து தமிழில் முதல் நாவல் எழுதிய டி.செல்வராஜ்

முதலாம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பதிவு

1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் – ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தையார் தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ் தான அரசுபள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் 1959 பி.ஏ. பொருளாதாரம் பயின்றார்

கல்லூரிக்காலத்திலேயே நெல்லையில் தி. க. சிவசங்கரன்,தொ.மு.சி. இரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை போன்ற இடதுசாரி இலக்கியவாதிகளுடன்  நட்பு ஏற்பட்டது.

இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.அப்போது ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில்  முதல் கதை வெளியானது 

அதனை தொடர்ந்து. சாந்தி, சரஸ்வதி, தேசாபிமானி (இலங்கை), பிரசண்டவிகடன், நீதி, சிகரம், தாமரை, செம்மலர், தீபம் ஆகிய இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன

சென்னைச் சட்டக்கல்லூரியில்  இளநிலை சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான ‘ஜனசக்தி’யிலும் இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேரமாகப் பணியாற்றினார் .

முதல் சிறுகதை தொகுப்பு வெளியிடு

நோன்பு டி.செல்வராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். 1958-1964 காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இது 1966 ஆம் ஆண்டு வெளியானது. 

 இக்கதைகள் பெரும்பாலும் ‘தாமரை’ இதழில் வெளிவந்தவை. டி.செல்வராஜ் கதைகள் என்னும் இரண்டாவது தொகுப்பு 1994 ஆம் ஆண்டு கிறித்துவ இலக்கியச் சங்கம் வாயிலாக வெளிவந்தது. நிழல் யுத்தம் 1995 ஆம் ஆண்டு  அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகும். டி.செல்வராஜ் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்

விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல்

டி.செல்வராஜின் முதல் நாவலானா ‘மலரும் சருகும்’ . விவசாய தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினைச் சித்தரித்துக் காட்டியது. இந்நாவல் நெல்லை மாவட்டத்தில் இந்திய விடுதலைக்குப்பின் நடைபெற்ற ‘கள்ளமரக்கால்’ ஒழிப்புப் போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு நிலத்தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைக் காட்டியுள்ளது. இந்நாவல் தமிழில் விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் என்கிற பெருமை உடையது.

இதன் பின்னர் தேவிகுளம், பீர்மேடு, மூணாற்றில் வாழும் காப்பி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னல்களையும் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்களையும் ‘தேநீர்’ (1976) நாவல் வாயிலாக டி.செல்வராஜ் எடுத்துக் காட்டியுள்ளார். இன்றைய கேரளத்தின் மலையகப் பகுதியில் வாழ்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தார். விடுதலைக்குப்பின் நடுத்தர வர்க்கத்தினரின் அகப்புற வாழ்வில் ஏற்பட்ட சிதைவுகளையும் மாற்றங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் டி.செல்வராஜின் ‘மூலதனம்’ என்ற நாவல்.1982 ஆண்டு  வெளிவந்தது.பொருளாதார காரணிகளால் தமிழ்ச்சமூகத்தின் குடும்ப உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நாவல் பதிவுசெய்தது.

வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.செல்வராஜின் நீதிமன்ற வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘அக்னி குண்டம்’ நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனிய நீதிமன்ற நடைமுறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதையும் குடியாட்சியின் தூணாக இருக்கவேண்டிய நீதித்துறையில் ஊழல் மலிந்திருப்பதையும் இந்நாவலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தோல்

திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் விதமாக ‘தோல்’ 2010 ஆண்டு  நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவல் தமிழக அரசின் விருதினை 2011ஆம்  ஆண்டும் சாகித்திய அகாதெமி விருதினை 2012 ஆம் ஆண்டும் பெற்றுள்ளது.

 ‘தோல்’ நாவல், திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினையும் அப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையினையும் எடுத்துரைக்கின்றது. சுண்ணாம்புக் குழிகளில் இறங்கி வேலை பார்ப்பதால் கைகால்கள் அழுகியும் தோலிலுள்ள மயிர்களை நீக்குவதன்மூலம் தோல் தூசிகளின் மாசுகளுக்கு ஆட்பட்டு இளைப்பு நோய்க்குப் பலியாகியும் மாண்டுபோன, முதலாளிகளின் ‘முறி’ அடிமைகளாக இருந்த தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்திரிக்கின்றது. சின்னக்கிளி என்ற பச்சிளம் பெண்ணைத் தோல் தொழிற்சாலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தொழிற்சாலை முதலாளியின் உறவினரை, தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்த  ஓசேப்பு தூக்கி எறிவதிலிருந்து நாவல் தொடங்கும்

எழுத்தாளர் டி.செல்வராஜ் சாகித்திய அகாதெமி விருது பெற்ற போது

ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வுபெற்றுச் சங்கத்தின்வழி ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவது நாவலின் மையக்கருத்தாக கொண்டிருக்கும் . தோல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்ட பறையர் சமூகத்தை  சேர்ந்தவர்களும்  அருந்ததியர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கும் நாவல் இது. தலித்துகளின் அவலங்களை, அவமானங்களை, வேதனைகளைச் சொல்வதைவிட அவற்றிலிருந்து விழிப்புணர்வு பெற்று மீண்டெழுகின்ற வெற்றிகரமான வாழ்வே நாவலில் எடுத்துக்காட்டப்படும்

சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்களைத் தாண்டி சாமி.சிதம்பரனார், ப.ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக எழுதியுள்ளார். இவை சாகித்திய அகாதெமியின் வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. தோழர் டி.செல்வராஜ் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகிய இடதுசாரி இலக்கிய இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டவர். இடதுசாரிகள் இலக்கிய அமைப்பில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்

1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில்முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் செல்வராஜ்

நாடக ஆசிரியராக

நோன்பு”, “நிழல்யுத்தம்’, “செல்வராஜ் கதைகள்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் மலரும் சருகும்,தேநீர்,மூலதனம்,தோல் ஆகியநாவல்களையும் தந்த செல்வராஜ் பாட்டு முடியும் முன்னே, யுக சங்கமம் போன்றமுழுநீள நாடகங்களையும் எழுதினார்.‘பாட்டு முடியுமுன்னே..’ நாடகத்துக்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதினார்.திரைப்பட நடிகர் டி.கே.பாலச்சந்திரன் தன்னுடைய மக்கள் நாடக மன்றத்தின் மூலம் அந்நாடகத்தைத் தமிழகம் எங்கும் எடுத்துச் சென்றார்.அந்த நாட்களிலேயே சாதி,மத மறுப்புத்திருமணம் செய்தவர்.

சாகித்ய அகாடமி விருதை விட, எந்த வர்க்கத்திற்காக நான் எழுதுகிறேனே, அந்த உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் கைத்தட்டல்கள்தான் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம்” என்றவர்.

வழக்கறிஞராகவும் உழைக்கும் மக்களின் பல்வேறு வழக்குகளை நடத்திக் கொடுத்தவர்.இறக்கும்வரை எழுதிக்கொண்டே இருந்த படைப்பாளியான டி செல்வராஜ் டிசம்பர் 20, 2019 நாள் 81 வது வயதில் மரணமடைந்தார் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *