அணுக்கழிவு

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.

செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021

தாழப் பறந்திடும் மேகம் – 2 தொடரின் முதல் பாகத்தினை பின்வரும் இணைப்பில் படிக்கவும்.


தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 1) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.


ஒரு இடத்தில் அணுக்கழிவு புதைக்கப்பட்ட இடத்தை அடுத்து வரக்கூடிய எதிர்கால தலைமுறைக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்குமாறு தெரியப்படுத்துவதென்பது எளிதல்ல. ஆண்டாண்டு காலம் நிலைத்து நிற்க வேண்டிய அந்த செய்தியை எப்படி எழுத முடியும்? எந்த மொழியைப் பயன்படுத்துவது? அதை எப்படி எளிதாகவும் சரியாகவும் சொல்வது? என்ற ஏராளமான கேள்விகளை உள்ளடக்கியது இது. இப்படி எழும் கேள்விகளுக்கான விடையை பல்வேறு வழிகளிலும், தளங்களிலும் விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

நியூ மெக்ஸிகோவில் இருக்கும் அணுக்கழிவு மையத்தின் நிலத்தடி கிடங்கு

இத்தகைய சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கு விடைகண்டறிய  அமெரிக்க எரிசக்தி துறை ( Department of Energy) 1980களின் இறுதிகளிலிருந்து 1990களின் தொடக்கம் வரை ஒரு முயற்சியை மேற்கொண்டது. அதன்படி சமூகவியலாளர்கள், அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக் கூடியவர்கள் என பல்துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த கேள்விகளுக்கு விடை அறிய முயன்றது. 

நியூ மெக்சிகோவின் அணுக்கழிவு சேகரிப்பு மையத்தில் எழுப்பப்பட்ட பிரம்மாண்ட சுவர்

அதன்படி நியூ மெக்ஸிகோவில் இருக்கும் அணுக்கழிவு சேகரிப்பு மையத்தின் (WIPP depository) மேல்தளத்தில் க்ரானைட் கற்களால் ஒரு மிகப்பெரும் சுவரை எழுப்பினார்கள். “தகவல் சுவர்” (Message wall) என்றழைக்கபட்ட இந்த சுவரில் சீன மொழியிலிருந்து நவஜோ மொழி வரை ஏழு மொழிகளில் நீண்ட விளக்கங்களுடன் கூடிய ஒரு தகவல் எழுதப்பட்டது. அந்த தகவலில்

“இந்த இடம் பெருமை வாய்ந்த இடம் அல்ல. மிகவும் மதிப்பிற்குரிய எந்தவொரு செயலும் இங்கு நினைவு கூரப்படவில்லை. அதேவேளையில் மதிப்புக்குரிய எதுவும் இங்கே இல்லை.

இங்கே இருப்பது அனைவருக்கும் அபாயம் விளைவிப்பதும் மற்றும் வெறுக்கத்தக்கதுமாகும். இந்த செய்தி அந்த ஆபத்தைப் பற்றிய ஒரு எச்சரிக்கையாகும்.

ஆபத்தென்பது இங்கே இந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ளது. இங்கு கீழே நிலத்தின் மையத்தை நோக்கி செல்லச் செல்ல அந்த ஆபத்தின் வாய்ப்பு அதிகரிக்கும். . . இதன் கீழே அந்த அபாயத்தின் மையம் ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் அமைந்திருக்கிறது.

எங்களுடைய காலத்திலிருந்த அதே ஆபத்து உங்கள் காலத்திலும் இருக்கிறது.

ஆபத்து உங்கள் உடலுக்கு தீங்கு விளைவித்து உங்களை கொல்லக்கூடும்.

ஆபத்தின் வடிவம் கண்ணுக்கு புலப்படாத அதன் ஆற்றலின் வெளிப்பாடு ஆகும்.

இந்த இடத்தை நீங்கள் கணிசமாக அகழ்ந்தெடுத்து சிதைத்தால் மட்டுமே ஆபத்து கட்டவிழ்ந்து வெளிப்படும். இந்த இடம் எங்கள் காலத்தில் தனித்த முறையில் ஒதுக்கி வைக்கப்பட்டு மக்கள் வசிக்காமல் தனித்து விடப்பட்டுள்ளது. ”

என்பதாகும்.

அதே வேளையில் ஒருவேளை எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களாலோ அல்லது குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டாலோ ‘தகவல் சுவர்’ பயனற்றுப் போகும். ஆனால் அப்போதும் இந்த இடத்தில் “இயற்கைக்கு மாறானது, அச்சமூட்டக்கூடியது, உடனடியாக இங்கிருந்து அகல்வது” போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஏதாவொதொரு குறியீடு அல்லது சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அலறும் மனிதனின் முகத்தின் ஓவியம்

இதிலும் பல்வேறு சிந்தனைகள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக நிலப்பகுதி முழுவதும் கூரான கான்கிரீட் தூண் முனைகள் எழுப்பப்பட வேண்டும் என்றும், அவற்றிலிருந்து விழும் நிழல் கூட அச்சம்தரும் வகையில் இருக்கவேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது. மற்றொரு யோசனையாக புகழ்பெற்ற ஓவியர் எட்வர்ட் மன்ச் வரைந்த “தி ஸ்கிரீம்” (Edvard Munch’s painting “The Scream”) என்ற அலறும் மனிதனின் முகத்தின் ஓவியம் அந்த தளத்தில் ஏராளமான இடங்களில் வைக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனாலும் இந்த பரிந்துரைகள் அதன் நீடிக்கும் ஐயத்தால் ஏற்கப்படவில்லை.

அணுக்கழிவு புதைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அபாயத்தை குறிப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட கான்கிரீட் கூர்முனைகள் (மாதிரிப்படம்)

எதிர்கால சந்ததிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான குறியீடுகள்

அதிகாரப்பூர்வமாக இந்த இடம் 2050-ம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால் இதற்கான பரிந்துரைகள் சமர்பிக்கப்படுவதற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2035-ம் ஆண்டுவரை பரிந்துரைகளுக்கான கால அவகாசம் அமெரிக்க அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது  வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் அந்த இடத்தைச் சுற்றிலும் எட்டு மீட்டர் உயரத்திலும் தலா 20டன் எடையும் கொண்ட 48 கிரானைட் தூண்களால் பிரமாண்டமாக சின்னங்கள் எழுப்பப்பட்டு தளம் முழுவதும் நிரப்பப்படவேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். இந்த கல்தூண் வடிவமைப்புகள் எதிர்காலத்தில் அங்கு வாழக்கூடிய மக்களுக்கு அந்த இடத்தைப் பற்றிய ஏதாவதொரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

வெறுப்பை ஏற்படுத்தும் சின்னங்களை இடிக்கும் மக்களின் தன்மை

ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள் தற்போதே வழக்கொழிந்து விட்டதாகக் கூறி அவற்றை நிராகரித்து விட்டனர். சொல்லப்பட வேண்டிய விடயம் மிக எளிதானது. அது மிகப் பெரியதாகவும், அதேசமயம் வெளிப்படுத்த இயலாத வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ஒரு வடிவமைப்பு வெறுப்பையோ, பயத்தையோ தருமாயின் அவற்றை இடித்து அழிப்பதே முதல் வேலையாக மக்களுக்கு இருக்கும் அம்சத்தையும் பரிசீலிக்கவேண்டும். இதற்கு  நமக்கு ஏற்கனவே தெரிந்த பல்வேறு எடுத்துக்காட்டுகள் குறிப்பாக மதத் துவேசத்தில் இடித்துத் தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பாமியன் குடைவரை புத்தர் சிலைகள் முதல் இந்தியாவில் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதிவரை இருக்கின்றன.

புகழ்பெற்ற ஓவியர் ‘எட்வர்ட் மன்ச்’ வரைந்த “தி ஸ்கிரீம்” ஓவியம் (‘The scream’ by Edvard Munch)

எச்சரிக்கைகள் ஆர்வத்தை தூண்டக் கூடும்

இந்த நினைவுச் சின்னங்களை பார்க்கும் எதிர் காலத்தினரால் அவற்றுக்கு வரக்கூடிய ஆபத்தில் ஒரு அடிப்படை விடயம் உள்ளது. உலகெங்கும் காலம்காலமாக தொல்லியல் மற்றும் பழங்கால அரசர்களின் கல்லறைகளை  சோதனையிடுவதென்பது மனிதர்களின் பெருவிருப்பமாக இருக்கின்றது. அதுமாதிரியான சந்தர்பங்களில்  நாம் வடிவமைத்திருக்கும் எச்சரிக்கைகள் முழுவதாக புறக்கணிக்கப்படலாம் அல்லது இன்னும் மோசமாக அதைப்பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டலாம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 

எகிப்தில் உள்ள பார்வோன் அரசர்களின் கல்லறைகள் (The pharaohs’ tombs in Egypt) அங்கிருக்கும் பாலைவனத்திற்குக்  கீழே ஆழமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த கல்லறைகளுக்கு எதிராக கடுமையான சாபங்கள் இருப்பதாகக் கூறப்பட்டபோதிலும் அவை மனிதர்களின் அதீத ஆர்வம் காரணமாக சோதனை செய்யப்பட்டன.  நமக்கெல்லாம் தெரிந்த மிகப் பிரபலமான திரைப்படமான  ‘இந்தியானா ஜோன்ஸ்’ ( Indiana Jones) திரைப்பட ஹீரோ இத்தகைய குணம் கொண்ட படைப்பாகவே இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் “மனிதர்கள் இயல்பாகவே இதைப்போன்ற விடயத்தில் ஆர்வமாக உள்ளனர்” என்றும் இதைப்போன்ற ஆர்வம் கொண்டவர்கள்  “பொதுவாகவே எச்சரிக்கைகள் ஒரு அழைப்பு” என்று அதை மேலும் ஆர்வமாக ஆராய்வதும் தடுக்க இயலாது என்று தத்துவ சிக்கல்களின் முன்னணி நிபுணர் பேட்ரிக் சார்டன் (Patrick Charton) கூறுகிறார்.

எதிர்கால சந்ததிகளை அணுக்கழிவுகள் புதைக்கப்பட்ட இடத்தில் எதையும் செய்யவிடாமல் தடுக்கும் குறியீடுகளே தேவை

அந்த அணுக்கழிவு மையத்தில் பணிபுரியும் தத்துவ சிந்தனையுள்ள புவியியலாளர் ஆபிரகாம் வான் லூயிக் (Abraham Van Luik) கருத்துப்படி எதிர்கால சந்ததியினரை பயமுறுத்தும் யோசனையானது உண்மையில் குறைபாடுடையது என்றும், தளத்திற்கான இறுதி வடிவமைப்பு சமர்ப்பிப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் ஒப்புக்கொள்கிறார். “உதாரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குற்ற உணர்ச்சி அல்லது பயம் போன்ற உணர்ச்சிகளால் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதேசமயம் அந்த உணர்ச்சிகளைப் பற்றி கலவையான மற்றும் கணிக்க முடியாத முடிவுகளுடன் மட்டுமே அவற்றை செய்கின்றனர்” என்று கூறுகிறார். 

“சிவப்பு பொத்தானைத் தொட வேண்டாம் என்று நீங்கள் மக்களிடம் சொல்லலாம். ஆனால் ஏன் என்று சொல்லாவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள் அதைத் தொடத்தான் விரும்புவார்கள். ஆதாம், ஏவாளிடம் இதைப்போன்ற அனுபவங்கள் இருந்ததை நாம் அறிந்திருக்கிறோம். எதிர்கால தலைமுறையினரை பெரியவர்களைப் போல நடத்தவும், அவர்கள் அறியாமையில் எதையும் செய்யவிடாமல் தடுப்பதற்காக அதற்கான உண்மைகளை அவர்களுக்கு வழங்கவும் நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார். மேலும் அங்கு தளத்தில் அமையப்போகும் மாபெரும் கிரானைட் தூண்கள்  “மிகப் பிரமாண்டமாக” இருக்கக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஸ்காண்டிநேவிய நாடுகளின் அமைதியான அணுகுமுறை

பெரிய அளவில் பயத்தைத் தூண்டும் வடிவமைப்புகளை அமெரிக்கர்கள் பரிசோதித்துக் கொண்டிருக்கையில், ஸ்காண்டிநேவிய நாடுகள் அமைதியான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளன. 2023-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் பின்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள ‘ஒன்கலோ’ (Onkalo) நகரிலிருக்கும் ஆழமான அணுக்கழிவு மையம் அதன் நிலப்பரப்பில் எந்த தடயமும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பின்லாந்தின் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த கை ஹேமலினென் (Kai Hämäläinen from the Finnish nuclear safety authority.) இதைப்பற்றி கூறுகையில், “இந்த இடம் எந்தவித  எண்ணெய் வளமும், விலைமதிப்பற்ற தாதுக்களென்று ஏதுவுமே இல்லாத இடமாகும். மேலும் அவை கிடைக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவிலும் இருக்கிறது. இங்கு அவர்கள் 400 மீட்டர் ஆழத்தில்  நிலத்தை தோண்டுவதற்கும் அதற்காக இந்த குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்வதற்கு வாய்ப்புகளே இல்லை. நாம் இங்கு நினைவுச் சின்னம் எழுப்பினாலும் அது அழிந்தால் கூட நாம் முன்பு சொன்ன வாய்ப்புகளால் இந்த மையம் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும். அதனால் எந்தவொரு நினைவுச் சின்னத்திற்கும் இந்த இடத்தில் எந்த அவசியமும் இல்லை.” என்று கூறுகிறார்.

பின்லாந்தின் ‘ஒன்கலோ’ (Onkalo) நகரிலிருக்கும் ஆழமான அணுக்கழிவு மையதின் வரைபடம்

அமைதி அணுகுமுறையும் பின்னடைவு

ஸ்காண்டிநேவிய நாடுகளின் இந்த அணுகுமுறை அமெரிக்காவின் கருத்துக்களைப் போலவே பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த வாதத்தில் ஒரு அபாயகரமான குறைபாடும் இருக்கிறது என்று அதை விமர்சிப்பவர்கள்  கூறுகிறார்கள். எதிர்காலத்தில் மக்கள் இந்த தளத்தைப் பற்றி முற்றிலும் மறந்து விடுவார்கள் என்பதை இப்போதே எப்படி  உறுதிப்படுத்திக் கூற இயலும்? தலைமுறை தலைமுறையாக காலங்கள் மாறும்போது இந்த தளத்தைப் பற்றிய அறிவு சமூகத்தின் நினைவுத் தளத்தில் ஒருபோதும் இருக்காது என்று எவ்வாறு இப்போதே உத்தரவாதம் அளிக்க முடியும்? 

1,000 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கே ஏதோ ஒன்று இருப்பதாக மக்கள் நினைவில் வைத்திருக்கலாம் அல்லது அது அகழ்வு செய்யக்கூடாத  ஒன்றாகவோ, ஆபத்தானதாகவோ அல்லது தடை செய்யப்பட்டதாகவோ இருப்பதாகக்கூட நினைக்கலாம். ஆனால் மதிப்புமிக்கதாய் நினைத்துவிட்டால் என்ன ஆகும் என்று  2010-ம் ஆண்டில் டேனிஷ் ஆவணப்பட இயக்குனர் ‘மைக்கேல் மேட்சன்’ (Michael Madsen) தன் ‘இன் டூ எடர்னிட்டி’ (Into Eternity) திரைப்படத்தில் கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார்.

டேனிஷ் ஆவணப்பட இயக்குனர் ‘மைக்கேல் மேட்சன்’ (Michael Madsen)  ‘இன் டூ எடர்னிட்டி’ (Into Eternity) திரைப்பட விளம்பரம்

மேலும் ‘ஒன்கலோ’ போன்ற அணுக்கழிவு சேகரிப்பு நிலையங்களின் எதிர்காலத்தைப் பற்றி இப்போதே உறுதி கூறுபவர்களைப் பார்த்து, “நீங்கள் எப்படி ஒரு விடயத்தை மறப்பதற்காக அதை எப்போதும் நினைவில் கொள்ளமுடியும்?” என்று கேட்ட கேள்வி உண்மையில் பொருளுள்ளது.

தொடரும்…

இக்கட்டுரையின் அடுத்த பாகங்களைப் படிக்க:


தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 4) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து


அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *