‘எப்பா சாமி என்னா வெயிலுடா இது…’
‘என்னடா வெயிலு இந்த போடு போடுது…’
‘இந்த வெயில்ல வெளிய போகவே பயமா இருக்கப்பா…’
‘யார்ரா இந்த வெயில்ல வெளிய போறது…’
இந்த வார்த்தைகளை சமீப நாட்களில் கட்டாயம் எங்கேயோ கேட்டிருப்பீர்கள்; இல்லையென்றால் நீங்களே சொல்லியிருப்பீர்கள்: இல்லையா.. குறைந்தபட்சம் நினைத்தாவது இருந்திருப்பீர்கள்!
இப்போது நம்மை வாட்டி வதைக்கும் இந்த வெயில் உண்மையிலேயே இயல்பான வெயில் தானா? இவ்வளவு கொடுமைப்படுத்தும் வெயில் ஆண்டுக்கு ஆண்டு உயர்கிறது போல உணர்வு ஏற்படுவதுண்டா? இனியும் உயரும் என்கிற பயம் இருக்கிறதா?
மே மாசம், அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் இதனால் தான் இவ்வளவு வெயில் அடிக்கிறது என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டு நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டாலும் உண்மையான காரணம் அது மட்டும் தானா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை இந்த சுட்டெரிக்கும் வெயில் நமக்கு உணர்த்துகிறது.
உண்மையிலேயே நாம் எண்ணிக் கூட பார்த்திடாத அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டு தான் வருகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இன்னும் எதிர்பார்க்காத வகையில் உயரப்போகிறது எனவும் ஜெனிவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமான WMO மே 17 2023 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.
2023 – 2027 ம் ஆண்டின் பூமியின் மேற்பரப்பு பகுதியின் சராசரி வெப்பமானது தொழிற்சாலைகளெல்லாம் வருவதற்கு முன்னதாக இருந்த பூமியின் வெப்பத்தை விட 1.5°C அதிகரிக்க 66% வாய்ப்பிருப்பதாகவும்,
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு ஆண்டு முழுதுமாகவும் அல்லது மொத்தமாக ஐந்து ஆண்டு காலம் வரை கூட இந்த அதிக வெப்பநிலை நீடிக்க 98% வரை வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பூமி நிரந்தரமாக 1.5°C வெப்பத்தை தாண்டும் என்ற பாரிஸ் ஒப்பந்தத்தின் போது சொல்லப்பட்ட முடிவை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அதிகரித்து வரும் வெப்பநிலையைப் பார்த்தால் நிரந்தரமாக இல்லாவிட்டாலும் தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியசைத் தாண்டும் என்ற அபாய எச்சரிக்கையை WMO பொதுச் செயலாளர் பேராசிரியர் பெட்டேரி தாலாஸ் அந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் எல் நினோ எனப்படும் இயற்கையான வெப்பமயமாதல் அதிகரிப்பு நிகழ்வினாலும் மனிதனால் செயற்கையாக ஏற்படுகின்ற மாசுப்படுத்தல் நிகழ்வினாலும் உலகத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு வெப்பமயமாதல் அதிகரிக்கும்; அதனால் உணவு, நீர், சுகாதாரம் என அனைத்து பேரிடர்களையும் நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டுமெனவும் தாலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
UK வின் மெட் நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பத்தாண்டு காலநிலை ஆய்வின் அடிப்படையில் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க 32 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக கூறினாலும், 2015 ல் பூஜ்ஜியதுக்கு மிக நெருக்கமாக இருந்த வெப்பநிலையானது தொடர்ந்து சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் 2017 – 2021 க்கு இடைப்பட்ட ஆண்டின் வெப்பநிலையை பார்க்கும் பொழுது 10 சதவீதம் 1.5°C யை நெருங்க கட்டாயம் அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
உலகளாவிய சராசரி வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது நாம் பழகிய காலநிலையிலிருந்து நம்மை மேலும் மேலும் தூரமாக நகர்த்தி கொண்டு போகும் என ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய வானிலை நிபுணர், விஞ்ஞானி டாக்டர் லியோன் ஹெர்மன்சன் கூறியுள்ளார்.
WMO வெளியிட்ட அறிக்கையில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விடயங்கள்:
- 2022 ம் ஆண்டில் உலககின் சராசரி வெப்பநிலையானது 1850-1900 சராசரியை விட 1.15°C அதிகமாக இருக்கிறது.
- கடந்த மூன்று ஆண்டுகள் லா நினோ எனப்படும் இயற்கையான குளிரூட்டும் தன்மை அதிகமாக இருந்ததால் உலகின் வெப்பமயமாதல் கட்டுப்படுத்தபட்டு வந்துள்ளது. 2023 மார்ச் மாதத்தோடு லா நினோ முடிவடைந்து எல் நினோ உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எல் நினோ வளர்ச்சியடைந்த வருடத்தில் உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கும். எனவே வெப்பமயமாதல் அதிகரித்து வெப்பநிலை அதிகரித்த ஆண்டாக 2024 இருக்கும்.
- 2023 மற்றும் 2027 க்கு இடையிலான ஒவ்வொரு ஆண்டின் சராசரி உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலையானது 1850-1900 (மனித மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளில் இருந்து பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு இருந்த காலம்) காலக்கட்டத்தின் சராசரியை விட 1.1 ° C முதல் 1.8 ° C வரை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- வலுவான எல் நினோ காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஆண்டாவது அதிகபட்ச வெப்பநிலை நிலவிய 2016 ம் ஆண்டின் நிலையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
- கடந்த ஐந்தாண்டுகளை விட வரும் 2023 – 2027 க்கான சராசரி வெப்பநிலை 98% கட்டாயம் அதிகமாக வாய்ப்புள்ளது.
- ஆர்டிக் வெப்பமயமாதல் அதிகமாக இருப்பதால் 1991 – 2020 காலத்திய சராசரி வெப்பநிலையை விட மூன்று மடங்கு அதிகரித்து காணப்படும். அதேபோல கோடை காலங்களில் முன்னறிவிப்பின்றி மழை பெய்ய கூடும்.
(இதில் குறிப்பிடப்பட்டுள்ள பாரீஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றம் தொடர்பான சட்டப்பூர்வ சர்வதேச ஒப்பந்தமாகும் . இது 12 டிசம்பர் 2015 அன்று பாரீஸ், பிரான்சில் நடந்த ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் (COP21) 196 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கொண்டுவரப்பட்டதாகும். இது 4 நவம்பர் 2016 அன்று நடைமுறைக்கு வந்தது. “உலகளாவிய சராசரி வெப்பநிலையின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய குறிக்கோள்”.
இந்த நூற்றாண்டில் உலகளவில் வெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் நிலைநிறுத்த வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது).
– நந்தகுமார்