நிலக்கரி கொள்கை

காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்

மிக மோசமான காற்று மாசுபாட்டைக் கொண்ட உலகின் 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக IQ Air Visual’s எனும் நிறுவனத்தின் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இந்தியாவின் பெரும்பகுதி கடுமையான காற்று மாசுபாட்டால் சிக்கியுள்ள நிலையில், அனல் மின் துறையில் ஒன்றிய மோடி அரசு செய்துள்ள சீர்திருத்தங்கள், குறிப்பாக உள்நாட்டில் நிலக்கரியை உற்பத்தி செய்ய முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது. 

நாட்டின் பல பகுதிகளில் அனல் மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசுபடுகளை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் தற்போது இந்த தளர்வுகள் அதிர்ச்சி தரும் விதமாக வழங்கப்பட்டுள்ளன. 

G20 நாடுகளின் மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தம் குறித்த பிரதமரின் உரையில் உள்ள முரண்

கடந்த ஞாயிற்றுக் கிழமை G20 நாடுகளின் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கு இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், அதற்கு உதாரணங்களாக சாதாரண மின்விளக்குகளுக்கு பதிலாக LED மின்விளக்குகளை கொண்டுவருவதாகவும், வீடுகளை சமையல் எரிவாயு பயன்படுத்தும் வீடுகளாக மாற்றுவதாகவும் சொன்னார். பருவநிலை மாற்றத்தை குறைப்பது குறித்தான பாரிஸ் ஒப்பந்தம் முன்வைத்த இலக்குகளை விடவும், கார்பன் வெளியீட்டைக் குறைப்பதில் மிகத் தீவிரமாக இந்தியா செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

ஆனால் பருவநிலை மாற்றத்தின் முக்கியக் காரணியான கார்பனை அதிகமாக வெளியிடக்கூடிய அனல்மின் நிலையங்கள் தொடர்ச்சியாக அதிகப்படுத்தப்பட்டு வருவதைப் பற்றியும், உள்நாட்டு உற்பத்தி என்ற பெயரில் நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்படுவதைப் பற்றியும் அவர் பேசவில்லை.

அனல்மின் நிலையங்களின் நிலக்கரி சாம்பல்கள் (Fly Ash) ஏற்படுத்தும் மாசுபாடு

அனல் மின் நிலையங்களில் நிலக்கரியுடன் வெளியேறும் சம்பல்கள், அதிக நச்சுக் கூறுகளைக் கொண்டதாகும். இவை அனல் மின் நிலையங்களில் நிலக்கரி எரிப்பிற்குப் பின் கிடைக்கும் துணைப் பொருட்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக குவியும் இந்த நிலக்கரி சாம்பலை முறையாக நிர்வகிக்காததன் விளைவாக அனல் மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான காற்று மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. 

இந்த சாம்பல்களை சேமித்து வைக்கும் குளங்கள் உடைபடுவதால் விளைநிலங்கள் மற்றும் வாழ்விடங்களில் நச்சு கலந்த நீர் பரவி அருகிலுள்ள நீர்நிலைகள் மாசுபடுவதோடு, பல உயிர் இழப்புகள் மற்றும் விவசாயப் பயிர்கள் சேதமடைவது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். 

மேலும் சில அனல்மின் நிலையங்கள் அதிகளவிலான சல்பர் உள்ளடக்கத்தைக் கொண்ட நிலக்கரியை பயன்படுத்துவதால் அதிக நச்சு வாய்ந்த சல்ஃபர் வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 

மத்திய மின்சார ஆணையத்தின் 2019-20ம் ஆண்டின் முதல் அரையாண்டு அறிக்கையின் படி, நிலக்கரியிலிருந்து வெளிப்படும் சாம்பல் கழிவுகளில் 78.19 சதவீதம் மட்டும்தான் மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் 105 அனல் மின் நிலையங்களில் 39 நிலையங்களில் மட்டுமே நிலக்கரி சாம்பலை 100% முறையாகப் பயன்படுத்தும் வசதியினைக் கொண்டிருக்கின்றன.

நிலக்கரி சாம்பல்களை அப்புறப்படுத்துவதில் அரசு செய்துள்ள தளர்வுகள்

  • அனல் மின் நிலையங்களில் 34% க்கும் குறைவான நிலக்கரி சாம்பலை வெளியிடும் நிலக்கரியை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத் தேவையை கடந்த மே மாதம் ஒன்றிய அரசு கைவிட்டது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரிகளில் 35% முதல் 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான சாம்பல்கள் இருக்கிறது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான நிலக்கரி வகைகள் 10 முதல் 15% வரை மட்டுமே சாம்பல் உள்ளடக்கத்தைக் கொண்டவை. 
  • மேலும் இந்த அறிக்கை இதற்கு முன் அனல் மின் நிலையங்களில் கட்டாயமாக செயல்படுத்தி வந்த கழுவுதல் முறையை நீக்கியுள்ளது (இந்த முறை நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, நிலக்கரியில் இருக்கும் சாம்பல் அளவை குறைக்க உதவும்).
  • இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நிலக்கரிகள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளில் சாம்பல் அளவு குறைவாகவே இருக்கும். எனவே இறக்குமதி செய்யப்படும்  நிலக்கரிகள் உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரிகளை விட விலை அதிகமாக இருக்கும். இதனால் அதிக அளவிலான சாம்பலைக் கொண்டிருக்கும் உள்நாட்டு நிலக்கரிகளைப் பயன்படுத்த முன்மொழிந்துள்ள புதிய கொள்கை முடிவுகளால் அடுத்த சில ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நவம்பர் 11-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் நிலக்கரியை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியது. அதாவது ஒரு அனல் மின் உற்பத்தி நிலையம் தற்போது ஒரு இடத்தில் பெற்றுவரும் நிலக்கரியை விட்டு வேறொரு புதிய இடத்தில் இருந்து நிலக்கரியைப் பெறுவதாக இருந்தால், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தை தளர்த்தி தகவல் தெரிவித்தால் போதும் என்கிற அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. 
  • மேலும் நவம்பர் 11 அறிக்கையில் ஒன்றிய அரசு, அனல் மின் நிலையங்களில் நிலக்கரி சாம்பல்களை சேமித்து வைக்கும் குளங்களை அதிகரிப்பதற்கான தேவையையும், கட்டாயத்தையும் முன்வைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *