தண்ணீர் தினம்

20 ஆண்டுகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு தண்ணீர் கிடைக்காது; தண்ணீர் தினம் சொல்லும் செய்தி என்ன?

மார்ச் 22 – சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

அனைத்தும் நவீனமாக மாறிவிட்ட காலத்திலும் இந்த பூவுலகில் வாழும் அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை வழங்க இயலாதது நம்முடைய ‘தார்மீகமான தோல்வி’ என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என கடந்த வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் ஐ.நா பொதுச்சபையின் செயலாளர் வோல்கன் போஸ்கிர் (Volkan Bozkir) தெரிவித்திருக்கிறார். 

“நான் நேர்மையாக சொல்வதானால், இப்போது நாம் வாழும் காலகட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் கண்டுபிடிப்பதிலும் சாதனைகளைக் கண்டு உச்சத்தில் இருக்கிறோம். ஆனால் இதே நவீன உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மட்டுமல்ல அடிப்படை தேவைகளுக்கும், கொடிய கொரோனா காலத்தில் அவர்களின் கையை கழுவுவதற்கும் கூட சுத்தமான நீரை வழங்க இயலாத ‘தார்மீக தோல்வி’ அடைந்திருக்கிறோம்” என வருந்தியிருக்கிறார்.

அனைவருக்கும் பாதுகாப்பான நீரை வழங்குவது குறித்தான குறிக்கோள்கள்

ஐ.நா பொதுச்சபையில் நடந்த இந்த அமர்வு உலக மக்கள் அனைவருக்குமான பாதுகாப்பான நீரை வழங்குவது குறித்தான குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை வகுத்து அவற்றை வரும் 2030-ம் ஆண்டிற்குள் நிறைவேற்றுவது பற்றிய அடிப்படை கருதுகோளை பகிர்ந்திருக்கிறது. 

எவரையும் புறக்கணிக்காமல் ‘நீடித்த வளர்ச்சிகொண்ட இலக்கு 6’ (Sustainable Development Goal -SDG 6) என்று இலக்கை குறிப்பிட்ட இந்த அமர்வு குடிநீர் மற்றும் சுத்தப்படுத்துதல் என்று பல்வேறு அம்சங்களை கணக்கிலெடுத்து நடைபெற்றிருக்கிறது.

2018-2028 நீர் குறித்த நடவடிக்கைகளுக்கான பத்தாண்டுகள்

அதே வேளையில் ஐ.நா பொதுச்சபை 2018 லிருந்து 2028 வரையிலான ஆண்டுகளை ’நீர் குறித்த நடவடிக்கைகளுக்கான பத்தாண்டுகள்’ என்று அறிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தில் நீர்நிலைகளின் மீதான சர்வதேச அழுத்தங்கள், சிக்கல்கள் மற்றும் அதிகரித்து வரும் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற காலநிலை அபாயங்களையும் சேர்த்து விவாதித்திருக்கிறது.

கொரோனா தொற்று காலத்திலும் அனைவருக்கும் கிடைக்காத சுகாதாரமான நீர்

கொரானா தொற்றுநோய் காலத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு சுகாதாரமான நீர் கிடைக்கவில்லை. இது நீர் தொடர்பான “உலகளாவிய சமத்துவமின்மையை” குறிப்பதாக தெரிவித்திருக்கிறார். “இதுவரை நடந்திருப்பதை நம்மால் ஒருபோதும் மாற்றயியலாது. ஆனால் நம்முடைய தோல்விகளை ஒப்புக்கொண்டு அடிப்படை தவறுகளையும், திட்டங்களை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளையும் கண்டறிந்து அவற்றை வேரோடு களைய நாம் இப்போதே திட்டங்களைத் தீட்ட வேண்டும்” என்கிறார் போஸ்கிர்.

நான்கில் ஒரு குழந்தைக்கு சுகாதாரமான நீர் கிடைக்காது

‘நீடித்த வளர்ச்சி கொண்ட இலக்கு 6’ ன் குறிக்கோள்களை நிறைவேற்றுவதன் மூலமாக இனிவரும் காலத்தில் இதேபோன்ற தொற்றுநோய் பரவும் சூழ்நிலை அல்லது எத்தகைய பேரிடர்கள்  ஏற்பட்டாலும் நம்மால் எளிதாக எதிர்கொள்ள இயலும்” என ஐ.நா பொதுச்சபையின் துணைச் செயலர் அமினா முகமது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நைஜீரியாவை சேர்ந்த அமினா முகமது, நீர் தொடர்பான இத்தகைய சிக்கல்கள், காலநிலை மாற்றம், பல்லுயிர்களின் இழப்பு, மாசுபாடு போன்ற காரணிகள் தண்ணீர் பற்றாக்குறையை நோக்கி இப்பூவுலகை தள்ளுகின்றன என்கிறார். 

மேலும் எதிர்வரும் 2040-ம் ஆண்டில் பதினெட்டு வயதிற்குட்பட்ட நான்கில் ஒரு குழந்தை (சுமார் 600 மில்லியன்) பாதுகாப்பான, சுத்தமான நீர் மறுக்கப்பட்ட சூழ்நிலையில் வாழக்கூடிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்.

குடிநீருக்கான சட்டப்பூர்வமான உரிமை தேவை

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) தலைவர் முனீர் அக்ரம், பாதுகாப்பான குடிநீரை குடிமக்களுக்கு வழங்குவதற்கு சட்டப்பூர்வமான உரிமையை அனைத்து நாடுகளும் ஏற்படுத்த வேண்டும். மேலும் நீர் தொடர்பான பிரச்சனைகள் பாலின சமத்துவத்தையும் குலைக்கின்றன. நீர் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும்போது அங்கு வசிக்கும் பெண்களின் உடல்நலனில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி கற்பதற்கான சூழல்கள் முற்றிலும் நிலைகுலைகின்றன. ஆனால் உண்மையில் விவசாயத்திலும், இயற்கை வளங்களை காப்பதிலும் பெண்களின் பங்கே அதிகம் என்கிறார்.

நீர் தொடர்பான மன அழுத்தம்

2050-ம் ஆண்டில் நீர் தொடர்பான மனஅழுத்தம் உலகில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்களை பாதிக்கும் என்றும், வறட்சியால் நிலம் பாலைவனமாவதால் சில ஆண்டுகளில் 100 நாடுகளில் ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படுவார்கள் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காலநிலை அகதிகளாகப் போகும் மக்கள்

கடுமையான நீர் பற்றாக்குறையால் வரும் 2030-ம் ஆண்டிற்குள் 700 மில்லியன் மக்கள் காலநிலை அகதிகளாக புலம்பெயரக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கே பாதிப்பு அதிகம்

இந்த கூட்டத்தில் “உலகின் நீர் நெருக்கடி வெறுமனே வரவில்லை. அது ஏற்கனவே இங்கே உள்ளது, காலநிலை மாற்றம் அதை மோசமாக்கும்” என்று யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர் கூறினார். மேலும் “குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவர்கள். கிணறுகள் வறண்டு போகும் போது ​​குழந்தைகளும் தண்ணீர் எடுக்க ஈடுபடுத்தப்படுவார்கள். அதனால் பள்ளி இடைநிற்றல் அதிகமாகும் . வறட்சியால் உணவு தானியங்களின் விளைச்சல் பாதிக்கப்படும்போது ​​குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் ஏற்படக்கூடும். கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அங்கு வாழும்  ​​குழந்தைகள் நீரினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினார். 

நீர் வறுமை

யுனிசெஃப் அறிக்கையில் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் “நீர் வறுமையில்” வாழும் குழந்தைகள் அதிகம் இருப்பதாகவும், அங்கு ஏறத்தாழ 60% சதவீதம் பேர் ஒவ்வொரு நாளும் தண்ணீரைப் பெறுவதில் பல்வேறு சிரமத்தை எதிர்கொள்வதாகவும் இந்த கூட்டத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச தண்ணீர் தினமான இன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆற்றலாக இருக்கும் தண்ணீர் பற்றிய புரிதல்களை நம் குழந்தைகளுக்கு வழங்கி தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *