அசாம் எண்ணெய்க் கிணறு தீ விபத்து

அசாமில் 80 நாட்களாக அணைக்க முடியுமால் எரியும் எண்ணைக் கிணறு! ஹைட்ரோகார்பனால் இப்படி நடக்குமா?

அசாம் மாநிலம் பக்ஜான் பகுதியில் உள்ள எரிவாயுக் கிணற்றில் கடந்த மே மாதம் 27-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறையினர் கடுமையான முயற்சி செய்து வந்தனர். 80 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. தற்போது எரிவாயுக் குழாயை மூடுவதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வால்வு (Blowout Preventer Cap)  ஒன்றின் மூலமாக குழாயின் மேல் பகுதியினை மூடி தீயினைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலே மூடப்பட்ட வால்வின் மீதும், அதனுடைய இணைப்புகளின் மீதும் தொடர்ச்சியாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, அது குளிர்ந்த நிலையில் இருக்கும்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக நீர்ம பொருட்களை ரசாயன மண்ணுடன் சேர்த்து குழாயிற்குள் செலுத்தி தீயினை அணைக்க முயல வேண்டும். இது ஆபத்தான செயல்தான் என்றாலும் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடக்கும்பட்சத்தில் 24 மணிநேரத்தில் தீயானது அணைக்கப்பட முடியும் என்று ஆயில் இந்தியா லிமிட்டெட் (OIL) நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயுக் குழாயினை மூடி தீயினை அணைக்க முயலும் இந்த முயற்சி மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியாகும். முதலில் ஜூலை 31 அன்றும், இரண்டாவதாக ஆகஸ்ட் 10 அன்றும் மூடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது. 

மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

ஜூன் முதல் வாரத்தில் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் கிராமவாசிகள், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் ஏழு நபர்கள் உயிரிழந்தனர்.மேலும் அந்த எரிவாயுக் குழாயை சுற்றி ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்குள் இருந்த 3000 பேர் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த எரிவாயுக் குழாய் விபத்தினால் அந்த பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டங்களும், நீர் நிலைகளும் முற்றிலுமாக நாசமாகியுள்ளன. அந்த கிராமத்தில் பல வீடுகள் எரிந்து போயின. ஒரு எரிவாயுக் கிணற்றில் விபத்து ஏற்பட்டால் அது எவ்வளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை இச்சூழல் மக்களுக்கு உணர்த்தி இருக்கிறது.

ஆயில் இந்தியா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்ற முறை

ஆயில் இந்தியா நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான உரிமத்தினைப் பெற்று 2011-ம் ஆண்டு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியிருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயுவினை தொடர்ந்து எடுத்துவந்த அந்த நிறுவனம், அதன்பிறகு 2016-ம் ஆண்டு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான சோதனைப் பணிகளை துவங்க முடிவெடுத்தது. 

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களை மக்களிடம் நடத்தாமல், 2011-ம் ஆண்டு  எண்ணை மற்றும் எரிவாயுப் பணிகளுக்கு மட்டும் நடத்திய அந்த பழைய கருத்துக்கேட்புக் கூட்டங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டே,  ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளுக்கும் ஆணை வழங்குமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தது. சுற்றுச்சூழல் அமைச்சகமும் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கிவிட்டது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆயில் இந்தியா நிறுவனம் பயன்படுத்திய வழிமுறையானது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தினை உருவாக்கியுள்ளது.

பிப்ரவரி 2017-ல் நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூட்டத்தின் குறிப்புகள் – நன்றி-The wire

இந்திய அரசு சுற்றுச்சூழல் தர மதிப்பீட்டு விதிகளில் செய்த மாற்றங்கள்

கடந்த 2020 ஜனவரி மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் தர மதிப்பீட்டின்(EIA) விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன்படி, ஒரு பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) எடுக்கும் பணிகளை மேற்கொள்ள மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களே நடத்த வேண்டிய அவசியமில்லை.மேலும் சூழலியல் தர மதிப்பீடு அறிக்கையும் (EIA) சமர்ப்பிக்கத் தேவையில்லை எனும் மாற்றத்தை செய்தது. இதனைத் தொடர்ந்து ஆயில் இந்தியா நிறுவனம் அசாம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கூட பரிசீலிக்காமல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளை அடுத்தடுத்து விரிவாக்கத் தொடங்கியது. 

ஆயில் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியதால் அசாம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பக்ஜான் பகுதியில் செயல்பட்ட எண்ணெய்க் கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளது.

அனுபவமில்லாதவர்களை அனுமதிக்கும் OALP கொள்கை

பக்ஜான் எரிவாயுக் கிணறுகளை ஆயில் இந்தியா நிறுவனத்திடமிருந்து ஏலத்தில் எடுத்த குஜராத்தை மையப்படுத்திய ஜான் எனர்ஜி போன்ற தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக, மக்களின் கருத்து கேட்பினை மறுத்து இத்தகைய இயற்கை வளக் கொள்ளை நடப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். “எண்ணைக் கிணறுகளை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் தகுந்த முன் அனுபவமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்பது போன்ற சரத்துகளை உள்ளடக்கி இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட Open Acreage Licencing Policy (OALP) கொள்கையானது, இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். 

காவிரி டெல்டா மக்களின் அச்சம்

80 நாட்களாக பற்றி எரியும் இந்த தீ, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அசாமில் பற்றி எரியும் இந்த தீயானது தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளை விரிவாக்க ஆயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட வழிமுறைகளும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அசாமில் எரிவது போல, காவிரி டெல்டாவும் எரியும் காடாக மாறிவிடக் கூடாது என்பதுதான் மக்களின் எண்ணமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *