கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஐந்து அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் 7-ம் தேதி இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 6-வது யூனிட்டில் இயங்கிவரும் கொதிகலன் வெடித்து சிதறியது. அதில் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஜீலை மாதம் 1-ம் தேதி அதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் பைப்லைன் வெடித்தது, சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
1986-ம் ஆண்டு கட்டப்பட்ட நெய்வேலி அனல்மின் நிலையத்தின் குறிப்பிட்ட கொதிகலன் நாள் ஒன்றுக்கு 1470 மெகாவாட் மின் உற்பத்தியினை செய்துவருகிறது. அந்த கொதிகலனின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் மட்டுமே. காலம் அதிகமாக அதிகமாக அதன் உற்பத்தியை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நடைமுறை. ஆனால் அந்த கொதிகலன்கள் தற்போது 32 ஆண்டுகளைக் கடந்து விட்டது. அதனைப் பயன்படுத்தி அக்கலனின் அதிகபட்ச தாங்குதிறனையும் தாண்டி 220 மெகாவாட் வரை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதான் இது போன்ற விபத்திற்கு முக்கியக் காரணம் என்று அங்கிருக்கும் தொழிற்சங்கவாதிகள் தெரிவிக்கிறார்கள்.
25 ஆண்டுகளைக் கடந்த கொதிகலன்களுக்கு Life Extension Program என்ற ஆயுள் நீட்டிப்பு சான்றிதழ் பெறாமலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. பணிஉயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறவேண்டும் என்றால் அதிகமான உற்பத்தியைக் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. அதாவது உற்பத்திக்கு ஏற்ப ஊதிய உயர்வு என்ற முறையை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இங்கு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவும் உற்பத்தியை உயர்த்திக் காட்டுவதற்காக திறனில்லாத கலன்களை உற்பத்திக்கு பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்தும் வழிமுறைகள் தொடர்ச்சியாக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல் செலவு குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக சொல்லி, 45 நாட்கள் பராமரிப்பு செய்ய வேண்டிய கொதிகலன்களை, வெறும் 10 நாட்களுக்குள் அவசர அவசரமாக குறைந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவிட்டு செலவைக் கட்டுப்படுத்துவதாக பாவனை காண்பித்து உயிர்களை பலியிடுகின்றனர். அனல்மின் நிலையத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 பொறியாளர்கள் இருக்கவேண்டும். ஆனால் அந்த கட்டாய விதியை தளர்த்தி ஒரு பிரிவுக்கு ஒரு நபர் போதும் என்று ஆட்குறைப்பு செயதுள்ளது நிர்வாகம். அதேபோல் எந்தவித முன் அனுபவமும் இல்லாத வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர்.
இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாக நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்து வரும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. நிர்வாகத்தின் இந்த மோசமான நடவடிக்கைகளினால் அப்பாவி தொழிலாளர்கள் பலியிடப்படுவது தொடர்ந்து வருகிறது. பாதுகாப்பு குறித்து எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் நிர்வாகத்தின் விதிமீறல் நடவடிக்கைகளினால் தொழிலாளர்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.