சதுப்பு நிலம் என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கக் கூடிய சிறு தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளும் வசிக்கும் பகுதியாகும்.
உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகை சதுப்பு நிலங்கள் உள்ளன. சதுப்பு நிலங்களில் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் என்பர். அலையாத்தி தாவரங்கள் சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அமைப்பு
சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம் நன்னீரையுடைய இயற்கையான சதுப்புநிலமாகும். சென்னை நகரின் தென்பகுதியில் வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளது. பள்ளிக்கரணை சதுப்புநிலம்தான் சென்னையின் ஒரே சதுப்புநிலமாகும்.
ஆக்கிரமிப்புகள்
1965-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாகவும், மேலும் 1,085 தனியார் குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் ரயில் நிலையத்தால் 100 ஏக்கர் சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.25 ஏக்கர் சதுப்பு நிலம் தேசிய கடல் சார் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய காற்றாலை நிறுவனம் மற்றும் பல தனியார் ஐ.டி நிறுவனங்களாலும் சதுப்பு நிலமானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையின் உயிர்ச்சூழல்
கழிவுநீரை சுத்திகரிக்கும் தன்மையோடு நீர்வாழ் உயிரினங்களின் புகலிடமாக கோரைப்புற்கள் நிறைந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளது. 29 வகையான புற்கள் உட்பட சுமார் 114 வகை செடிகள் இந்த சதுப்பு நிலத்தில் உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.
164 வகை பறவைகள், 10 வகை பாலூட்டிகள், 21 வகை ஊர்வன, 50 வகை மீன்கள், 9 வகை நீரினங்கள் மற்றும் நத்தைகள், 5 வகையான ஒட்டுமீன்கள் மற்றும் 7 வகையான பட்டாம்பூச்சிகள் என இந்த சதுப்பு நிலத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.
கருப்பு வால் கொண்ட காட்விட், கிரேட் நாட், வண்ண ஸ்டார்க் பறவை என அழிவின் விளிம்பில் உள்ள 18 சர்வதேச பறவைகளுக்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியானது சரணாலயமாக உள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய வகை பறவைகள் வருடந்தோறும் இங்கு வருகின்றன.
1000 கோடியில் தூர்வாரும் திட்டம்
இத்தைகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தை தூர் வாருவது என்று சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பதாகவும், அதன் அருகமைப் பகுதியில் வெள்ளம் தேங்காமல் இருக்க 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை முதலைமச்சர் துவங்கி வைப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தென்சென்னையில் உள்ள 55-க்கும் மேற்பட்ட ஏரிகளின் வடிகாலாக இருக்கிறது. மேலும் அது இயற்கையான நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனை இப்படி தூர்வாருவதன் மூலம் உயிரியல் சூழலில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சதுப்பு நிலத்தை தூர்வாரி ஆழப்படுத்துவது சரியா?
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வாருவது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் அவர்களை மெட்ராஸ் ரேடிகல்ஸ் சார்பாக தொடர்புகொண்டு கேட்டோம். அப்பொழுது அவர் கூறியது,
”சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தில் ’(சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் (Wetland (Conservation and Management) Rules)’ என்று இருக்கிறது. இது குறித்து 2010-ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள ஈரநிலங்களில் ஒரு இடம் மட்டும்தான் அறிவிக்கப்பட்ட ஈரநிலமாக (Notified Wetlands) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களாக தமிழ்நாட்டில் 123 இடங்கள் இருக்கின்றன. இதில் 90 இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டிலும், மீதமுள்ளவை பொதுப்பணித் துறையின் கட்டுபாட்டிலும் இருக்கின்றன.
பள்ளிக்கரணையைப் பொருத்தவரை அது இன்னும் அறிவிக்கப்பட்ட சதுப்புநிலமாக (Notified Wetland) அங்கீகரிக்கப்படவில்லை. அதன் ஒரு பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பரமாரிப்புப் பணிகளை பொதுப்பணித்துறை செய்கிறது.
ஒரு சதுப்பு நிலத்தை தூர் வாருவது என்று முடிவெடுத்தால் சட்டரீதியாக சில வழிமுறைகள் இருக்கிறது. இயற்கையான ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இயங்கியல் தன்மை இருக்கிறது. அந்த பகுதிக்கான இயங்கியலைக் கண்டறிய ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து ஒரு Integrated Management Plan உருவாக்க வெண்டும். இது சதுப்பு நிலப் பாதுகாப்பு சட்டத்தின் விதியாகும்.
அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலமாக இருந்தால் இப்படித்தான் செய்யப்பட வேண்டும். இதுதான் அறிவியல் பூர்வமான செயல்பாடாகும்.
சதுப்பு நிலத்தில் தூர்வாரும் பணி என்பது பொக்லைன் வைத்து மண்ணை அள்ளுவதல்ல
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லை சுருங்கியுள்ளது. ஒரு பகுதியில் குப்பை கொட்டி வைக்கப்படுகிறது. அதற்கு வரும் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இப்பொழுது உள்ள பிரச்சினைகள். இப்படிப்பட்ட சதுப்பு நிலத்தில் தூர்வாரும் பணி என்பது ஒரு பொக்லைனை வைத்து மண்ணை அள்ளுவது அல்ல.
ஓவ்வொரு வண்டல் மண்ணுக்கும் தனியான குணாதிசயங்கள் உண்டு. அவை இடத்திற்கு ஏற்பவும், அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்பவும் மாறும். சில இடங்களில் அங்கு இருக்கும் உயிரினங்களுக்கு அந்த மண் தேவை இருக்கும். அங்கு மண்ணை எடுக்கக் கூடாது.
எதை எடுக்க வேண்டும், எதை எடுக்கக் கூடாது என்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
கிராமங்களில் இருக்கும் குளம், கண்மாய், குட்டை போன்றைவைகள் செயற்கையாக உருவாக்கியது. அதிலும் வண்டல் மண் எங்கு எடுப்பது, அதனை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு அங்கிருக்கும் பாரம்பரியமான வழிமுறைகள் இருக்கும். நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் தெரியும், அங்கே வருடந்தோறும் மீன் பிடிப்பது இல்லை. வருடத்தில் ஒருநாள் முடிவுசெய்து மீன்பிடிப்பார்கள். இதுதான் இயற்கையைப் புரிந்து கொண்டு செயல்படுவது. அங்கு செய்யும் குடிமராமத்து பணியைப் போல சதுப்பு நிலங்களிலும் அப்படியே செயல்படுத்த முடியாது.
நிலப்பகுதி மற்றும் உயிரினங்கள் குறித்த ஆய்வு தேவை
இயற்கையில் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் தனித்தனி தன்மைகள் உண்டு. அங்கு அந்த நிலத்திற்கான உயிரினங்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து ஆய்வுசெய்து Integrated Management Plan உருவாக்க வேண்டும். அதுதான் அறிவியல் அடிப்படையிலானதாக இருக்கும்.
அது இல்லாமல் வெறும் Engineering Aspects-ல் பார்த்து, அங்கு தண்ணீர் நிற்கிறது, வெட்டி விடாலாம் என்று செய்வது அழிவில்தான் முடியும். அரசாணை மூலம் தமிழகத்தில் இவ்வளவு ஏரிகளை தூர்வாரி இருக்கிறோம் என்று எண்ணிக்கையின் அடிப்படையில் செயல்படுவது யாருக்கும் பலன் அளிக்காது. நீண்டகால நலனுக்கான ஒரு நிலைத்த தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால் முறையாகக் குழு அமைத்து ஆய்வு செய்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.