வெப்ப அலை

வெப்ப அலைகளால் தகிக்கும் அமெரிக்கா, கனடா. தீவிரமாகும் காலநிலை மாற்றம்

குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்த பின்னும் இந்த மனித குலத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது இயற்கை. இயற்கையின் கொடையிலிருந்து கிடைக்கும் அனைத்திலும் மனித இனத்தின் நலன்கள் மட்டுமல்லாமல் இந்த பூவுலகின் அனைத்து உயிரிகளின் நலன்களும் அடக்கம். ஆனால் இப்போது இயற்கை முற்றிலுமாக அனைத்து உயிர்களுக்கும் எதிராக திரும்பியிருக்கிறது. இதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான் அது மனித இனத்தின் தவறுகள், இயற்கைக்கு எதிரான சுரண்டல்கள். கணக்கில்லாத இயற்கை வளங்களை சுயநலனுக்காக அணுகிய அனைவராலும் இன்று மிகுந்த அபாயத்தின் விளிம்பிலிருக்கிறது இப்பூவுலகு.

கடந்த சில வருடங்களாகவே இயற்கையின் இந்த போக்கு வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தீடீரென்று மாறும் இயற்கையின் சீற்றங்கள் நிலநடுக்கங்களாகவோ, புயல்களாகவோ அல்லது மிகக்கொடுமையான வறட்சியாகவோ இயல்புக்கு மாறாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. இதில் கடந்த சில நாட்களாக  ரஷ்யா, அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகள், கனடா நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடும் வெப்ப அலையில் தகிக்கின்றன. இதுவரை அங்கு நிலவிய வரலாற்று வெப்பநிலைகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக முறியடிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் கடுமை தாங்க இயலாத வகையில் தினந்தோறும் உயர்ந்துகொண்டே வருகின்றது.

வெப்ப அலை என்பது…

வெப்ப அலை எனப்படுவது அங்கு நிலவக்கூடிய வழக்கத்திற்கு மாறான வெப்பம் நிலவும் காலநிலையைக் குறிக்கிறது. இது பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் நீடிக்கக்கூடியது. ஒரு பகுதியில்  அங்கு உயரும் வெப்பநிலை அதன் வரலாற்று சராசரி வெப்பநிலை அளவை கடந்து நீடித்திருந்தால் வெப்ப அலை வீசியிருப்பதாகக் கருதலாம். வெப்ப அலைகளை எளிதாக சொல்வதென்றால் அது ஒரு ‘சிறைப்பட்ட வளிமண்டலம்’ என்றும் சொல்லலாம். 

சித்தரிப்புப் படம்

உதாரணமாக – வருடந்தோறும் அமெரிக்காவின் அருகிலிருக்கும் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவின் சமவெளிகளில் நுழையும் உயரழுத்த வளிமண்டலம் அங்கு தன்னை நிலைநிறுத்துகிறது. இந்த வளிமண்டலம் ஏற்கனவே அங்கு நிலவும் வளிமண்டலத்தை கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த அழுத்தம் அங்கு நிலப்பகுதியிலிருந்து விண்ணை நோக்கி எழும் காற்றலைகளை தடுத்து அழுத்துகிறது. அப்படி அழுத்தப்படும் காற்று ஒரு சிறைப்பட்ட வளிமண்டல அமைப்பாக மாறி நிலத்திலிருந்து எழும் சூடான காற்றை அந்த பகுதியிலேயே சிறைவைக்கிறது. காற்று விண்ணை நோக்கில் எழாமல் போவதால் மழை பொழிவது தடைபடுகிறது. அங்கு சிக்கியிருக்கும் காற்று மேலும் மேலும் வெப்பமடைகிறது. இந்த நிலையையே வெப்ப அலைகள் எழுவதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதிகளிலும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியிலும் இப்போது நிலவும் கடும் வெப்ப அலையின் தீவிரம் இதுவரை மனிதர்களால் ஒருபோதும் பதிவு செய்யப்பட்டதல்ல. அதாவது நாகரீக மனித இனத்தின் அறிவியல் வளர்ச்சியில் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பநிலை இப்போது அங்கு நிலவுகிறது. பசிபிக் வடமேற்கு பகுதியின் வரலாற்றில் மிகக் கடுமையான வெப்ப அலைகள் அதன் உச்சக்கட்டத்தை இப்போது நெருங்குகிறது. அதன் வரலாற்று வெப்பநிலை பதிவுகளையும் இப்போது நிலவும் வெப்பநிலை அளவுகளையும் பார்ப்போம் .

முறியடிக்கப்பட்ட வரலாற்று வெப்பநிலை அளவுகள்

ஞாயிற்றுக்கிழமை (27/06/2021) போர்ட்லேண்ட் (Portland) 112 டிகிரி. (வரலாற்று பதிவு- 1981,107 டிகிரி)

சியாட்டில் (Seattle) 104 டிகிரியை எட்டியது ( 2009 முதல் அங்கு 103 டிகிரி வெப்பநிலையே நீடித்தது)

டால்ஸ், ஓரே (The Dalles, Ore) 115 டிகிரி. (1998 மற்றும் 1992ம் வருடங்களில் 111 டிகிரியை எட்டியது)

ரோஸ்பர்க், ஓரே (Roseburg, Ore) 113 டிகிரி (2020 மற்றும் 1946ம் ஆண்டுகளில் 109 டிகிரிநிலவியது)

சேலம், ஓரே (Salem, Ore) 113 டிகிரி (1927, 1941 மற்றும் 1981ம் ஆண்டுகளில் 108 டிகிரி நிலவியது)

ட்ரவுட் டேல், ஓரே (Troutdale, Ore) 112 டிகிரி  (1977 இல் 108 ஆக இருந்தது)

வான்கூவர், வாஷ் (Vancouver, Wash) 112 டிகிரி ( 2009ம் ஆண்டில் 108 டிகிரி நிலவியது)

யூஜின், ஓரே (Eugene, Ore) 111 டிகிரி (1981ல்108 டிகிரி நிலவியது)

மக்மின்வில்லே, ஓரே (McMinnville, Ore) 111 டிகிரி ( 1926 மற்றும் 1925ம் ஆண்டுகளில் 110 டிகிரி நிலவியது)

ஹில்ஸ்போரோ, ஓரே (Hillsboro, Ore) 109 டிகிரி (2006ல் 108 டிகிரி நிலவியது)

ஷெல்டன், வாஷ்(Shelton, Wash) 107 டிகிரி ( 2009ல் இருந்து 104 டிகிரி நிலவியது).

ஒலிம்பியா, வாஷ்(Olympia, Wash) 105 டிகிரி (இது 2009 மற்றும் 1981ம் ஆண்டுகளில் பதிவாகியது)

ஹொக்கியம், வாஷ் (Hoquiam, Wash) 103 டிகிரி ( 2016 முதல் 95 ஆக இருந்தது)

அஸ்டோரியா, ஓரே(Astoria, Ore) 101  டிகிரியை எட்டியது (1942ம் ஆண்டு நிலவிய வெப்பநிலை)

ஸ்டாம்பீட் பாஸ், வாஷ் (Stampede Pass, Wash) 93 டிகிரி( இது 2004ம் ஆண்டு நிலவிய வெப்பநிலை)

எச்சரிக்கப்பட்டுள்ள மக்கள்

அமெரிக்காவும் கனடாவும் இந்த வாரமும் அங்கு நீடிக்கக்கூடிய இந்த “ஆபத்தான” வெப்ப நிலைகள் குறித்து நாட்டின் குடிமக்களை எச்சரித்துள்ளன. இனி வெப்பநிலை அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அதற்கு காலநிலை மாற்றமே மிக முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அங்கு நிலவும் வெப்ப அலைகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து கனடாவின் ஆர்க்டிக் பிரதேசங்கள் வரையும் மற்றும் அமெரிக்காவின் இடாஹோ மாநிலம் வழியாக அமெரிக்காவின் உள்நிலப்பகுதியிலும் நீண்டுள்ளது.

சில பகுதிகளில் துபாயை விட அதிகமாக நிலவும் வெப்பநிலை

கனடாவின் சஸ்காட்செவன் (Saskatchewan) மாகாணத்திலிருக்கும் இரு நகரங்களான ‘யெல்லோ கிராஸ்’ (Yellow Grass) மற்றும் மிடேல் (Midale) நகரங்களில் 1937-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 45 டிகிரி செல்ஸியஸ் (113 பாரன்ஹீட்) பதிவாகியதே இதுவரை அங்கு வரலாற்று வெப்பநிலையாக இருந்தது. இந்த வெப்பநிலை கடந்த ஞாயிறு அன்று முறியடிக்கப்பட்டது அன்று அங்கு 46.6 டிகிரி செல்ஸியஸ் (116F)  அளவில் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இதுவரை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது நிலவும் வெப்பநிலை அதன் முந்தைய வரலாற்று சாதனைகளை முறியடித்துள்ளது.

கனடாவின் காலநிலை ஆய்வாளர் ‘டேவிட் பிலிப்ஸ்’ (Climatologist, David Phillips) இந்த நிகழ்வை பற்றி கூறும்போது தற்போது கனடாவின் சில பகுதிகளில் எப்போதும் வெப்பமாக இருக்கக்கூடிய மத்திய கிழக்கு நகரமான துபாயை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது என்றும், இது மேலும் இன்னும் சில நாட்களில் 47 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயரக்கூடும் என்றும் கணித்திருக்கிறார். அதிக வெப்பநிலையால் அங்கு குளிர்சாதன இயந்திரங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் மின்சார பற்றாகுறை ஏற்படக்கூடிய நிலைமை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மூடப்பட்ட நீச்சல் குளங்கள்

அமெரிக்காவில்  தற்போதுதான் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நீச்சல் குளங்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள் போன்ற குளிரூட்டப்பட்ட பகுதிகளை திறக்க அதன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தற்போது வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரத்தில் நீச்சல் குளங்களில் “பாதுகாப்பற்ற, ஆபத்தான வெப்பநிலை” நிலவுவதால் மீண்டும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

பழங்கள் உற்பத்தி பாதிப்பு

அதிக வெப்பநிலை பழங்கள் உற்பத்தியை பாதிக்கக்கூடும் என அஞ்சி பழ உற்பத்தியாளர்கள் பழங்களை அதன் அறுவடைக்கு முன்பாகவே பறிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். மேலும் அதிக வெப்பம் செர்ரி மற்றும் பிற பழங்களின் அறுவடையை பாதிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. பழங்களை பறிப்பதற்கு வேலைகளை  விடியற்காலையில் தொடங்கி தாங்க முடியாத வெப்பநிலை நிலவக்கூடிய மதிய உணவு நேரத்தோடு பணிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் விவசாயத் தொழிலாளர்களின் பணிநேரம் குறைகிறது அது அவர்களின் ஊதியம் குறையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி பல பரிணாமங்களில் இந்த வெப்ப அலைகள் அதன் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

விரைவில் தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தடகளப் போட்டிக்கான தகுதி சோதனைகள் கடந்த ஞாயிறு அன்று ஓரிகான் நகரத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நிறுத்தப்பட்டது. சில கொரோனா தடுப்பூசி மையங்களும் வெப்பம் காரணமாக மூடப்பட்டன. கரையோரத்தில் உள்ள சில பகுதிகள் இந்த வாரத்தின் பிற்பகுதியில் சிறிது குளிர்ச்சியடையக்கூடும், ஆனால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அதன் வெப்பநிலை மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் தீவிரமாகும் காலநிலை மாற்றம்

இந்த தீவிரமான வெப்ப அலைகள்  தொழில்புரட்சி காலத்திற்கு பின்பான தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டிருக்கின்றன. தொடர்ந்து கார்பன்-டை- ஆக்ஸைட் (CO2) உமிழ்வு   உயர்ந்து வருவதால் காலநிலை மாற்றம் இன்னும் தீவிரமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

தற்போதிருக்கும் நவீன அறிவியல் முறைகள் சில தீவிர நிகழ்வுகளை காலநிலை மாற்றத்துடன் இணைப்பதில் சிறந்தவையாக உள்ளன. அதாவது 2019ம் ஆண்டில் ஐரோப்பாவைத் தாக்கிய வெப்ப அலைகள்   கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வின் காரணமாகவே மிகஅதிக வெப்பத்துடன் உருவானதாக தெரிவிக்கின்றன.

தற்போது நாம் வாழும் பூவுலகின் வெப்பநிலை தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பநிலையிலிருந்து 1.1 டிகிரி செல்ஸியஸ் அளவில் உயர்ந்திருக்கின்றன. காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுகளின் குழுவானது 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவினை இந்த வெப்பநிலை மீறக்கூடாது அப்படி தாண்டினால் காலநிலை மாற்றத்தின் விளைவாக பெரும் அழிவுகளை இப்பூவுலகு சந்திக்கக்கூடும் என்று எச்சரித்திருந்தனர். ஆனால் விரைவிலேயே அந்த வெப்பநிலையை நாம் கடக்கூடும் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில ஆய்வாளர்கள் ஏற்கனவே நாம் அந்த வெப்பநிலையை கடந்துவிட்டதாகவும் இந்த பூவுலகு ‘மீண்டும் திரும்பயியலாத புள்ளியை’ கடந்து ஆண்டுகளாகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.

அனல்மின் நிலையங்களை மூடுவதாக அறிவித்த ஜி-7 நாடுகள்

காலநிலை மாற்றத்தினை பற்றிய அரசுகளின் நடவடிக்கை இன்னும் தொடங்காததாகவே இருக்கின்றன. சீனாவும் , இந்தியாவும் அதிகப்படியான அனல் நிலையங்களை உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஜி-7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அனல் மின்நிலையங்களை மூடுவோம் என்று அறிவித்தன ஆனால் இன்றுவரை அதற்கான முன்னெடுப்புகளை அவை தொடங்கவில்லை. இங்கிலாந்து மற்றும் பல நாடுகளும் 2050-ம் ஆண்டு தேவைக்காக என்று கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு  எடுப்பதற்காக அதிக இடங்களில் துளையிட்டு வருகின்றன.

உண்மையில் இது காலநிலை அவசரநிலை போல் தோன்றுகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசுகள்தான் உரிய மாற்றங்களை செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *