வங்கக்கடலில் சுழன்றடித்த அம்பான் புயல் இந்தியாவின் மேற்குவங்கத்தையும், வங்காளதேசத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா பேரிடருடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, அம்பான் புயல் மற்றுமொரு பேரிடராக வங்கக் கரையின் மக்களை சிதைவுக்குள் தள்ளியிருக்கிறது.
170 கி.மீ வேகத்தில் வீசிய அம்பான் புயல் மரங்களையும், மின்கம்பங்களையும், வீடுகளையும், டிரான்ஸ்பார்மர்களையும் அடியோடு சாய்த்திருக்கிறது. கடல் அலைகள் 5 மீட்டர் உயரம் வரை பொங்கியிருக்கின்றன. இதுவரையில் மேற்கு வங்கத்தில் 72 பேர் வரையில் இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இன்னும் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை அரசினால் மதிப்பிடவே இயலவில்லை.
மேற்குவங்கத்தில் இரண்டு மாவட்டங்கள் மிகப் பெரும் சேதத்தினை சந்தித்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். மின்சார மற்றும் தொலை தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
”ஒரு பக்கம் நாங்கள் கொரோனா வைரசோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் லட்சக்கணக்கான இடம்பெயர்ந்தவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல் தற்போது புயல் பெரும்பாதிப்பை கொடுத்திருக்கிறது. கொரோனாவை விட மோசமான பாதிப்பை அம்பான் புயல் கொண்டு வந்திருக்கிறது, பாதிப்பின் மதிப்பீடு 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருக்கும்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புயல் பிற்பகல் 2:30 மணியளவில் மேற்கு வங்கத்தின் டிகா (Digha) பகுதிக்கும் வங்காளதேசத்தின் ஹைதியா தீவுக்கும் இடையில் கரையை கடந்தது. பெருமழை பெய்து வருவதால் கொல்கத்தாவின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கொல்கத்தா மாநகரத்தின் ஒன்றரை கோடி மக்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளனர்.
கொல்கத்தா மற்றும் ஹெளரா நகரங்களை அடைவதற்கு முன் புயல் வலுவிழக்கும் என கருதப்பட்டது. ஆனால் கொல்கத்தா நகரையும் இப்புயல் சின்னாபின்னமாக்கியிருக்கிறது. கொல்கத்தா விமான நிலையமும் தண்ணீரில் தத்தளிக்கிறது.
புயல், வெள்ளம் என்பது வங்கக் கரையில் அடிக்கடி நிகழும் தொடர் இடர்களாக மாறியிருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் வங்கக் கரை சந்தித்த சக்தி வாய்ந்த புயலாக அம்பான் புயல்தான் இருக்கிறது. 1999-ல் அடித்த புயல் ஒடிசாவில் 10,000 மக்களை பலி கொண்டது. அதன் பிறகு அம்பான் புயல் தான் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
வங்கக் கரைப் பகுதி இதுவரை பல்வேறு புயல்களுக்கும், வெள்ளத்திற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொடுத்திருக்கிறது. அதன் காரணமாக இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களின் கரையோரங்களைச் சேர்ந்த 6,50,000 மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றி வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அதனால் பெருமளவிலான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா தொற்று தினந்தோறும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் சூழலில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பிடங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க இயலாத நிலையில், ஒரு பேரிடரிலிருந்து தப்பி இன்னொரு பேரிடரில் மக்கள் சிக்கும் அபாயமும் இருக்கிறது.
பாதிப்பின் முழுமையான அளவு இன்னும் தெரிய வரவில்லை. ஏற்கனவே கொரோனா பேரிடருக்கான நிதியைக் கோரி மேற்கு வங்க மாநில மம்தா அரசு இந்திய ஒன்றிய அரசிடம் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறது. இப்போது புயலும் இணைந்திருப்பது மாநில அரசினை மோசமான நிதிப்பற்றாக்குறை சூழலில் தள்ளியிருக்கிறது.
வங்காளதேச நாட்டில் 25 லட்சம் மக்களும், 5 லட்சம் கால்நடைகளும் பாதுகாப்பிடங்களை நோக்கி இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர். மேற்குவங்க மற்றும் வங்கதேச எல்லைப் பகுதி மாங்க்ரோவ் காடுகள் நிறைந்த வனப்பகுதியாகவும், அழிந்து வரும் வங்கப் புலிகள் இனத்தினைக் கொண்ட காடுகளாகவும் இருக்கிறது. இப்பகுதியில் அம்பான் புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு உயிர் சூழலியல் தன்மையின் மீதும் மிகப் பெரும் விளைவினை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசா அரசாங்கம் மாவட்ட ஆட்சியர்களை 48 மணி நேரத்தில் பாதிப்பு பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்கக் கோரியிருக்கிறது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் சுமார் 1.9 கோடி குழந்தைகள் ஆபத்தான சூழலில் இருப்பதாக UNICEF நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலின் முழுமையான பாதிப்புகள் இன்னும் வெளிவராத சூழலில் சமூக வலைதளங்களில் வெளியாகும் படங்களும், காணொளிகளுமே தற்போது புயலின் பாதிப்புகளை அறியச் செய்யும் விடயங்களாக இருக்கின்றன. வரும் நாட்களில் தான் புயலின் உண்மையான பாதிப்பின் கோர முகங்களை அறிய முடியும்.
உலக வெப்பமாதல் காரணமாக நிகழும் பருவநிலை மாற்றங்களின் காரணமாகத் தான் இப்படிப்பட்ட புயல்களும், தொற்றுநோய்களும் மிகவும் அடிக்கடி உருவாவதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பேரிடரின் போதும் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான உலகளாவிய தேவைகள் குறித்த விவாதங்கள் நிராகரிக்கப்பட்டு தற்காலிக கொள்கைகள் குறித்து மட்டுமே பேசப்பட்டு கடக்கப்படுகிறது. இதன் காரணமாக பேரிடர்கள் என்பவை நம் வாழ்வின் அங்கங்களாகவே மாறக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. பருவநிலை மாற்றத்தினை சரிசெய்வதற்கான உலகளாவிய விவாதங்கள் வீரியமாக எழாவிட்டால், பேரிடர்களோடு வாழவும், சாகவும் நாம் பழகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.