காலநிலை மாற்றமும் செல்வந்தர்களும்

1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வு

உலகில் வாழும் பாதி அளவு ஏழை மக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்சைடு) வெறும் 1% சதவீத பணக்காரர்கள் வெளியிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

1990-ம் ஆண்டிலிருந்து 2015-க்கு இடைப்பட்ட 25 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகையில் 1 சதவீதமே (63 மில்லியன் மக்கள்தொகை) உள்ள பணக்காரர்கள், சுமார் 3.1 பில்லியன் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக கரியமில வாயுவை வெளியிடுவதாக ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சமநிலையற்ற கரியமில வாயு வெளியேற்றத்தை எதிர்ப்போம் (confronting carbon inequality) என்கிற பெயரில் வெளிவந்துள்ள இந்த அறிக்கை ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகள் ஆகும். 

உலகத் தலைவர்கள் சந்தித்து உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் உலக நாடுகள் சந்திக்க இருக்கிற சவால்களை எதிர்கொள்வது குறித்து ஐ.நா பொதுச் சபையில் ஆலோசிக்க உள்ள நிலையில் இந்த அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.

ஆய்வுக்குழுவின் முடிவுகள்

25 ஆண்டுகளாக பல்வேறு வருமான குழுவினருக்கு இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வருமாறு:

  • உலகில் 52% கரியமில வாயு வெளியேற்றத்திற்குக் காரணமாக வெறும் 10% (630 மில்லியன்) செல்வந்தர்களே இருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் உலகின் முதல் 1% (63 மில்லியன்) செல்வந்தர்கள் 15% கரியமில வாயு வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கின்றனர்.
  • காலநிலை மாற்றத்தில் மோசமான விளைவுகள் நிகழ்வதைத் தடுக்க பாரிஸ் ஒப்பந்தத்தில் புவி வெப்பநிலையானது அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸ் மட்டும் அதிகரிக்கும் அளவிற்கு கார்பன் டை ஆக்சைடினை காற்றில் அனுமதிக்கலாம் என்று அளவு நிர்ணயிக்கப்பட்டிருகிறது. இந்த அளவு கார்பன் பட்ஜெட் எனப்படுகிறது. 10% பணக்காரர்கள் மட்டும் இந்த அளவில் மூன்றில் ஒரு பங்கு (அதாவது 33 சதவீதத்திற்கும் அதிகமான) கரியமில வாயுவை வெளியேற்றுகின்றனர். உலகின் பாதி அளவு ஏழை மக்கள் வெறும் இந்த அளவில் வெறும் 4% சதவீதத்தை மட்டுமே வெளியேற்றுகின்றனர்.
  • வருடந்தோறும் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவு இந்த 25 ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வின் அளவில் 37% அளவிலான உயர்வுக்கு வெறும் 5% பணக்காரர்கள் (315 மில்லியன்) மட்டுமே காரணமாக இருக்கின்றனர். 

உலக பெரும் பணக்காரர்களின் அதீத நுகர்வே காலநிலை மாற்றத்திற்கு காரணம்

ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும், இந்த அறிக்கையை எழுதியவருமான டிம் கோர்(Tim Gore) கூறியதாவது, “பணக்கார மக்களின் அதீத நுகர்வின் காரணமாக வேகமெடுக்கும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவிற்கு, ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களே அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கின்றது. மேலும் இந்த சமநிலையற்ற போக்கிற்கு முக்கியக் காரணம் பல்வேறு அரசுகளின் சமநிலையற்ற பொருளாதார நடவடிக்கைகளே ஆகும். கரியமிலவாயு வெளியேற்றத்தை மையப்படுத்தி உருவாகும் பொருளாதார வளர்ச்சியும் இதற்குக் காரணமாகும் என்று குறிப்பிட்டார்.

முன்னெச்சரிக்கை எடுக்காவிட்டால் 2030-க்குள் கார்பன் பட்ஜெட் அளவை தாண்டி விடுவோம்

கொரோனா லாக்டவுன் நடவடிக்கைகள் தளர்வடைந்து வருவதால் தற்போது மீண்டும் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து வருகிறது. வருடந்தோறும் கார்பன் வெளியேற்றம் குறைந்து வருகிறதா இல்லையா என்பதை கவனிக்காமல் விட்டால், கரியமில வாயு பட்ஜெட் அளவினை 2030-க்குள் தாண்டி விடுவோம்.

10% செல்வந்தர்கள் வெளியிடும் கரியமில வாயுவைத் குறைக்காமல், ஏழை மக்களின் மற்ற வழிகள் அனைத்தையும் நிறுத்தினாலும் கூட 2033-ம் ஆண்டிற்குள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டிவிடும் என அறிக்கை குறிப்பிடுகிறது.

1 டிகிரி வெப்பநிலை உயர்வு ஏற்படுத்திய விளைவுகள்

ஒரு டிகிரி செல்சியஸ் அளவிற்கான வெப்பநிலை உயர்வினால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் என்பதே இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளில் கடுமையான புயல்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. மேலும் ஆப்ரிக்கா பாலைவனப் பகுதிகளிலிருந்து ஏற்பட்ட வெட்டுக்கிளி படையெடுப்புகள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத் தீ இவை எல்லாவற்றிற்கும் காலநிலை மாற்றமே முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. இந்த விளைவுகள் எல்லாவற்றிலும் மிக மோசமாக பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்களே.

பெரும் செல்வந்தர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்

இந்த அறிக்கையின் மதிப்பீட்டின் படி உலகின் முதல் 10% செல்வந்தர்களை 2030-ம் ஆண்டு வரையில் தலா 10 மடங்கு குறைவாக கரியமில வாயுவை குறைத்து வெளியிடச் செய்தால், உலகளவில் கரியமில வாயுவின் வெளியேற்றம் 3 இல் 1 பங்கு குறைப்பதற்கு சமமானதாகும். 

அரசாங்கங்கள் செல்வந்தர்களின் முதலீடுகளால் வெளியிடப்படும் கார்பன் அளவினைக் கட்டுப்படுத்தி, எழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் நல்வாழ்விற்கு முதலீடு செய்தால் காலநிலை சீர்கேட்டை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் இரு தரப்பிற்கும் இடைப்பட்ட மிகப்பெரிய பொருளாதார சமமின்மையை போக்க உதவும். 

நில வழிப் போக்குவரத்து வழியாக பயன்படுத்தப்படும் ஆற்றலில் கிட்டத்தட்ட பாதி அளவிற்கான(45%) ஆற்றல்களை 10% செல்வந்தர்கள் மட்டும் பயன்படுத்துவதாகவும், வான்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ஆற்றல்களில் 4 இல் 3 பங்கு அளவிற்கான ஆற்றல்களையும் அவர்களே பயன்படுத்துவதாகவும் சமீபத்தில் வந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

மொத்த போக்குவரத்து சாதனகளால் மட்டும் மொத்தம் 4 இல் 1 பங்கு அளவிற்கு கரியமில வாயு வெளியேற்றபடுகிறது.அதிலும் SUV வகை கார்கள் உலக அளவில் 2010 முதல் 2018 வரையிலான காலத்தில் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்க இரண்டாவது மிகப் பெரிய காரணியாக அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்

கொரோனா காலத்திற்கு முன்பிருந்த, அதே காலாவதியான மாசுபடுத்துகிற நிலைமையுடன் பொருளாதார செயல்பாடுகளை தொடங்குவது சரியான நடவடிக்கை இல்லை எனவும், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அரசாங்கம் நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க பொருளாதார நடவடிக்கைகளுக்கு வேறு வடிவம் கொடுக்க வேண்டும் என்கிறார் இந்த அறிக்கையை வடிவமைத்த கோர்(Gore).

மேலும் அரசாங்கம் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த செல்வந்தர்களுக்கு அதிகமான வரியைப் போடவேண்டும் என்றும், கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் SUV வகைக் கார்கள் மற்றும் வான்வழிப் போக்குவரத்து சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனவும், அரசின் வருவாயை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கரியமில வாயுவை குறைவாக வெளியிடும் துறைகளில் முதலீடு செய்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2015-ல் கார்பனை அதிகம் வெளியிட்ட உலகின் முதல் 10 சதவீத பணக்காரர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஐந்தில் ஒரு பகுதியினர் சீனா மற்றும் இந்தியாவில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வந்தர்கள் என்பதற்கான வரையறையாக 38,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருமானம் உள்ளோர் வைக்கப்பட்டுள்ளனர். 

மூன்றில் ஒரு பங்கு கரியமில வாயுவை வெளியிடும் உலகின் முதல் 1% பணக்காரர்கள், அதாவது 109,000 அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக வருமானம் பெறுபவர்கள், பெரும்பாலும் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்களாக இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *