இந்தியாவின் 13 மாநிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது என்றாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தின் பிரதான பயிர்களில் மரவள்ளி கிழங்கு முக்கியமானதாகும். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு 6,991 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நொய்யல், வேட்டமங்கலம், நடையனூர், ஒரம்புபாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரிலும் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்து வருகிறார்கள்.
பல்வேறு உணவுப் பொருட்களுக்கு மூலப்பொருளாகவும், நூல் மற்றும் புதிய துணிகளுக்கு போடுவதற்கு பசை மாவு தயார் செய்யவும் பயன்படுகிறது. மரவள்ளி கிழங்கு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு மில்களுக்கு மூலப்பொருளாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நேரடியாக வியாபாரிகள் வாங்கி சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
மரவள்ளி கிழங்குகளில் உள்ள ஸ்டார்ச் சத்து புள்ளிகளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல் சவ்வரிசி விலை உயரும்போது மரவள்ளி கிழங்கிற்கு விலை அதிகரித்தும், குறையும் போது விலை குறைந்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் சவ்வரிசி, கிழங்கு மாவு உள்ளிட்ட மரவள்ளி கிழங்கு பொருட்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்திரப்பிரதேசம் மற்றும் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வெளிமாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்ப முடியவில்லை.
இதனால் மரவள்ளி கிழங்கின் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த மரவள்ளி கிழங்கு இப்போது 5,500 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.
ஜனவரி மாதம் பயிர் செய்யப்பட்ட மரவள்ளி கிழங்குகளை தற்போழுது நொய்யல் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால் ஏற்றுமதி செய்யமுடியாத நிலையால் விலை இன்னும் குறைந்து போகும் அபாயம் இருக்கிறது. சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு மூட்டைகளை பிற மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அனுப்ப தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும், இந்த பேரிடரில் இருந்து விவசாயிகளை மீட்க மரவள்ளி கிழங்கிற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.