இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் வருவாயைத் திரட்டும் நோக்கத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின்உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட நிறுவனங்களை தனியாருக்கு விற்று ரூ.6 லட்சம் கோடியைத் திரட்டுவதற்கான தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline) உருவாக்கியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டம் குறித்து 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ”பொதுச் சொத்துகளின் பங்குகளை விற்று உட்கட்டுமான துறையில் தனியார் நிதி புகுத்தப்படும்”. அதன் தொடர்ச்சியாக நேற்று தேசிய பணமாக்கல் திட்டத்தினூடாக 6 லட்சம் கோடி திரட்டும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கையில் அளிக்கப்படவுள்ள பொதுத்துறை நிறுவன சொத்துகள்
இத்திட்டத்தின் முதல் கட்டமாக இந்தியன் இரயில்வே, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI), விமான நிலையங்கள் (airports in Tier-II and Tier-III cities) எரிவாயு ஆணையம் (GAIL), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் பிற மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள் விற்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்துறை நிறுவனங்களின் 100 சொத்துக்களை தனியார் கையில் அளிப்பதன் மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இத்திட்டத்தின் அடிப்படையில் 26,700 கி.மீ நெடுஞ்சாலைகளும், 90 பயணிகள் ரயில், 400 ரயில் நிலையங்கள், 28,608 circuit km transmission lines, பாரத் நெட் ஃபைபர் நெட்வொர்க்கின் 2,86,000 கி.மீ, அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் டெலிகாம் நிகாம் லிமிடெட் ஆகியவற்றிற்கு சொந்தமான 14,917 கோபுரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தனியாருக்கு அளிக்கப்படும் விமான நிலையங்களும், சாலைகளும்
தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான சூரிய மின் உற்பத்தி, சொத்துகள் மற்றும் காவேரி டெல்டா பகுதியில் உள்ள எரிவாயு குழாய் திட்டங்கள் அனைத்தும் தனியாரிடம் அளிக்கப்பட உள்ளது. அத்துடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், புதுச்சேரி மற்றும் சென்னை ரயில் நிலையமும் இத்திட்டத்தில் அடங்கியுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கீழ்காணும் தேசிய நெடுஞ்சாலைகள் தனியாரிடம் அளிக்கப்பட உள்ளது.
- உளுந்தூர்பேட்டை – பாடாலூர் (94 கி.மீ)
- உளுந்தூர்பேட்டை – திண்டிவனம் (73 கி.மீ)
- திருச்சி – பாடாலூர் (38 கி.மீ)
- கிருஷ்ணகிரி – தேப்பூர்காட் (60 கி.மீ)
- ஓசூர் – கிருஷ்ணகிரி (60 கி.மீ)
- தாம்பரம் – திண்டிவனம் (46.5 கி.மீ)
- திருச்சி – காரைக்குடி பைபாஸ் (117 கி.மீ)
வருகிற 2022-ம் ஆண்டுக்குள் திருச்சி விமான நிலையம் தனியாருக்கு அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் தனியாரிடம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின்உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை உருவாக்குவதற்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை மக்கள் நாட்டின் நலனுக்காக ஒப்படைத்தனர். கடந்த 70 ஆண்டுகளில் அரசு ஊழியர்களால் உருவாக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான இந்த கட்டமைப்பு ஒரே திட்டத்தின் கீழ் தனியாருக்கு விற்கப்பட உள்ளது.
பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கப்படுவது பிற்காலங்களில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.