மோடி

பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!

நீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது. 

அரசாங்கத்தின் பணத்தைப் பெருக்குவதற்காக என்று காரணம் சொல்லி பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களில் இருக்கும் பல்வேறு நிலங்களை பயன்படாத சொத்துகள் என்று குறிப்பிட்டு விற்கப்பட இருக்கிறது. இந்த சொத்துகளை விற்பதன் மூலம் 10,000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறது. 

அரசாங்க நிலங்களை வாங்கவுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வசதியாக ஒரே தளத்தின் வழியாக சொத்துகளை விற்கும் வகையில் one stop shop என்ற பெயரில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கான பொறுப்பு முதலீடுகள் மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மை துறையிடம் (Department of Investment and Public asset Management – DIPAM) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 600 கோடி ரூபாய்க்கான சொத்துகள் இத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. BSNL, MTNL, BEML உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சொத்துகள் இதில் அடக்கம். சொத்துகளை விற்பது குறித்தான திட்டங்களை வகுக்குமாறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. 

100 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள சொத்துகள் இந்த டிஜிட்டல் தளத்தில் பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமாக எந்தெந்த துறையிடம் எவ்வளவு நிலங்கள் உள்ளன?

இந்தியாவின் அரசுத் துறை நிறுவனங்களிடம் 1 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க அளவுக்கான நிலங்கள் ரயில்வே துறையிடமும், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ராணுவம் உள்ளிட்ட துறைகளிடம் உள்ளன. 

ரயில்வே துறை – 2929.6 சதுர கி.மீ நிலங்கள்

நிலக்கரி – 2580.92 சதுர கி.மீ

மின்சாரம் – 1806.69 சதுர கி.மீ

கனரக தொழிற்சாலைகள் – 1209.49 சதுர கி.மீ

கப்பல் துறை – 1146 சதுர கி.மீ

இரும்பு – 608.2 சதுர கி.மீ

விவசாயத் துறை – 589.07 சதுர கி.மீ

உள்துறை அமைச்சகம் – 443.12 சதுர கி.மீ

மனிதவள மேம்பாட்டுத் துறை – 409.43 சதுர கி.மீ

பாதுகாப்புத் துறை – 383.62 சதுர கி.மீ

பாதுகாப்பு அமைச்சகத்தின் கையில்தான் அதிகபட்ச நிலம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக என்று சொல்லி பகுதியளவு விவரங்கள் மட்டுமே தரப்படுகிறது 383.62 சதுர கி.மீ ஏக்கர் நிலங்கள் பாதுகாப்புத் துறையிடம் இருப்பதாக காட்டப்படுகிறது. 2010-11ம் ஆண்டின் CAG அறிக்கையானது பாதுகாப்புத் துறையிடம் 7000 சதுர கி.மீ அளவுக்கான நிலங்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பது சரியா?

இந்தியன் ரயில்வே மட்டுமே 4.77 லட்சம் ஹெக்டேர் நிலங்களை சொந்தமாக வைத்திருக்கிறது. ரயில்வே துறையிடம் எவ்வளவு நிலங்கள் இருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மார்ச் 3, 2018 அன்று இந்த பதிலை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலப்பரப்பின் அளவு என்பது டெல்லியின் அளவைக் காட்டிலும் பெரியதாகும். 

ரயில்வே துறைக்கு இந்த நிலங்கள் கிடைத்ததன் பின்னால் பெரிய வரலாறு இருக்கிறது. பிரிட்டன் ஆட்சியில் 1850-ம் ஆண்டு ரயில்வே கட்டமைப்பு என்பது பொதுத் துறையாக அறிவிக்கப்பட்டு மக்களிடமிருந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சுதந்திற்குப் பின்பும் ஆங்கிலேயர் காலத்து நிலம் கையகப்படுத்தும் சட்டம் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

1951-1990 வரையிலான காலகட்டத்தில் ரயில்வே, அணைகள் கட்டுதல், கால்வாய்கள், அனல் மின் நிலையங்கள், சரணாலயங்கள் அமைத்தல், தொழில் நிறுவனங்கள் உருவாக்கம் மற்றும் சுரங்கங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக 2 கோடிக்கும் அதிகமான மக்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோருக்கு முறையான இழப்பீடு கிடைக்கவில்லை. 

இடப்பெயர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பழங்குடி மக்கள் ஆவர். இதுதவிர ஏராளமான மக்கள் ரயில்வே துறை வளர்ச்சிக்காக தாமாக முன்வந்து தங்கள் நிலத்தினை அளிக்கவும் செய்தனர். இப்படித்தான் பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்களுக்காக மக்களின் நிலங்கள் எடுக்கப்பட்டன. 

மக்களின் நிலங்களை மக்களுக்கே பயன்படுத்த வேண்டும் எனும் குரல்

பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக வீட்டு வசதி திட்டங்கள் போன்றவற்றை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். இந்த நிலங்களை மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தினால் இந்தியாவில் வீடற்றவர்களே இல்லை என்ற நிலையை மிக விரைவில் உருவாக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்

ஆனால் அரசோ ஒரு பக்கம், மக்களுக்கு வீட்டு வசதித் திட்டங்களை ஏற்படுத்தித் தருவதற்கு போதுமான நிலங்கள் இல்லை என்று சொல்கிறது. இன்னொரு பக்கம் பயன்பாட்டில் இல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க முயல்கிறது. 

நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் குடிசை வாழ் மக்கள்

இந்தியாவின் நகர்ப்புற மக்களில் நான்கில் ஒருவர் முறையான வீட்டு வசதி இல்லாமல் குடிசைப்பகுதிகளில் வசித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புறங்களின் மையங்களில் இருக்கும் குடிசைப் பகுதி மக்களை நகருக்கு வெளியிலே தூக்கி எறிகிறது அரசாங்கம். ஆனால் ஒவ்வொரு மாநிலத்தின் நகரங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ஏராளமான நிலங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு விற்கப்பட இருக்கிறது. 

10,000 கோடி ரூபாய் வரை விலை போகும் என்று சொல்லப்படும் இந்த நிலங்களை சாதாரண மக்களா வாங்கப் போகிறார்கள்? ஒரு காலத்தில் மக்களுக்கு சொந்தமாக இருந்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த நிலங்களுக்கு, இனி மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே சொந்தக்காரர்களாக மாறப் போகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *