பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகளில் பணிக்காலம் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்படும் உயர் அதிகாரிகள்; என்ன செய்கிறது மோடி அரசு?

கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் தகுதியானவர்களாக இருந்தும் பணி நீட்டிப்பு செய்யப்படாமல், ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வெளியேற்றபடுதவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாரிடம் கையளித்து வருவதாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயது என்பது 60 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத்துறை வங்கிகளின் மிக உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் 60 வயதைத் தாண்டுவதற்கு முன்பாகவே பணி நீட்டிப்புக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படமால் தவிர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பி.ரமண மூர்த்தி, ராஜேஷ் குமார் யதுவன்ஷி, ராஜீவ் ரிஷி, பி.எஸ்.ஜெயக்குமார், அருண் கவுல் மற்றும் கே.ஆர்.காமத் ஆகிய ஆறு பேரும் பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தில் MD, CMD, CEO உள்ளிட்ட மிக முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள். இவர்களுக்கு ஓய்வு பெறும் வயதிற்கு முன்னரே பணி நீட்டிப்பு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, 2014-ம் ஆண்டுக்குப் பின் பலர் பொதுத்துறை வங்கிகளில் உயர்பதவிகள் இதேபோன்று தவிர்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது போன்ற வங்கி உயரதிகாரிகளுக்கு பணி நீட்டிப்புகள் வழங்காத காரணங்களால், தலைமை மேலாளர்கள் போன்ற பல நடுத்தர பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் பலர், தங்கள் பதவிக் கால வயதின் முக்கியத்துவம் கருதி தனியார் வங்கிகளுக்கு மாறிவிடுவதாக வங்கியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பணி நீட்டிப்பு அளிக்கப்படாமல் வெளியேற்றப்பட்ட 6 முக்கிய அதிகாரிகள் வகித்து வந்த பதவிகள்

  • கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநர் (CMD) கே.ஆர்.காமத் அவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே பணி நீட்டிப்பு செய்யபடமால் ஓய்வு அளிக்கப்பட்டது.
  • யூகோ வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநர் (CMD) அருண் கவுல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், ஓய்வு பெறும் காலத்திற்கு ஒரு வருடம் முன்பாகவே வெளியேற்றப்பட்டார்.
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (MD & CEO) இருந்த ராஜீவ் ரிஷி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது பதவிக் காலம் நீடிக்கப்படாமல் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே வெளியேற்றப்பட்டார்.
  • 2020 அக்டோபர் மாதம் வரை பி.என்.பி வங்கியின் நிர்வாக இயக்குநராக (Executive Director) இருந்த யதுவன்ஷி, 60 வயதை எட்ட மூன்று மாதங்கள்  இருந்தபோதிலும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை.
  • 17 பிப்ரவரி 2017 அன்று ரமண மூர்த்தி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக (Executive Director) மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்பு ஓய்வு பெற நான்கு ஆண்டுகள் இருந்த போதிலும் கடந்த பிப்ரவரி 2020-இல் பதவிக்காலம் நீட்டிக்கப்படாமல் வெளியே அனுப்பப்பட்டார்.

இந்த 6 ஆண்டுகளில் சரிந்துள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகள்

இது போன்று வங்கி உயர் அதிகாரிகளின் பதவிக்காலங்களை நீட்டிக்காததற்கான அதிகாரப்பூர்வ காரணங்களை எதுவும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில நேரங்களில் அவர்களைப் பற்றி குற்றச்சாட்டுகள் வந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சுட்டிக் காட்டப்படுகின்றன. 

மேலும் பாஜக அரசின் இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்குதல் மற்றும் வைப்புதொகை போன்ற சேவைகளை வழங்குவதில் சந்தை பங்களிப்பு 2015-ம் ஆண்டில் 74.28 சதவீதத்திலிருந்து, 2020-ம் ஆண்டில் 59.8 சதவீதமாகக் சரிந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் சந்தை பங்கு 21.26 சதவீதத்திலிருந்து 36.04 சதவீதமாக உயர்ந்துள்ளதையும் இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *