கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் எழுதப்பட்ட சிறப்பு கட்டுரை – Madras Review
கொரோனா பெருந்தொற்றானது சமூகத்தில் பல்வேறு தளங்களில் பலவிதமான உரையாடல்களை உருவாக்கியது. அவற்றில் இந்திய அரசமைப்பு சார்ந்து எழுப்பிய வாதங்களில் முக்கியமானது இந்தியக் கூட்டாட்சி குறித்ததாகும். இந்திய கூட்டாட்சி முறை என்பதே ஒரு அரை கூட்டாட்சி முறையாகும் (Quasi Federalism);
இக்கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கு இருந்த பல்வேறு அதிகாரங்கள் பல்வேறு காலங்களில் பறித்தெடுக்கப்பட்டு ஒன்றிய அரசின் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. இக்கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொது சுகாதாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரணப் பணி என மக்களுடன் நேரடியாக மாநில அரசுகளே பணியாற்றிக் கொண்டிருந்தன. ஆனால் அவை குறை அதிகாரங்களுடனும், சில விடயங்களில் அதிகாரங்களற்றும் இருந்ததால்தான் கொரோனா பெருந்தொற்றுக் கால நடவடிக்கைகளில் பின்னடைவுகளை ஏற்படுத்தியது. கூட்டாட்சி அமைப்பில் ஒன்றிய அரசிடம் அதிகாரம் குவிக்கப்பட்டு, மாநில அரசுகள் அதிகாரங்களற்று இருந்தால் நேரக்கூடிய சமூக விளைவை கொரோனா பெருந்தொற்று வெளிப்படுத்தியுள்ளது.
1. ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகை நிலுவை
மாநில சுயாட்சி தொடர்பாக கொரோனா எழுப்பிய வாதங்களில் முக்கியமானது மாநிலங்களின் நிதி ஆதாரத்தை அழித்திருக்கும் ஜி.எஸ்.டி யின் எதிர்காலம் குறித்து மாநிலங்களிடையே கேள்வியெழுப்பியதாகும்.
ஒன்றிய அரசினுடைய மாநில அதிகார பறிப்பின் உச்சமாக ஜி.எஸ்.டி வரி முறையைக் குறிப்பிடலாம். மாநிலங்களின் வரி வருவாயைப் பறித்து அவற்றின் பொருளியல் வளத்தை சிதைத்தது ஜி.எஸ்.டி வரி முறை.
கூட்டாட்சி முறையின் குரல்வளையை நெறித்து கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி வரி முறையானது எவ்வளவு பெரிய மக்கள் விரோத வன்மறை என்பதை கொரோனா காலம் வெளிச்சமிட்டுக் காட்டியது. கொரோனா பெருந்தொற்றில் ஒன்றிய அரசு வழிக்காட்டு நெறிமுறைகளோடு நின்றுகொண்ட நிலையில், மாநிலங்களே மக்களிடம் நேரடியாக பணியாற்றி வந்தன. எனவே மாநிலங்களே அதற்குரிய நிதிச் சுமையை சுமக்க நேர்ந்தது.
தமிழ்நாடு அரசு கொரோனா கால நிதித் தேவையாக ஒன்றிய அரசிடம் ரூ.9000 கோடி கேட்டது; ஆனால் ஒன்றிய அரசு ரூ.510 கோடிதான் கொடுத்தது. அதுவும் கூட கொரோனா காலப் பணிகளுக்கென்ற பிரேத்யேக கூடுதல் நிதியாக கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு அந்த ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் கால நிதியைத் தான் சற்று முன்னதாகவே வழங்கியிருந்தது.
இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி முறை மூலம் ஒன்றிய அரசிடம் தங்களது நிதி ஆதாரத்தை இழந்திருந்த மாநிலங்கள், கொரோனா ஏற்படுத்திய கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்ள ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகையை எதிர்நோக்கி இருந்தன.
இந்த நெருக்கடி சமயத்திலும் கூட, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவையிலிருந்த ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகை ரூ.5909 கோடியை கொடுக்கவில்லை. ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகைக்காக மாநிலங்கள் தொடர்ந்து எழுப்பிய கோரிக்கைகள் பலனளிக்கவில்லை.
மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்காமல் ஒன்றிய அரசு கைவிரித்து விட்டது. மேலும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க மாநிலங்களை கடன் வாங்கிக் கொள்ளச் சொன்னது. மாநில அரசுகளுக்கான நிதி தேவைகளில் ஒன்றிய அரசு கொண்டுள்ள பாராமுகப் போக்கு, மக்களுக்கு செலவு செய்ய மக்களிடமே அடித்துப் பிடுங்க வேண்டிய நிலைக்கு மாநில அரசுகளை தள்ளியது.
வரி வருமானத்தை ஒன்றிய அரசிடம் இழந்த மாநில அரசுகள், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரமில்லாததால் ’கொரோனா வரி என்ற பெயரில் தனியாக செஸ் (Corona Cess)’ விதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன; மதுபானங்கள், எரிபொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன. ஊரடங்கினால் வருமானத்திற்கு வாய்ப்பில்லாத மக்கள் மீதே கூடுதல் வரிச்சுமை சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் மொத்த மக்கள் நலப் பணியையும் சுமந்து கொண்டு, நிதி ஆதாரமுமில்லாத கையறு நிலைக்கு மாநில அரசுகளைத் தள்ளியது ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பார்க்க: ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!
2. பிரதமர் நிவாரண நிதி கணக்கிற்கு வழங்கப்பட்டால் மட்டுமே அது சி.எஸ்.ஆர்
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ஒன்றிய அரசு PMCare வழியாகவும், மாநில அரசுகள் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிலும் நிதி வசூலித்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்தின் குறிப்பிட்ட பகுதியை சமூகநலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்பது கட்டாயமாகும்; இது கார்பரேட் சமூகக் கடமை (Corporate Social Responsibility- CSR) நிதி என்றழைக்கப்படும்.
அந்த நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிட வேண்டிய சி.எஸ்.ஆர் நிதியை நேரடியாக மக்களுக்கு செலவு செய்யாமல், அரசிற்கு கொரோனா நிவாரண நிதியாக வழங்கினாலும் அவை அக்கார்பரேட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் ஆண்டுச் செலவினமாக கணக்கில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு என்ற பட்சத்தில் மாநில அரசுகளின் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி வழங்கினால் அவை சி.எஸ்.ஆர்-ஆக கணக்கில் கொள்ளப்படமாட்டாது எனவும், பிரதமர் நிவாரண நிதி கணக்கிற்கு வழங்கினால் மட்டுமே அவை சி.எஸ்.ஆர்-ஆக கணக்கில் கொள்ளப்படும் என ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்தது.
மாநிலங்களின் வளங்களைப் பயன்படுத்தியே கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. ஆனால் அவை ஒரு அரசாக ஒன்றிய அரசிடம் மட்டுமே நிவாரண நிதி கொடுக்க வேண்டுமென்றது ஒன்றிய அரசு.
வரியைப் பெற்றுக் கொண்டு மாநில அரசுகள் கேட்ட கொரோனா நிவாரண நிதியையும் தராமல், மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகையையும் தராமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியையும் மாநில அரசுகளுக்கு செல்லவிடாமல், ’அரசு-நிதி’ என்பதற்கான ஒற்றை எஜமானன் தான் மட்டுமே என்ற ரீதியில் கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டது.
3. கொரோனா ஊரடங்கு அறிவிப்பில் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கு
பொது நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடு என்பதோ, வர்த்தக செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடு என்பவையோ மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டவை ஆகும். மேலும் பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைக்கு பொறுப்புடைய மாநில அரசுகள், அதனின் நிலைமைக்கு தகுந்தாற்போல் முடிவெடுப்பதே யதார்த்த நடைமுறையாக அமையும்.
ஆனால் ஒன்றிய அரசின் மையப்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு அறிவிப்பானது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் களச் செயல்பாட்டு நடைமுறைக்கு சுமையாக அமைந்தது.
உதாரணமாக தமிழ்நாடு, செயல்பாட்டு திட்டமிடலின் அடிப்படையில் ஊரடங்கிற்கு குறிப்பிட்ட நாள் வரை கெடு விதித்திருந்த நிலையில், ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அதனை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதேபோன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படுவது தொடர்பாக மாநிலங்கள் முடிவெடுக்க முடியாத நிலையிருந்தது. பெருந்தொற்றின் களச் சூழ்நிலை கருதி கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ஒன்றியத்தின் உயர் கல்விக்கான அதிகார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இவ்வாறாக கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநிலங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் மேலிருந்து உத்தரவு பிறப்பிக்கும் எதேச்சதிகார போக்குடன் கூட்டாட்சிக்கு விரோதமாக ஒன்றிய அரசு செயல்பட்டது. ஒரு அரசாக, அவசரக் கால சூழ்நிலை கருதி தேவையான அறிவுப்புகளை மாநில அரசுகள் வெளியிட முடியாததையும், நடைமுறையில் மாநில அரசுகளுக்கு அத்தகைய அதிகாரம் இருந்திருக்க வேண்டிய அவசியத்தையும் கொரோனா பெருந்தொற்று காலம் உணர்த்தியது.
பார்க்க: கொரோனா ஊரடங்கிற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிடுவது சட்டவிரோதமானது!
4. தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் கூட இல்லாத மாநில அரசு
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலத் துறைகள் மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாக இருக்கும்பட்சத்திலே அத்துறைகளின் செயல்பாடு மக்கள் வளர்ச்சிக்கு முழுமையாக பங்காற்ற முடியும். அந்த நோக்கத்திலே கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து வந்தது. பின்னர், அவசர காலத்தைப் பயன்படுத்தி இந்திரா காந்தி அரசு அதனை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அதனுடைய விளைவு தொடர்ந்து கல்வி, சமூக வளர்ச்சியில் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. ஒன்றிய அரசின் அதிகார விளைவால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் பாதகங்களை கண்முன்னாக பார்த்து வருகிறோம்.
உயர்கல்வித் துறையில் நீடிக்கும் ஒன்றிய அரசின் ஒற்றை-எதேச்சதிகாரப் போக்கின் விளைவு, கல்லூரி தேர்வு குறித்து கூட முடிவெடுக்க முடியாத நிலையில் மாநில அரசுகள் உள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தைக் கணக்கில் கொண்டு கல்லூரி தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் இதனை ஏற்காத பல்கலைகழக மானியக் குழு, ’மாநில அரசுகளுக்கு கல்லூரி தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் கிடையாது. மீறி அவை ரத்து செய்யும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்திருந்தது.
பொதுப்பட்டியல் என்பது மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு என இரண்டு அரசுகளின் அதிகாரங்களுக்கும் உட்பட்ட துறைகளாகும். அவற்றின் மீது முடிவெடுப்பதில் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு சம பொறுப்பு மற்றும் அதிகாரமிருக்கிறது. உயர்கல்வியைப் பொறுத்தவரை யதார்த்தத்தில் மாநில அரசுகளே தமது நிதியிலிருந்து கல்விக் கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. கல்லூரிகள் செயல்படும் விதம் குறித்து மட்டுமே ஒன்றிய அரசு பொறுப்பேற்கிறது.
பொதுப்பட்டியலிலுள்ள உயர்கல்வித் துறையில் சமபங்கு அதிகாரமுடைய மாநில அரசின் முடிவுக்கு ‘நடவடிக்கை எடுப்பதாக’ ஒன்றிய அரசின் அதிகார அமைப்பு எச்சரிக்கை விடுக்கிறது.
முந்தைய அவசரக் காலத்தில் பறித்தெடுக்கப்பட்ட உயர் கல்வித் துறையின் மீதான மாநில அரசின் அதிகாரம், தற்போதைய பெருந்தொற்று அவசர காலத்தில் மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்க முடியாத நிலைக்கு மாநில அரசுகளை தள்ளியிருக்கிறது.
பார்க்க: தேர்வுகளை நடத்தியாக வேண்டும்! மாநிலங்கள் ரத்து செய்ய முடியாது – அதிகாரம் பேசும் ஒன்றிய அரசு
5. அவசர கால சட்டங்களின் மூலம் மாநில உரிமைகளை பறித்த ஒன்றியம்
இந்திரா காந்தி அரசால் அவசர காலத்தைப் பயன்படுத்தி, உயர்கல்வித் துறை மீதான மாநில அரசின் அதிகாரத்தை பறித்ததுடைய விளைவை மேலே குறிப்பிட்டிருந்தோம். தற்போதும் கொரோனா – அவசர காலத்தைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட பல துறைகளில் அவசர சட்டங்களை நிறைவேற்றியது ஒன்றிய அரசு.
குறிப்பாக மாநிலப் பட்டியலின் கீழுள்ள விவசாயத் துறையில் கூட்டாட்சிக்கு விரோதமாக ஒன்றிய அரசு மூன்று விவசாயச் சட்டங்களை நிறைவேற்றியது. விவசாயத்தைப் பொறுத்தவரை மாநில அரசுகளே விவசாயிகளுடன் நேரடி உறவில் இருக்கின்றன. விவசாயம் தொடர்பான முடிவுகளை மாநில அரசுகள் தீர்மானிக்கும் பட்சத்திலேயே, மக்களின் உணவுத் தேவையையும், விவசாயிகளின் குறைந்தபட்ச வருமானத்தையும் உத்திரவாதப்படுத்த முடியும். ஆனால் கார்ப்பரேட் வணிக நலனுக்காக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயத் துறையின் மீதான மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட்டு மாற்றியமைத்திருக்கிறது.
இது பற்றி கருத்து தெரிவித்திருந்த பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் “’ஒரே நாடு ஒரே விவசாய சந்தை’ என விவசாயம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது” என்றும், ”இந்த அவசர சட்டங்களானது உணவு தானியக் கொள்முதல் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு பொறுப்பேற்பதற்கு நடைமுறையிலுள்ள மாநில அரசின் பொறுப்புகளை நீக்கக்கூடியது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விரிவாக படிக்க: விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
அதேபோன்று பொதுப்பட்டியலில் உள்ள மின்சார துறையிலும் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கில் ஒன்றிய அரசானது, மின்சார சட்டத் திருத்த மசோதாவை கொரோனா அவசர காலத்தைப் பயன்படுத்தி கொண்டு வந்தது.
இம்மசோதாவானது மாநில அரசின் நிறுவனங்களான மின் வாரியங்களை கடன் சுமையில் தள்ளி அழிக்கக் கூடிய வகையில், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவான மின்சார ஒப்பந்த நிர்பந்திப்பு அதிகாரியை (Electricity Contract Enforcement Authority) நியமித்தல் உள்ளிட்ட மாநில அதிகாரங்களில் தலையீடை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.
விரிவாக படிக்க: கொரோனா பேரிடருக்கு இடையில் மின்சாரத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் சட்டம்!
மேலும் இக்காலத்தில் ஒன்றிய அரசால் சட்டங்கள், மசோதாக்கள் மட்டுமல்லாது நீர்வளம் மற்றும் சூழலியல் தொடர்பாக மாநிலங்கள் கொண்டிருந்த அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய நீர்வளத் துறை திருத்த விதிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (திருத்தம்) போன்றவையும் முன்னகர்த்தப்பட்டன.
மேலே குறிப்பிடப்பட்டவை முந்தைய காலங்களில் மாநில அரசின் அதிகார பறிப்பால் ஒரு அவசர காலத்தில் அவை திறம்பட செயல்பட முடியாமல் போனதையும், தற்போதைய அவசர காலத்தைப் பயன்படுத்தி மேலும் அவைகளின் அதிகாரம் பறிக்கப்படுவது பற்றியதுமாகும்.
உலகெங்கும் பொது சுகாதாரம் என்பது, தனியார்மயப்பட்டதாக இல்லாமல் அரசு பொறுப்பேற்கும் மக்கள் நல அம்சமாக தொடர வேண்டிய அவசியத்தை கொரோனா உணர்த்தியது; மக்கள் நல அரசு (Social Welfare State) என்பது உலக மக்களின் பொது முழக்கமாக மாறியுள்ளது. கூட்டாட்சியைப் பொறுத்தவரை மாநில சுயாட்சியும், மக்கள் நல அரசும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தனியார்மயத்திற்கு ஆதரவான இந்திய நவ தாராளவாத கொள்கையே ஒன்றிய அரசின் பெரும்பாலான அதிகார குவிப்பிற்கு நேரடி காரணமாகும். எனவே இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் மக்கள் நல அரசு என்பது அரசுமயத்தை மட்டுமல்லாமல், மாநிலங்களின் சுயாட்சியையும் உள்ளடக்கியிருக்கிறது.
முகப்புப் படம்: நன்றி – அமித் பந்த்ரே( New Indian Experess)