இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தியின் மதிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16.6 % சதவீதம் குறைந்திருப்பதாக அறிவித்து இந்திய ஒன்றிய அரசின் அறிக்கை நேற்று (ஆகஸ்ட் 11, 2020) வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டு காலத்தில் கணக்கிடும்போது 35.9% சதவீதம் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்துறை வாரியாக உற்பத்தி சரிவு எவ்வளவு என்பது வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பாக ஆடைகள் உற்பத்தித் தொழிலில் 54.3 சதவீதமும், மோட்டார் வாகனங்கள் சார்ந்த தொழிலில் 48 சதவீதமும், காகிதத் தொழிலில் 39.6 சதவீதமும், தோல் தொடர்பான பொருட்களில் 21.8 சதவீதமும், சுரங்கத் தொழிலில் 19.8 சதவீதமும், உற்பத்தித் தொழிலில் 17.1 சதவீதமும், மின் உற்பத்தி 10 சதவீதமும் இந்த ஜூன் மாதத்தில் சரிவு கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் கணக்கிடும்போது ஆடைகள் உற்பத்தித் தொழிலில் 73.2% குறைந்திருப்பதாகவும், மோட்டார் வாகனங்கள் சார்ந்த தொழிலில் 77.4% குறைந்திருப்பதாகவும், காகிதத் தொழிலில் 54.6% குறைந்திருப்பதாகவும், தோல் தொடர்பான பொருட்களில் 58.9% குறைந்திருப்பதாகவும், சுரங்கத் தொழிலின் உற்பத்தி 22.4% குறைந்திருப்பதாகவும், உற்பத்தித் துறையில் 40.7% குறைந்திருப்பதாகவும். மின் துறையில் 15.8% குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை உற்பத்தி முறையைப் பொறுத்தவரை உற்பத்திக்கான பொருட்களை 6 வகையாகப் பிரிப்பார்.
அவை,
- முதன்மைப் பொருட்கள் (Primary Goods)
- மூலதனப் பொருட்கள் (Capital Goods)
- இடைநிலைப் பொருட்கள் (Intermediate Goods)
- உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருட்கள் (Infrastructure/ Construction goods)
- நுகர்வோர் சாதனங்கள் (Consumer Durables)
- நீடித்த நுகர்வில்லா சாதனங்கள்(Consumer NonDurables)
முதன்மைப் பொருட்கள் என்பவை குறிப்பாக பொருட்களின் உற்பத்திக்கான அடிப்படை மூலப் பொருட்களைக் (Raw materials) குறிக்கும். அவற்றின் உற்பத்தி 14.6% குறைந்துள்ளது.
மூலதனப் பொருட்கள் என்பவை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சொத்துக்கள் வகையைச் சார்ந்தவை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களைச் சொல்லலாம். அவற்றின் உற்பத்தி 36.9 % குறைந்துள்ளது.
இடைநிலைப் பொருட்கள் என்பவை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடிய பொருளாகவும் இருக்கும், அதே சமயம் இன்னொரு பொருளை தயாரிப்பதற்கான அடிப்படைப் பொருளாகவும் இருக்கும். வாங்குபவர் யார் என்பதைப் பொறுத்தே அது வகைப்படுத்தப்படும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சர்க்கரையை ஒருவர் வீட்டில் பயன்படுத்துவதற்காக வாங்கினால் அது நுகர்வுப் பொருளாக இருக்கும். ஆனால் சர்க்கரையினை இன்னொரு இனிப்புப் பொருளை தயாரிப்பதற்காக ஒரு உற்பத்தியாளர் வாங்கினால், அது இடைநிலைப் பொருளாக கருதப்படும். இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 25.1% குறைந்துள்ளது.
உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 21.3 % குறைந்துள்ளது.
நுகர்வோர் சாதனங்கள் என்பவை முழுமையாக தயாரிக்கப்பட்ட, நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும் நுகர்வோர் பயன்பாட்டிற்கான சாதனங்கள். உதாரணத்திற்கு கார், ஃபிரிட்ஜ், இருசக்கர வாகனம், ஃபேன், பர்னிச்சர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீண்டகால பயன்பாட்டு சாதனங்களும். இவற்றின் உற்பத்தியானது 35.5% குறைந்துள்ளது.
நீடித்த நுகர்வில்லா சாதனங்கள் என்பவை முழுமையாக தயாரிக்கப்பட்ட நுகர்வோர் பயன்பாட்டிற்கான பொருட்கள். ஆனால் நீண்டகால பயன்பாடு சாராதவை. அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு உள்ளான காலம் வரையில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொருட்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் அழகு சாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், துணி வகைகள் போன்றவை. இவற்றின் உற்பத்தியானது 14% குறைந்துள்ளது.
மேலே சொன்ன 6 வகையான பொருட்களின் உற்பத்தி சதவிகித குறைவும் ஜூன் மாதத்தின் நிலவரம் ஆகும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெருவாரியாக குறைந்திருந்தாலும், இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களைக் காட்டிலும் சற்று முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களைக் காட்டிலும் ஜுன் மாதத்தில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் உற்பத்தியில் சற்று முன்னேற்றம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
மொத்தமாக தொழிற்துறையின் உற்பத்தியைப் பார்க்கும்போது ஏப்ரல் மாதத்தில் 57.6 சதவிகிதம் சரிவு இருந்ததாகவும், மே மாதத்தில் 34.7 சதவிகிதம் சரிவு இருந்ததாகவும், ஜூன் மாதத்தில் 16.6% சதவீதமாக சரிவின் விகிதம் குறைந்திருப்பதாகவும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.