மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஜி.எஸ்.டி இழப்பீடு
ஜி.எஸ்.டி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதே, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பிற்கு ஒன்றிய அரசு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு அளிக்கும் என்று ஏற்றுக் கொண்டு ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டத்தையும் இயற்றியது. ஆனால் ஏற்றுக் கொண்டதற்கு மாறாக, ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதனை தொடர்ந்து இழுத்தடித்து வந்தது. இந்த ஆண்டு கொரோன நெருக்கடியைக் காரணம் காட்டி மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டினை வழங்க முடியாது என்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு சொல்லிவிட்டது.
ஜி.எஸ்.டி என்பது மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் சலுகையல்ல, அதனை கொடுத்தாக வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்று பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி இழப்பீட்டின் மூலம் வர வேண்டிய பணத்தை வெளிச்சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது. மேலும் கொரோனா பாதிப்பின் நிவாரணத்திற்கும் நிதியினை மாநிலங்களுக்கு முறையாக ஒன்றிய அரசு பிரித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பல மாநில அரசுகளால் எழுப்பப்பட்டது.
இதன் காரணமாக பெரும் நிதிநெருக்கடியில் சிக்கிய மாநில அரசுகளின் கடன் மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 57% உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மாநிலங்களின் மொத்த கடன் மதிப்பு (மாதம் வாரியாக)
இந்த 2020-21 நிதிஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மாநில அரசுகள் மொத்தமாக 3.53 லட்சம் கோடி ரூபாயை வெளிச்சந்தையில் கடனாகப் பெற்றுள்ளன. ஆனால் கடந்த 2019-20 நிதி ஆண்டின் இதே முதல் ஆறு மாதங்களில் மாநிலங்கள் பெற்ற கடன் 2.25 லட்சம் கோடியாகவே இருந்தது.
இந்த 2020-21 நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தின் போது மாநிலங்களின் மொத்த கடன் மதிப்பு 59,200 கோடி ரூபாயாக இருந்துள்ளது. பின்னர் அதே மாதத்தில் மேலும் 29,570 கோடி உயர்ந்துள்ளது. அதன் பின்னர் மே மாதத்தில் 47,950 கோடி உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் மே மாதத்தைக் காட்டிலும் 117% அதிகமாகும்.
ஜூன் மாதத்தில் 48,071 கோடியும், ஜூலை மாதத்தில் 59,600 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் 55,600 கோடியும், செப்டம்பர் மாதத்தில் 83,120 கோடியும் என்று அடுத்தடுத்த மாதங்களில் கடன் மதிப்பானது தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.
அதிக கடன் பெற்ற தமிழ்நாடு
மாநில வாரியாகப் பார்க்கும்போது, மகாராஷ்டிரா மாநிலமும், தமிழ்நாடும் தான் அதிக அளவிலான கடன்களைப் பெற்றுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் 48,500 கோடி ரூபாயும், தமிழ்நாடு 48,000 கோடியும் இந்த ஆறு மாத காலத்தில் வெளிச்சந்தையில் கடனாகப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இதே ஆறு மாத காலத்தில் 23,190 கோடி மட்டுமே கடனாகப் பெற்றிருந்த தமிழ்நாடு அரசின் கடன் இந்த ஆண்டு இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டியால் வருமானம் இழந்த 3 மாநிலங்களே அதிக கடன் பெற்றுள்ளன
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா இந்த மூன்று மாநிலங்கள்தான் நாட்டில் அதிகமான வருவாயைத் தரக் கூடிய மாநிலங்களாகும். இந்த மூன்று மாநிலங்கள் தான் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியதால் அதிக வருவாய் இழப்பை சந்தித்த மாநிலங்கள். ஜி.எஸ்.டி இழப்பீட்டினை தர முடியாது என்று ஒன்றிய அரசு சொல்லிவிட்டதால் இந்த மூன்று மாநிலங்களின் கடன் மதிப்பும் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது இந்த மூன்று மாநிலங்களையும் நிதி நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இந்த நிதி நெருக்கடியானது மாநில அரசுகள் மக்களுக்காக அறிவிக்கும் சமூக நலத் திட்டங்களில் பிரதிபலிப்பினை ஏற்படுத்தும். நிவர் மற்றும் புரேவி புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசு கேட்ட நிதியையும் இன்னும் ஒன்றிய அரசு முறையாக அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகப்பு ஓவியம்: நன்றி – பிரதாப் ரவிசங்கர் (TheFederal)