A.Vennila

அ.வெண்ணிலா எனும் கவிதை ஆளுமை பிறந்த நாள் இன்று!

கவிஞர் அ.வெண்ணிலா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மணமிக்க
பூச்சூடிக்கொள்கிறேன்
கூடுதலாய்
முகப்பவுடரும்
புடவைகளுக்குக்கூட
வாசனை திரவியம்
பூசி வைத்துள்ளேன்
வியர்வையை
கழுவிக் கழுவி
சுத்தமாய் வைத்திருப்பதாய்
நினைத்துக்கொள்கிறேன்
என்னை
அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
தாயின் வாசம்
சொட்டு சொட்டாய்
கோப்புகளில் இறங்குகிறது
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து
பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்று அலறும்
குழந்தையின் அழுகுரல்.

என்று வேலைக்கு செல்லும் இளம் தாய்மார்களின் வாழ்வு குறித்து முக்கியமான கவிதையினை வடித்தவர் கவிஞர் அ.வெண்ணிலா.

கவிஞர் அ.வெண்ணிலா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அருகில் அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். சி.அம்பலவாணன் -வசந்தா தம்பதியருக்கு ஒரே மகளாக 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தார்

ஐந்தாம் வகுப்பு வரை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு வரை வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.

இவரது கணவர் முருகேஷ் அவர்களும் தமிழின் மிக முக்கியமான கவிஞர் ஆவார். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி மற்றும் அன்புபாரதி. மூத்த மகளை பள்ளி இறுதிப் படிப்பிற்கு அரசுப் பள்ளியில் சேர்த்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

இவரது திராவிடர் கழக ஆதரவாளர் என்பதால் சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கும் பழக்க உடையவராக வளர்ந்தார்.  ஆனால் எழுதத் துவங்கியது 27 வது வயதில் தான்.

இது குறித்து அவரே 

“நான் சின்ன வயதில் இருந்தே கவிதை எழுதத்தொடங்கி விட்டேன் என்று எல்லோரும் சொல்லும் பதிலை என்னால் சொல்லமுடியாது. ஏன் தெரியுமா? நான் எழுதத்தொடங்கியதே இருபத்து ஏழு வயதில்தான்” என்கிறார். 

கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர், பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இவருக்கு இருக்கிறது. தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

வெண்ணிலாவின் கங்காபுரம் நாவல் ராஜராஜ சோழன் மற்றும் ராசேந்திர சோழன் வாழ்வை அடைப்படையாகக் கொண்டு எழுதபட்டது. குறிப்பாக தன் தந்தையின் நிழலிலேயே இருக்கும் மகன்  தன் தனித்தன்மையை நிறுவ துடிக்கும் மனப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. முதன்முறையாக கோவிலுக்குள் பறையை அனுமதித்தது ராசேந்திரன் என்பன போன்ற வரலாற்றையும் நாவல் வழியாக சொல்லிச் செல்கிறார்.

’மீதம் இருக்கும் சொல்’ எனும் கதைத் தொகுப்பில் 85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் பெண்கள் ராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரை பல பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்திருக்கிறார்.

’ததும்பி வழியும் மௌனம்’ நூலில் 38 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 

குழந்தைகளைப் பற்றி, கல்வி முறை, மருத்துவம், வீடு, சினிமா, நகர்மயம், காட்சி ஊடகங்கள், கிராமம், நவீன வாழ்க்கை முறை தொழில்நுட்பம், கைவிடப்பட்ட முதியோர்கள், பெண்கள் சந்திக்கும் கொடூரங்கள், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், நவீன வாழ்க்கை, விளையாட மறந்த குழந்தைகள் என்று தமிழகத்தின் சமகால சிக்கல்கள் குறித்து எழுதப்பட்டவை.

’ஆதியில் சொற்கள் இருந்தன’, ’நீரில் அலையும் முகம்’, ’கனவிருந்த கூடு’ உள்ளிட்ட  கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ’கனவைப் போல மரணம்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 

தலைப்பில்லாமல் கவிதை எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அது தான் சுதந்திரமாக எழுவதற்கானது என்று காரணம் சொல்கிறார் அ.வெண்ணிலா.

சில கவிதைகள்

சப்தம் போடாமல்
விளையாடுங்கள்
கூச்சமே இல்லாமல்
சொல்கிறார்கள்
குழந்தைகளிடம்.

மூஞ்சூறு,பசு
மயில்,எருமை என
விதவிதமான
வாகனமேறி உலகம்
காக்கிறார்கள்
ஆண் கடவுள்கள்.
பெண்கடவுள்கள் மட்டும்
பின் தொடர்ந்தே நடந்திருக்கிறார்கள்
சினந்து வெகுண்டெழுந்த காளிக்கு
சிங்கத்தை வாகனமாக்க
துரதிர்ஷ்டவசமாக
சிங்கத்தை அடக்குவதே
காளியின் வேலையாயிற்று

காக்கா க‌தை
குட்டி இள‌வர‌சி க‌தை
தேவதை க‌தை என‌
சொல்லி ம‌கிழ்ந்த‌
பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
இர‌வொன்றில்
ந‌ம்மால்
குழ‌ந்தைக‌ளைப் போல்
க‌ட்டிய‌ணைத்து
உற‌ங்க‌ முடிந்த‌து”

இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. இவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளங்களை முனைவர் (எம்.பில்) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.ஹெச்டி) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.

2009-10 வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து, புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *