மதுரை சோழவந்தானில் மின்விளக்கு கூட இல்லாத ஒரு கிராமம். சோழவந்தான் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்பதே இல்லை என்பது பிரச்சினை. அந்த ஊரில் ஒரு ஆசிரியர், எல்லாவற்றுக்கும் மனு கொடுத்து பிரச்சினைகளை தீர்க்க முயல்பவர். தன் வாழ்க்கையின் முக்கிய நேரத்தினை மனுக்கள் எழுதுவதிலேயே கழிப்பவர். அவரது மனுக்களின் பலனாய் மின்விளக்கு கிடைத்த கிராமம் அது. அந்த ஆசிரியரின் மகன் நெடுமாறன். நெடுமாறனாக சூர்யா நடித்திருக்கிறார். தந்தையோ மனு அளிப்பதில் நம்பிக்கை கொண்டவர், மகனோ போராட்ட குணம் படைத்தவர். ரயிலை சோழவந்தானில் நிறுத்துவதற்காக மக்களை திரட்டி போராடுகிறார். அந்த போராட்டத்தில் சிறு வன்முறை நிகழ்கிறது. இது தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சினையாக மாறிவிட வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார் நெடுமாறன்.
பின்னர் அவர் படித்து இந்திய விமானப் படையில் சேருகிறார். தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத போது அவசரத்தில் விமானத்தில் பயணிக்க பணம் இல்லாமல் போக, மாறனின் வாழ்வின் திருப்புமுனையாக அந்த நாள் மாறுகிறது. ரயிலே நிற்காத தன் ஊரின் மக்கள் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது மாறனின் கனவாக மாறுகிறது. அதற்காக விமானப் படை பணியிலிருந்து விலகி குறைந்த விலையில் விமானத்தில் பயணிப்பதற்கான விமான சேவையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். 1000 ரூபாயில் இருந்து 1 ரூபாய் வரை விமானக் கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையிலான திட்ட முடிவுகளோடு எல்லா பெரு நிறுவனங்களின் வாயில்களிலும் ஏறி இறங்குகிறார். அந்த கட்டணத்திலேயே பெரும் லாபத்தை சம்பாதிக்க முடியும் என்றும் திட்டங்களை முன்வைக்கிறார்.
விமானப் போக்குவரத்துத் துறையில் ஜாம்பவானாக இருக்கும் பெருமுதலாளியான பர்வேஷ் கோஸ்வாமி, மாறனின் இப்புதிய திட்டத்தினை முறியடிக்க முயல்கிறார். மாறன் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை இயக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் சூழ்ச்சிகளால் முறியடிக்கிறார். அரசு அதிகாரிகளையும், பண பலத்தையும், அதிகார பலத்தையும் கொண்டு நெடுமாறனை தொடர்ச்சியாக ஓட விடுகிறார். மாறனை கடன்காரராக மாற்றுகிறார். ஒரு கட்டத்தில் மொத்த கிராமமும் நெடுமாறனின் கனவை தூக்கிச் சுமக்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் கனவை நோக்கி ஓடுகிறார் நெடுமாறன். சாமானியர்களை விமானத்தில் பயணிக்கச் செய்யும் தனது இலட்சியக் கனவில் மாறன் வென்றாரா இல்லையா என்பதை நோக்கி நகர்கிறது திரைப்படம்.
இந்திய விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற G.R கோபிநாத் அவர்களின் வாழ்க்கையின் சில பகுதிகளின் அடிப்படையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திரைப்படம் அவரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று படமல்ல, அவரது வாழ்க்கையின் சில பகுதிகளை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மாறனின் மனைவி சுந்தரியாக நடித்துள்ள அபர்ணா பல இடங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பேக்கரி நடத்தும் பெண்ணான அவர்தான் நெடுமாறனின் பொருளாதார சுமைகளைத் தாங்கும் குடும்பத் தலைவியாக வருகிறார். சூர்யாவின் லட்சியம் ஏர் டெக்கான் நிறுவனம் என்றால், அதற்கு நிகராக பொம்மி பேக்கரி என்பது சுந்தரியின் கனவாக இருக்கிறது. சுந்தரி கதாபாத்திரத்தின் ஆளுமைத் திறனுக்கு அபர்ணா கச்சிதமாக பொருந்திப் போகிறார். மாறன் – சுந்தரி இருவரின் காதல், குடும்ப வாழ்க்கை தொடர்பான காட்சிகள் பேரழகு.
வழக்கமான பெண் பார்க்கும் படலத்திற்கு மாறாக சுந்தரி நெடுமாறனை மாப்பிள்ளை பார்க்கப் போவது, இருவரின் திருமணம் பெரியார் மற்றும் அம்பேத்கர் புகைப்படங்களுடன் சுமரியாதை திருமணமாக நடப்பது, ரயிலில் கருவாட்டுக் கூடையை பார்த்து மூக்கைப் பிடிக்கும் பார்ப்பனரை விமர்சிப்பது, பணக்காரர்களுக்கு இணையாக ஏழைகள் பயணிக்க வேண்டும் என சொல்வது என ஆங்காங்கே வசனங்களில் முற்போக்குத் தன்மையைக் காண முடிகிறது.
ஆனால் யாரென்றே தெரியாத நெடுமாறனின் கதையைக் கேட்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விமானத் துறைக்கு கடிதம் எழுதுவது, விமானப்படை அதிகாரிகளை அதீத புனிதப்படுத்துதலுக்கு உள்ளாக்கும் வசனங்கள் போன்ற காட்சிகள் அதீத நாடகத்தனமாக இருக்கின்றன.
ஒட்டுமொத்த கதையைப் பொறுத்தவரை முற்போக்கு எசன்ஸ் தூவப்பட்ட வணிக சினிமாவாகவே இருக்கிறது. ஒரே விமானத்தில் எதற்காக எகனாமி கிளாஸ், பிசினஸ் கிளாஸ் வேறுபாடு என்று பிசினஸ் கிளாஸ் சீட்டுகளை உடைக்கும் காட்சி ஒரு Goosebump moment ஆக இருந்தாலும், சமத்துவம் என்பதனை விமானத்தின் பிசினஸ் கிளாஸ் – எகனாமிக் கிளாஸ் ஒப்பீட்டோடு மட்டும் முடிச்சு போட்டு நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.
ஒரு பெரிய நகைக்கடை முதலாளியும், ஏழை விவசாயியும் ஒரே விமானத்தில் இருந்து இறங்குவதைப் போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டு, அதான் எல்லாத்தையும் ஒன்றாக மாற்றி விட்டாரே மாறன் என்பது மாதிரியான வசனமும் வைக்கப்பட்டுள்ளது. என்றாவது ஒரு நாள் விமானத்தில் பறந்து விட வேண்டும் என்பது வேண்டுமானால் ஏழைகளின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த பயணத்தினை சமத்துவத்தின் அங்கமாகவோ, ஏழை-பணக்கார வேறுபாடுகளை உடைக்கும் தொடக்கப் புள்ளியாகவோ பார்க்க முடியாது.
அந்த வகையில் பார்த்தால், செல்போன்கள் ஆடம்பரப் பொருளாக இருந்த காலத்தில் 500 ரூபாய்க்கு 2 செல்போன்களைக் கொடுத்த அம்பானியின் செயலை சமத்துவத்திற்கான செயலாகப் பார்க்க முடியுமா?
சில நாடகத்தனங்களை தவிர்த்துவிட்டு பார்க்கும்போது, படத்தில் வரும் சின்னச் சின்ன உணர்ச்சிகள், கதாபாத்திரங்கள், திரைக்கதை போன்றவை படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சொதப்பி வந்த நடிகர் சூர்யா, சூரரைப் போற்று மூலமாக ஒரு ’கம்பேக்’ கொடுத்திருக்கிறார் என்று நிச்சயமாக சொல்லலாம்.
ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், இசையும் தரம்.
இயக்குநர் சுதா கொங்காராவின் சூரரைப் போற்று – முற்போக்கு எசன்ஸ் கலக்கப்பட்ட ஜனரஞ்சக சினிமா!