கவிஞர் தாணு பிச்சையா

பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்

உங்களுக்கு பொற்கொல்லர் சமூகத்தில் நண்பர்கள் யாரேனும் உள்ளனரா? இந்த கேள்வியை நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான பதில் ‘தெரியாது’ என்பதாகத்தான் வரும். ஏன் கம்மியர் சமூகம் தமிழ் சமூகத்துடன் உரையாடவில்லை . பெருங்கோவில்களை, அற்புதமான வேலைபாடு அமைந்த நகைகளை  தனது கற்பனையால் உருவாக்கி அதை நனவாக்கிய சமூகம் தனது இருப்பினை ஏன் பதிவு செய்யவில்லை. இது என்னுடைய நெடுநாளைய எண்ணம். அதற்கு விடையளிப்பது போல் ஒரு புத்தகத்தினை கண்டேன். 

உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் – தாணு பிச்சையா

இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கவிதைகளும் பொற்கொல்லர்களின் வாழ்வை பிரதியெடுக்கின்றன. பால்ய வயது சிறுவனின் கற்பனைக் கண் விரியும் உலகத்திலிருந்து எழும் முதல் பக்க கவிதை புத்தகம், “எந்த பொற்கொல்லன் வந்து செய்து தரப்போகிறான்..உன்னால் செய்ய முடியாத உனக்குரிய கிரீடத்தை” என்று முடிகிறது. வாருங்கள் உள்நுழைவோம்.

‘குச்சியை பிடித்து
எழுதத் தெரியாத பிராயத்தில்
ஊதுகுழலையும்
உலை குறடையும்
பற்றிப் பிடிக்கவைத்த தாத்தா
காய்ச்சவும்
உருக்கவும்
மின்னூதவும்
என பொன்னை பழக்கியதும்
தேடத் தொடங்கிற்று மனம்
காணும் யாவினிக்குள்ளும்
மினுக்கத்தை”

புத்தகத்தின் முதல் கவிதை இவ்வாறு தொடங்குகிறது , பால்ய வயதிலேயே பொன்னின் மினுக்கத்தை கற்றறிந்த சிறுவனின் பார்வையில் தொடங்குகிறது முதல் கவிதை. சிறுவயதில் அவனுக்கு திறந்தது பொன்னுலகம். அவன் காணும் கற்பனையில் விரியும் எல்லா வானவில்லுக்கும் பொன் நிறமே.

“அம்மாவுக்கும்
இருந்திருக்கக்கூடும்
அக்காக்கள் அம்மாக்களானதும்
காணாமல்போன
நெற்றிப்  பிறைச்சுட்டி
வாழைப்பூ தொங்கட்டான்
சடைநாகம்
எனாமல் பூசிய கொலுசு
மற்றும்
பெருங்கனவுகளும்”

இங்கு படைப்பாளிக்கும் அவனுக்கு உரிமையான பொருளுக்குமான தேடு தொலைவுகளே அதிகமாக இருக்கின்றன. படைப்பவர்கள் நிமிர்ந்து பார்க்கும்போது அவர்களது படைப்புகள் கண்முன்னே களவாடப்படுகின்றன. இது இப்படியிருக்க படைப்பாளர்களின் வீட்டு பெண்களின் நிலையோ பரிதாபமானது. அவர்கள் கனவு காண மட்டுமே பழகியிருக்கிறார்கள். அந்த கனவுகளும் காலத்தால் களவாடப்படுகின்றன.

“யாருக்கும் தெரியாமல்
சித்தி விற்க தந்தாள்

வீட்டுப் பத்திரத்தை
அடகுவைத்து
தாயோலிமார்களின்
வாய்களில் போட்டும்
தீராத
களவு உருப்படி
வாங்கிய வழக்கால்

ஊரைவிட்டு எங்கேயோ
கம்பிநீட்டிவிட்ட
சித்தப்பாவை
ஞாபகமூட்ட இயலாத
தாலியையும் “

பெரும்பாலான பொற்கொல்லர்கள் வீட்டிலேயே பட்டறைகள் வைத்திருப்பதால் வெளியே இயங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தினுடனான உரையாடல் மிகக் குறைவே. சிறிய அவர்களுக்கான குடும்ப வட்டத்திலேயே புழங்கிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு வழக்குகள் என்ன பாடுபடுத்தும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. காணாமல் போவது என்பதுதான் அவர்களின் முன்னிருக்கும் ஒரே வழி.

“நள்ளிரவில்
மீண்டும் கேட்கக் கேட்க
நடுக்கமாயிருக்கிறது
கொற்கை அரசவாள்
ரத்தம் பெருக வெட்டியெறிந்த
ஆயிரம் பொற்கொல்லர் தலைகளின்
பேரோலம்”

வரலாற்றின் இந்த புள்ளியிலிருந்து தொடங்குகிறதா இவர்களின் தடம். அவர்களாலேயே காலம் காலமாய் கடத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவர்களின் வரலாறு என்றேனும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

‘அடையாளம்’  என்ற தலைப்பின் கீழ்

“அப்பனைப் பெத்த
தாத்தாவின் தாத்தா
மாநாட்டுக் கம்மாளன்

பாட்டியின் அப்பா
நாட்டுப்புறக் கம்மாளன்

அம்மையைப் பெத்த
தாத்தாவின் அப்பா
பாண்டிக் கம்மாளன்

ஆச்சியின் அப்பா
மலயங்கம்மாளன்

எந்தக் கம்மாளன் நான் ?”

என்று கேள்வியை எழுப்புகிறார்? உயர்ந்த கான்கிரீட் காடுகளில் நின்று வழிதவறிய பறவையாய் வரலாற்றைத் தேடுவது துயரமானது. அனைத்து சாதிகளும் புனித பீடங்களில் வண்ணம் பூசிக்கொண்டிருக்க தெரிந்தோ, தெரியாமலோ பலிபீடங்களில் தொலைத்திருக்கிறது இந்த சமூகம் தனக்கான வரலாறை.

“பர்மிய தேசத்து
பெண்களின் கன்னங்களென
மொழுக்மொழுக்கென்றிருக்கும்
சிகப்புக் குச்சல் கற்களை
சல்லடைப்போட்டுப் பிரித்துத் தந்த
ரத்தினத் தேர்வாளனின்
கண்தப்பி வந்துவிட்ட
நீரோட்டமற்ற கல்லொன்று
முழித்துக்கொண்டிருக்கிறது
திருதிருவென.”

அணிகலன்களின் தேவதை

“அணிகலன்களின்
தேவதையென்று
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
சிமிக்கியைத் தவிர

தேவதைகள் சிமிக்கி
அணிந்திருப்பார்களா
சிமிக்கி அணிந்தவர்கள்
தேவதைகளாவார்களா

தேவதைகளின் அணிகலன்
எதுவாகவும் இருக்கலாம்
அணிகலன்களே இல்லாமலும்
தேவதைகள் இருக்கலாம்

சிமிக்கியைத் தவிர
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
அணிகலன்களின் தேவதையென்று.”

அழகிய கவிதைகள். வழிதவறி வந்த ஆடுகளுக்கெல்லாம் நல்மேய்ப்பன் கிடைத்த மாதிரி கல்லுக்கும் கிடைக்ககூடும் ஒரு அபயம். வழிதவறிய நல்ல கவிதைகளை அனைத்தையும் வைத்துக்கொண்டு முழித்துக்கொண்டிருக்கிறது இப்புத்தகம். வாசகர்களே நல்மேய்ப்பர்கள்.

“சிற்பிக்கும்
சிலைகளுக்கும் குறுக்கே
அர்ச்சகராகவும்

தச்சனுக்கும்
நிலைக் கதவுகளுக்குமிடையே
வைதீகராகவும்

தட்டானுக்கும்
தாலிக்கும் நடுவில்
ப்ரோகிதராகவும்

காலம்காலமாய்
எங்கள் உழைப்பில்
கொழுத்துப் பெருத்த நீ
வந்திருக்கப்பிடாதோ
கொல்லனுக்கும்
அவன் கொடுவாளுக்கும்
குறுக்கே”

வரலாற்றுப் புரிதலை எழுதியிருக்கிறார். இது இப்போதிருக்கும் தலைமுறைகளுக்கு தெரியுமா என்பது பெருங்கேள்வி. நீரோட்டமற்ற கல்லில் தவறிச் சென்ற நீரோட்டமுள்ள கல்லாகத்தான் தெரிகின்றன அனைத்து கவிதைகளும். தேர்ந்தெடுத்து பட்டை தீட்டுவதென்பது நிகழ்கால பொற்கொல்லர் தலைமுறையினரின் கடமை.

“எங்கேனும் ஓடிச்சென்று
எச்சில் இலைகளைப் பொறுக்கி
உயிர்பிழைத்தாலும்
நான் ஒருபோதும்
தின்னமாட்டேனென
இப்போது
உறுதிசொல்ல முடியாது
என் சொக்கன்மார்
மிச்சம்வைத்த
சயனைடை’

தமிழ் சமூக அமைப்பில் பொற்கொல்லர்களின் இருப்பு தனித்துவமானது. தனது கற்பனைகளை அடுத்துவரும் சந்ததிக்காக காட்சி செய்வதிலேயே அம்மாக்களது வாழ்வு முடிந்துவிடுகிறது. கனவுகளை அடைகாக்க மட்டுமே தெரியும் அபூர்வ பிறவிகள் அவர்கள். அவர்களின் கனவுகள் கைகூடுவதில்லை, கைகூடும் சமயங்களிலோ காலம் கடந்திருக்கும். ஆசைகளையும் கனவுகளையும் கடந்து செல்லும் நிலை கொடுமையானது. ஒரு புத்தகம் பொட்டென போட்டுடைக்கிறது இன்னும் இருளில்இருக்கக்கூடிய பொற்கொல்லர்களின் வாழ்வை. இனியேனும் மினுக்கமடையட்டும் அவர்களின் வாழ்வு.

கவிஞர் தாணு பிச்சையா அவர்களுடன் மெட்ராஸ் ரேடிகல்ஸ் நடத்திய உரையாடல்

கவிஞர் தாணு பிச்சையா

புத்தகத்தை படித்து முடித்துவிட்டு கவிஞர் தாணு பிச்சையா அவர்களுடன் அலைபேசி வழியே கலந்துரையாடினோம். வாசகனாய் ஒவ்வொரு கவிதையும் அதை படிக்கிறவர்களுக்கு தரக்கூடிய உணர்வுகள் என்பது வெவேறு தளத்தில் பயணிக்கக்கூடும். வெவ்வேறு அர்த்தங்களை அவர்கள் கண்டறியக்கூடும். ஒரு படைப்பாளியாக எனக்குள்ளே இருந்த கேள்விகளை, எண்ணங்களை சமூகத்தின் குரலாக சமூகத்தின் முன்  வைத்திருக்கிறேன்.

படைப்பாளியாக அத்துடன் என்னுடைய பணியென்பது நிறைவடையக்கூடும் என்றவரிடம், பொற்கொல்லர் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மிக பரந்துபட்டவையாக அறியமுடியவில்லை எனவே இதைப் பற்றிய புரிதல்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டால் எங்களுக்கும் ஒரு புதிய கோணம் கிடைக்கக்கூடும் என்றவுடன் நேரம் தந்து உரையாடினார். 

Madras Radicals: குச்சியை பிடித்து எழுதத் தெரியாத சிறுவயதிலியேயே பொன்னின் மினுக்கத்தை தாத்தா கற்றுத் தந்தார் என்றுதான் முதல் கவிதையே ஆரம்பிக்கிறது. அந்த சிறு பிராய நினைவுகள் பற்றிக் கூறமுடியுமா?

தாணு பிச்சையா: “வீட்டிலேயேதான் தாத்தா பொன் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நான் காலையிலேயோ அல்லது  பள்ளி சென்று வந்த பின்னோ அவருக்கு உதவியாக இருக்கக்கூடிய நேரங்கள் அமையும். டியூசன் போன்ற வழக்கங்கள் அப்போது இல்லை. சாயந்திர நேரங்களில் விளையாடிட்டு வந்தவுடன் அவருக்கு உதவியாய் இருப்பேன். நான் மூத்த பேரன் அப்படிங்கறதனாலயும் மேலும் சின்ன வயசிலேயே பட்டறையில் உட்காருவது முக்கியமானது என்பதாலும் அது வழக்கமாயிற்று.

அப்புறம் மின்னூதல் அப்படிங்கிறது, பொன்னை  காய்ச்சுதல் மற்றும் உருக்குதல் அப்படினு சொல்லுவாங்க. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில செய்யக்கூடிய வேலைதான் இந்த மின்னூதுதல் அப்படிங்கிறது. ஜாயிண்ட் பண்ணுறதுன்னு வைச்சுக்குங்களேன். இன்னும் சொல்லப்போனா பொதுவா இரும்பைக்  காய்ச்சுவாங்க, பொன்னை உருக்குவாங்க அப்படினு சொல்லுவாங்க. காய்ச்சுதல், உருக்குதல் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில செய்யக்கூடிய பொன்வேலையின் நிலைதான் மினுத்துதல் இல்லனா மினுக்கம்னு பேரு.”

Madras Radicals: ‘உருமெழுகின் மஞ்சாடி பொன்’ கொஞ்சம் விளக்க முடியுமா ?

தாணு பிச்சையா: “நீங்க படிச்சு உணர்றதுதான் அந்த கவிதை. நகை வேலையில் திருகாணி, கம்மல் போன்ற சின்ன சின்ன வேலையில் அதை ஒழுங்குபடுத்த அறத்தை வைச்சு செய்யக்கூடிய வேலை நிறைய இருக்கும். அதை மட்டம் ராவுறதுனு சொல்லுவாங்க. அப்ப நுண்ணிய துகள்கள், ரொம்ப ரொம்ப சின்ன துகள்கள் வரும்போது அத உருக்க முடியாது. அந்த வேளையில் மெழுகில் ஒட்டி வைச்சிடுவாங்க. அது அவங்க செய்யக்கூடிய நகையில் சேதாரமாகத்தான் இருக்கும். சிலசமயம் ஏதாவது முக்கிய நேரங்களில் அத உருக்கி எடுப்பாங்க. அதுல மில்லி கிராம் அளவுல ரொம்ப மிக மிகக் குறைவாத்தான் இருக்கும். அதைப் போலத்தான் என்னுடைய மனசுங்கிற உருமெழுகில இந்த கவிதைகள். அதாவது மஞ்சாடி அப்படிங்கிறது ஒரு இருநூத்தி அம்பது மில்லி கிராம் அந்த மாதிரி கொஞ்சமா சேர்ந்திருக்கிறது. இந்த கவிதைகளை அந்த மாதிரி பார்க்கணும். இதே தலைப்பில் தொங்கக்கட்டான்னு ஒரு கவிதை புத்தகத்தில் வரும். அந்த கவிதைல ஒரு சின்ன குழந்தை, மனைவி அப்படின்னு இருக்கும். இன்னும் சொல்லப் போனா நீங்க வாசிச்சீங்கன்னா இவங்களத் தாண்டி  உங்களுக்கு நீங்களும் அந்த கவிதையில வர்ற மாதிரி ஒரு புதிய அர்த்தத்தைக் கண்டுபிடிப்பீங்க.”

Madras Radicals: “செப்பில் செய்து பழகிய மோதிரம்” தலைப்பில் வரக்கூடிய கவிதையில் தன்னிடம் தொழில் கற்ற சீடன் செய்த முதல் செப்பு மோதிரத்தை குருநாதன் தண்டியல் பெருத்திருக்கிறது என்று தூக்கி எறிந்தார் அப்படினு முடியுது. இது சீடனை இன்னும் கற்றுக்கொள்ள வைக்கும் யுக்தியா?

தாணு பிச்சையா: “வாசகனா என்ன புரிதல்களை கொடுக்கிறதோ அதை எழுதுங்க. அதுதான் வாசகனை சிந்திக்க வைக்கிறதுதான் ஒரு கவிதையோட பணியா இருக்கனும். குறிப்பிட்ட கவிதை அந்த ஒரு தளத்தில் மட்டுமில்லாமல் எல்லா தளத்திலேயும் பொருந்தும். இது குலத்தொழில், இல்லனா குரு சிஷ்ய பரம்பரையில வரக்கூடிய தொழில். இந்த தொழில்ல அந்த நேர்த்தியா செய்யிறது அப்படினு ஒரு விஷயம் இருக்கு. தண்டியல் அப்படிங்கிறது ஒரு மோதிரத்தோட அடிப்பாகம் அது சரியா வரணும். சிஷ்யன் பண்ணிய மோதிரம் சரியா வரல அப்படினு பார்க்கலாம். இல்ல இவ்வளவு சீக்கிரமா கத்துக்கிட்டானே? அப்படினு பார்க்கலாம். அதுவுமில்லாம அதுக்குள்ள நீங்க என்ன பாக்குறீங்களோ அதுதான் முக்கியம். அனுபவத்தில் நின்னு சொல்ல முடியுது. அதுவும் அந்த தொழில்லதான் நின்னு சொல்லணும்னு அர்த்தமில்லை.

சொல்லப்போனா ஆடுகளம் படத்தில அந்த பெரியவருக்கும் அந்த நாயகனுக்கும் உள்ள விஷயமா கூட பார்க்கலாம். சமையல்காரர் தன்னுடைய உதவியாள் நல்லா சமைச்சா அதை அவரு எப்படி பார்க்கிறாருங்கற விஷயமா கூட பார்க்கலாம். இப்படி எல்லா தளத்திலும் பார்க்கக்கூடியதா பரந்துபட்டு அர்த்தப்படுது.”

Madras Radicals: நவீன உலகில் இயந்திரமயமாக்கல் எல்லா தொழில்களிலும் உள்நுழைஞ்சி இருக்கு. பொற்கொல்லர் தொழில்களிலும் இயந்திரமாக்கல் அவர்களுடைய வாழ்வாதாரத்தை ரொம்பவே பாதிச்சிருக்குன்னு சொல்லலாம். ஆனா பொற்கொல்லர்கள் சமூகத்தில இத்தகைய மாறுதல்கள் பிற்காலத்துல வரப்போகுதுன்னு ஆரம்பத்திலேயே ஏதாவது கணித்தார்களா?

தாணு பிச்சையா: “இந்த கேள்விக்கான பதில் கவிதைகளில் மேலோட்டமாக இருக்காது. எங்க ஊருலே நாகர்கோவில்ல அப்ப ரொம்ப நகைக் கடைகளே அவ்வளவு கிடையாது. இப்ப சிங்கப்பூர் மாதிரி போயிடிச்சு. அவ்வளவு நகைக் கடைகள் இருக்கு. ஆனா இவ்வளவு நகைக் கடைகளில் உள்ளூர் நகைத் தொழிலாளிக்கு வேலை இருக்கானா, வேலைகள் கிடையாது. வெளியூர், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய பெரிய பெரிய முதலாளிகள் மெஷினரி ஐட்டமா கிலோ கணக்குல கொண்டுவந்து கொட்டுறாங்க. அதை உள்ளுரிலே இருக்குற மக்கள் பயன்படுத்துறாங்க.

அதாவது அக்சய திரிதியை வரும்போது ஒவ்வொரு நகைக் கடையிலும் கிலோ கணக்கில நகை விற்பனையாகுது. அதுல எவ்வளவு நகைகள் உள்ளூர் தொழிலாளி வேலை பார்த்து வந்ததுன்னா கொஞ்சம் கூட கிடையாது. அப்படிப் பார்த்தா தேடி பத்த வைக்கிறது மாதிரி சின்ன சின்ன வேலைகள்தான் வரும். நான் கத்துக்கிட்டது கமர்சியல் நகை தொழில்தான்னாலும் அதை விட்டு வந்து ரொம்ப வருஷங்களாச்சு.

தொண்ணூத்தி மூணாம் ஆண்டிலேயே அதிலிருந்து வெளிய வந்துட்டேன். ஆன்ட்டிக் ஜுவல்லரி அப்படிங்கிற கோவில் நகைகள் செய்யிறது, அந்த வேலைக்கு மாறிட்டேன். அந்த இழப்புதான் கவிதைகள்ல இருக்கு. பொதுவா நகைத்தொழில் அன்னைக்கு வந்து ஒரு கிராமத்துல ஒரு நகைத்தொழிலாளர் குடும்பம் இருக்கும். அவங்கள்ட தான் அந்த ஊரு மக்கள் நகை செய்வாங்க. அதே சமயம் அது சம்பந்தமான எல்லா வேலைகளுக்கும் அவங்கதான் அணுகுவாங்க. ஒரு கட்டத்துல அவங்க நகரங்களை நோக்கி நகர்ந்தாங்க. ஏன்னா பெரிய பெரிய நகைக் கடைகள் வர ஆரமிச்ச உடனே தங்கக் கட்டுப்பாடு சட்டம், இந்த ஜுவல்லரி எல்லாம் வந்த பிறகு நகைக்கடைகளை நோக்கி  நகரங்களை நோக்கி நகர்ந்தாங்க. அது  எங்க அப்பா காலத்துல நடந்தது.

என் காலத்துல நான் உள்ளூரிலேயே இல்லாம சென்னை, கோயம்புத்தூர், பம்பாய் அப்படினு ஒவ்வொரு ஊரா போய்ட்டு இருக்கேன். அந்த நகர்வுதான் அந்த கவிதைகளில் வெளிப்படையா இல்லாம இருக்கும்.”

Madras Radicals: எல்லா தொழில்களிலும் இன்று இடைத்தரகர்கள் வந்துவிட்டார்கள். உண்மையான பலன் என்பது அதை உருவாக்கியவர்களுக்கு செல்வதில்லை. இதை சொல்லும் விதமாக “சிற்பிக்கும் சிலைகளுக்கும் குறுக்கே அர்ச்சகராகவும்….” என்கிற கவிதை உணர்த்துகிறது. இந்த புரிதல் இப்போது உள்ளவர்களிடம் இருக்கிறதா?

தாணு பிச்சையா: “அது வந்து சமூகத்தோட குரல்தான். மேலும் அதை  வர்க்கத்தோட குரலாகவும் இனத்தோட குரலாகவுந்தான் பார்க்கனும். கம்மாளர் அப்டிங்கிறவங்க தமிழ் சாதி. தமிழ் வரலாற்றிற்கும் பண்பாட்டிற்கும் ரொம்ப பங்களிப்பு அளித்தவர்கள். கொல்லன், தச்சன், சிற்பி மாதிரியான இது உடல் உழைப்பு சமூகம். மலையாளத்துல ஒன்னு சொல்லுவாங்க “கல்லு தெய்வமாச்சி சிற்பி தீண்டத்தகாதவனா ஆயிடான்னு”. அதே மாதிரி இன்னைக்கு இங்கேயுள்ள கோவில் கட்டடம் எல்லாம் செய்தது ஒரு சமுகம். ஆனா அது உள்ள போகப்போய் அப்படி இப்படினு மாறிப்போச்சு.

ஒரு சாமி சிலையை செய்தாலும் அந்த தொழிலாளி நகர்ந்துட வேண்டியதுதான். அதுக்கப்புறம் சிலைக்கும் எங்களுக்கும் உரிமை கிடையாது. இப்படி கொல்லன், தச்சன் எல்லாம் உழைப்பாளிகள். பங்களிப்பு செய்தபின் அவர்களுக்கும் செய்த வேலைகளுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி சமூகத்திலே நகர்வுகள் நகர்ந்தது.

அதுக்கப்புறம் வைதீகம் சம்பந்தமான ஆட்கள் உள்ளே நுழையுறாங்க. அப்ப பார்த்து எழுகிற கேள்விதான் இது. சமூகத்தில் பல பேர்களிடம் இருந்து எழும் கோவம்தான் இது. கலைஞர்களாக இருக்கும் எல்லாரிடமிருந்தும் வெளிப்படும் கோவம்தான் அது.”

Madras Radicals: அரிப்புக்காரர்கள் அப்படினு நகைத்தொழில் சாரந்து வாழக்கூடிய இன்னொரு இணைத்தொழிலாளர்களைக்  குறிப்பிடுறீங்க. அவங்களை பற்றிய பதிவுகள் எங்கேயும் காணக் கிடைக்கிறதில்லை. அவர்கள் யார்? பொன் தொழிலில் அவர்களின் பங்களிப்பு என்ன?

தாணு பிச்சையா: “இப்ப எல்லா மாநகரங்களிலும் நிறைய நகை தொழிலாளர்கள் இருக்காங்க. அங்க இருக்க பட்டறையில நீங்க தூப்புகாரங்கள பார்க்க முடியும். நகைப் பட்டறைகளில் குப்பை மண்ணு சேரும். அந்த குப்பை மண்ணுல இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க அதை வந்து காண்ட்ராக்ட் போட்டு வாங்கிட்டு போவாங்க. எழுத்தாளர் சுகுமாரன் கூட அவர்களை மையப்படுத்தி ஒரு சிறுகதை எழுதியிருக்கார்.

அரிப்புங்கிறது நகைத் தொழில் செய்யும் இடங்களில் ஓடக்கூடிய நீர் வடிகால்ல சல்லடை போட்டு அரிப்பாங்க. அவங்க சங்கம் வச்சு இப்போ அமைப்பா இயங்குறாங்க. அரிப்புகாரங்க வேற தூப்புகாரங்க வேற. நாகர்கோயிலில் அரிப்புகாரங்களா தேவர் சமூகத்தை சேர்ந்தவங்க குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்  இருக்காங்க. மற்ற இடங்கள்ல பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான் இருக்காங்க. ஏன்னா அவங்களுக்கும் தங்கத்திற்கு காலம்காலமா தொடர்பு இருக்கு.

Madras Radicals: இன்னொரு கவிதையில் குருநாதன் நகையை முடித்தவுடன் சுத்தியலை தூக்கி எறிந்தார். பின்பு சீடனை எடுத்துவர பணித்தார்னு ஒரு கவிதை சொல்லுது. அது சடங்கா? அல்லது வழிமுறையா?

தாணு பிச்சையா: “தங்கத்தை அடிக்கிறது அப்படிங்கிறது ஒரு கலை. அதுல சொக்கத் தங்கத்தை தகடாக மாற்றுகிற வேலை இருக்கு. அந்த வேலையை செய்யிறவரு அந்த வேலையத் தாண்டி தனக்கு உதவி செய்யிறவருக்கு எதாவது ஒரு செக் வைப்பாங்க. அதுவரைக்கும் கூட உதவி செய்யிறவங்களுக்கு அந்த வேலை எப்படி செய்யணும் அப்படிங்கிறது மனசுல ஒவ்வொரு பகுதி பகுதியா பதியும். ஆனா கடைசியில இந்தமாதிரி குரு எதிர்பாராம செய்யிறப்ப, இல்ல செக் வைக்கிறப்ப அவன் மனசுல பதிஞ்சது எல்லாம் கலைஞ்சிடும். அந்த கவிதை முடியிறது கிண்ணம் கலங்கியது தூரோடு அப்படினு முடியும். அதாவது எல்லாம் கலைஞ்சிடுச்சு. இது தொழில்சார்ந்த ஒரு நிகழ்வு.

இவை எல்லாமே சடங்கு சார்ந்து நம்பிக்கை சார்ந்து செய்யும் செயல்கள். அதுவரைக்கும் தெரிஞ்ச விஷயத்தை மறந்து இத செய்யறதுக்கு ஒரு தனிப்பட்ட பயிற்சி வேணுமானு அவன் மனசு யோசிக்கும். ஏன்னா குருநாதன் மூணுமுறை அந்த சுத்தியல சுத்தி மூலையில் விட்டெறிந்தபின் அதப்போய் எடுத்துட்டு வான்னு சொல்லும்போது அதை எடுக்கலாமா இல்ல அதுக்கு எதாவது பயிற்சி வேணுமானு அவன் மனசு போகும். அப்ப அதுவரை நினைவில் இருந்தது எல்லாம் மறையும். இது ஒரு  மாயம் போல நடக்கும். சொல்லப்போனா இது சாமி கும்பிடறப்ப சூடம் காட்டுறது போலதான்.”

Madras Radicals: உங்களது அடுத்த படைப்பை எதிர்நோக்குகிறோம். அது தொடர்பாக தகவல்கள் சொல்ல முடியுமா?

தாணு பிச்சையா: “ஒரு நாவல் எழுதவேண்டி தகவல்களை சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். ஆரமிச்சு வேலை பளு காரணமா அப்படியே இருக்கு.”

வார்த்தைகளின்  பல்வேறு பரிமாணங்களை காட்டுவதுடன் தெளிந்த எண்ணத்தை மேலும் மெருகாக்குவதே ஒரு படைப்பின் நோக்கம் என்பதில் உறுதியாக இருக்கிறார் கவிஞர் தாணு பிச்சையா. தான் கண்டடைந்த மினுக்கத்தை கவிதைகளின் வழியே நமக்கும் கடத்தியிருக்கிறார். மினுக்கத்தைத் தேடும் சிறுவனாக வாசகர்கள் மாறியிருக்கிறார்கள். நிறைவான உரையாடல் பல்வேறு புரிதல்களை வழங்கியிருக்கிறது. அடுத்த படைப்பிற்கு வாழ்த்துகள் தெரிவித்து முடித்தோம் உரையாடலை.

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள்:

உயிர்எழுத்து பதிப்பகம் ,
1/47 அழகிய மண்டபம்,
9, முதல் தளம்,
தீபம் வணிக வளாகம்.
கருமண்டபம்.
திருச்சி -1

அலைபேசி : 99427 64229.

விலை :65/-Rs

இக்கட்டுரையின் முதல் பாகத்தில் ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்’ புத்தகத்தின் அறிமுகமும், கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ் அவர்களின் பேட்டியும் இடம் பெற்றது. அதனைப் படிக்க:

பாகம் 1: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *