கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

”விஞ்ஞானத்த வளர்க்கப் போறேன்டி” இந்தியாவின் சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

”கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி 
மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.”

ரயில் பயணத்தை வர்ணித்து பாடும்போது, கலையினை அழகியலோடு சுருக்கி விடாமல், ரயில்கள் சாதி, மதத்தினை ஒழித்துவிட்டு அனைவரையும் இணைத்து செல்கின்றன என்று பாடி சமூக மாற்றத்தின் கூறுகளை முன்னிறுத்திய என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று. 

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் நாகர்கோயில் அருகில் உள்ள ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி சுடலைமுத்து – இசக்கியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கிற சிறுவனாகத் துவங்கி, நாடக நடிகராக கலையுலகில் காலடி பதித்த என்.எஸ்.கிருஷ்ணன் சிறந்த நடிகராக, நாடக ஆசிரியராக, பாடலாசிரியராக, திரைப்பட இயக்குநராக, திரைப்பட  தயாரிப்பாளராக என பல்வேறு பரிமாணங்களில் உச்சங்களைத் தொட்டார். 

சதிலீலாவதி படத்தில் வில்லுப்பாட்டுக்காரராக அறிமுகமான அவர், சமூக சீர்திருத்த கருத்துகளை, மூடநம்பிக்கை எதிர்ப்பு கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்கு கலைத்துறையைப் பயன்படுத்தியவர்.

கே.தியாகராஜ பாகவதர் புதிய இல்லத் திறப்பு விழாவுக்கு சேங்காலிபுரம் அனந்தராமர் தீட்சிதரை கலாட்சேபம் செய்ய அழைத்தபோது. கோயில் நிகழ்ச்சிகளுக்கும் பிராமணர் வீட்டு  விசேஷங்களுக்கு மட்டுமே நான் போவேன் என்று அனந்தராமன் மறுத்தார். அனந்தராமன் மறுத்ததை அறிந்த கலைவாணர், ’கிந்தனார்’ காலட்சேபம் என்ற ஒன்றை உருவாக்கி பாகவதர் வீட்டு நிகழ்வில் அரங்கேற்றினார். தீண்டாமை, ஜாதிக் கொடுமைகளை மிகச் சிறப்பாக விளக்கிய அந்த நிகழ்ச்சியானது, உடுமலை நாராயணகவி பாலாசிரியராக, அண்ணா திரைக்கதை வசனம் எழுதி, என்.எஸ்.கே இயக்கிய நல்லதம்பி திரைப்படத்தில் காட்சியாகவும் சேர்க்கப்பட்டது.

என்.எஸ்.கே கலைத்துறையில் தீவிரமாக இயங்கிய காலம் என்பது பல்வேறு புதிய மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அதேபோல சமூக மாற்றுக் கருத்துக்கள் பலவற்றை மக்கள்முன் வைத்தவர் என்.எஸ்.கே. 

சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல் ஒரு கொடை வள்ளலாகவும் என்.எஸ்.கே விளங்கினார். ரசிய அரசின் அழைப்பின் பேரில் 1951-ம் ஆண்டு அங்கு சென்று கலை நிகழ்ச்சிகள் பல நடத்தியவர். என்.எஸ்.கிருஷ்ணனிடம் ரஷ்யப்  பயணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, ரஷ்யாவில் ”அக்ரஹாரமும் இல்லை..சேரியும் இல்லை” என்று பதில் சொன்னார். 

1952-ல் நாடக கழகத் தலைவராகவும், 1956-ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குறியவர்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் என்.எஸ்.கிருஷ்ணர் அவர்களுக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். அதுமுதல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றுதான் என்.எஸ்.கே அழைக்கப்பட்டார். முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை ”நகைச்சுவை அரசு” என்று பாராட்டினார். 

உங்கள்  கொள்கை  என்னவென்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, சுயமரியாதை என்று சொன்ன என்.எஸ்.கே எல்லா கட்சியினராலும் நேசிக்கப்பட்ட மனிதராக இருந்தார். 

கலைவாணர் குறித்து பேசுகிற போது பெரியார்,

”இனி என்.எஸ்.கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி ‘அன்னக்காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்.”

என்கிறார்.   

திராவிட இயக்கங்களை தீவிரமாக ஆதரித்த என்.எஸ்.கே தனது இறுதி நிகழ்வாக சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் நடந்த அண்ணாவின் படத்திறப்பு நிகழ்வில்தான் கலந்துகொண்டார்.

1969 அண்ணா தனது கடைசி நிகழ்வில், என் எஸ் கே-வின் சிலையை திறந்து வைத்து,

”வெறும் கலைஞராக இருந்து தங்களுடைய கலைத்தொண்டை ஆற்றியவர்கள், கலையுலகத்துக்கு மட்டும் தொண்டாற்றுகிறார்கள். வெறும் கலைஞராக இருந்து தங்களுடைய சொந்த வருவாயைப் பெருக்கிக்கொள்பவர்கள், தங்களுடைய குடும்பத்தையும் நண்பர்களையும் நல்ல முறையிலே வைக்கின்றார்கள். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தன்னுடைய தொண்டுகளைச் செய்யவேண்டும்; அதற்கு இந்தக் கலை ஒரு வழிகாட்டுதலாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்”

என்று பேசினார் 

என்.எஸ்.கே படத்தினை திறந்து வைக்கும் அண்ணா

1957-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் நாள் தனது கலைப்பயணத்தை நிறுத்திக் கொண்டார் கலைவாணர். ”விஞ்ஞானத்தை வளர்க்க போறேன்டி” என்று அறிவியலைப் பாடி, சமத்துவத்தைப் பாடி, இந்தியாவின் சாப்ளின் என்றும் நாகரிகக் கோமாளி என்றும் புகழப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கே-வின் இடம் அவருக்கு பின் நிரப்பப்படாமலேதான் இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *