கு.அழகிரிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
கு.அழகிரிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் குருசாமி – தாயம்மாள் ஆகியோருக்கு செப்ம்பர் 23, 1923 அன்று மகனாகப் பிறந்தார். கரிசல் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்லப்படும் கி.ராஜநாராயணன் அவர்களின் பால்யகால நண்பர் இவர்.
’உறக்கம் கொள்ளுமா?’ எனும் இவரது முதல் சிறுகதை 1943-ம் ஆண்டு ’ஆனந்த போதினி’ என்ற மாத இதழில் வெளிவந்தது. ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் தாக்கம் இவரிடம் மிக அதிகமாக இருந்தது . கார்க்கியின் எழுத்துகளை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்தவர் இவர்தான்.
’ஆனந்த போதினி’, ’பிரசண்ட விகடன்’, ’தமிழ்மணி’, ’சக்தி’ ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன்பின் மலேசியாவில் ’தமிழ்நேசன்’ உள்ளிட்ட பத்திரிக்கைகளில் பணி செய்துவிட்டு 1957-ம் ஆண்டு சென்னை திரும்பினார். அதன்பின் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், அதன்பின் ’நவசக்தி’ நாளிதழில் பணியில் இருந்தார். ’நவசக்தி’ இதழில் இருந்த காலத்தில்தான் அவர் ’கவிச்சக்ரவர்த்தி’ என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார்.
எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து “கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற நூலாக வெளியிட்டார்.
கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ’ராஜா வந்திருக்கிறார்’ என்ற இவரது சிறுகதை மிகவும் பிரபலமான கதையாகும். இது இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது.
இவரது ’அன்பளிப்பு’ எனும் சிறுகதை தொகுப்பிற்கு 1970-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. தமிழில் முதன்முதலில் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு ’சாகித்ய அகாதமி’ விருது வழங்கப்பட்டது இவருக்குத்தான். அதற்குமுன் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி வழங்கும் வழக்கம் இல்லை.
இவரது கடிதங்கள் குறித்து கி.ராஜநாராயணன் தனது ’கதைச்சொல்லி’யில் எழுதும் போது,
“கடிதங்கள் நம்மை அந்த காலத்துக்கே கொண்டு போய்விடுகிறது. ஒரு படைப்பாளியின் ஆரம்பகாலம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது, எத்தகைய ஆசைக் கனவுகள், சோகங்கள் கொண்டதாக இருந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது.”
அக்கடிதத்தின் வழியாக, வெளி இலக்கிய உலகத்துக்குத் தெரியாத எனது ஒருபக்க வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை நானும் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று கி.ரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கி.ரா அவர்கள் தொடர்ந்து எழுதும்போது, ”ஒரு கடிதத்தின் இடையே புதுமைப்பித்தனின் அந்திம காலத்தை (கடிதம் 16548) கு.அழகிரிசாமி சொல்லுகிறான். “இறந்துபோய் விடுவேன்” என்று சொல்லி புதுமைப்பித்தன் அழுததாக பதிவு செய்கிறான். தமிழிசை எங்களை என்ன பாடுபடுத்தியிருக்கிறது என்று மீண்டும் அறிந்துகொள்ள முடிகிறது என்று கூறிப்பிடுவார்.”
என்று எழுதியிருப்பார்.
டாக்டர் அனுராதா, புது வீடு புது உலகம் உள்ளிட்ட நான்கு நாவல்களும், மூன்று பிள்ளைகள், காளிவரம் ஆகிய இரண்டு சிறுவர் இலக்கியமும்,
மாக்சிம் கார்க்கியின் நூல்கள், லெனினுடன் சில நாட்கள் உள்ளிட்ட ஐந்து மொழிப்பெயர்ப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார்.
வஞ்ச மகள், கவிச்சக்கரவர்த்தி ஆகிய நாடகங்களையும், சாகித்ய அகாதமி விருது பெற்ற ’அன்பளிப்பு’ உட்பட ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி தமிழ் தந்த கவியின்பம், தமிழ் தந்த கவிச்செல்வம், நான் கண்ட எழுத்தாளர்கள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
அவருடைய தியாகம் சிறுகதை ஒரு கிராமத்து மளிகை கடைக்காரரை மையப்படுத்தியது, சுயரூபம் கதையில் வரும் மங்கம்மாள் சாலை என்பது கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையிலான நெடுஞ்சாலை. இது உணவுக் கடை நடத்துபவரை பற்றியது.
இவரது ‘ராஜா வந்திருக்கிறார்கள்’ சிறுகதை வறுமையின் நிலையையும், அதைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்திய கதை.
இவரது அன்பளிப்பு சிறுகதை பத்திரிக்கை எழுத்தாளர் ஒருவர் கதை சொல்வது போல அமைந்த கதையாகும்.
கிராமத்து வாழ்க்கை, அரசுப் பணி, இதழ் மற்றும் பதிப்பகப் பணி, மலேசியப் பயணம் என்று கு.அழகிரிசாமி பல அனுபவங்களைக் கொண்ட எழுத்தாளராக விளங்கியதால் அவரது கதைகளின் பரப்பும் விரிந்த தளம் கொண்டது.
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கிய கு.அழகிரிசாமி 1970-ம் ஆண்டு சூலை 5 அன்று இயற்கை எய்தினார்.