ஜி.நாகராஜன்

நவீன தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகளை உடைத்த ஜி.நாகராஜன்

எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

“நாட்டில் நடப்பதை சொல்லியிருக்கிறேன். அதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால், ஏன் இப்படி நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ஏன் இதை எழுத வேண்டும் என்று கேட்காதீர்கள். உண்மையை சொல்வது என்றால் முழுமையும் தான் சொல்லவேண்டும். நான் விரும்புமளவுக்கு சொல்ல முடியவில்லையே என்பதுதான் எனது வருத்தம்”

என்று ’குறத்தி முடுக்கு’ புத்தகத்தின் முகப்பில் எழுதியிருப்பார் ஜி.நாகராஜன்.

ஜி.நாகராஜன் 1929-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மதுரையில் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தார்.

திருமங்கலதத்திலும், பழனியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். மதுரை கல்லூரியில் புதுமுக வகுப்பைப் படித்து பல்கலைகழகத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார். அதே மதுரை கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பையும், முதுகலை படிப்பையும் படித்து தேர்ச்சி பெற்றார்.

காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராக பணியை துவங்கியவர், பின்னர் சென்னை கணக்காயர் ஒருவரின் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு ஆசிரியர் பணிக்கே வந்தார். சென்னை வாழ்க்கை இவரது வாழ்வில் முக்கியமான சில மாற்றங்களை  உருவாக்கியது. சென்னையில் இருந்தபோதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால்  ஈர்க்கப்பட்டார். மதுரை திரும்பிய போதும் அந்த தொடர்பு விரிவடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கான அரசியலில் முழுநேரமாக ஈடுபடத் துவங்கினார். பல இடதுசாரி சிந்தனையாளர்களுடன்  தொடர்பு ஏற்படுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கான வேலையைத் துறந்து முழுநேர கட்சி ஊழியராக மாறினார். தனியார் பயிற்சி கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

1952-ம் ஆண்டு முதல் இவர் திருநெல்வேலிக்குச் சென்று பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் தனி பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் துவங்கினார். அப்போது ஜெயகாந்தன், சுந்தரராமசாமி உள்ளிட்டோருடன் நெருங்கி பழகத் துவங்கியவர், 1956-ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.

தமிழ் நவீன இலக்கியம் வரையறுத்து வைத்திருந்த எல்லைகளுக்கு வெளியில் எழுதியவர்களில் ஜி.நாகராஜன் முக்கியமானவர். குடும்ப எல்லைகள் தாண்டாமல் நாவல்கள் உருவாகி வந்த காலத்தில், நாவல்களுக்கு  என்று நிறுவப்பட்ட மரபுகளுக்கு எதிராக ஜி.நாகராஜனின் எழுத்து இருந்தது.

ஜி.நாகராஜனின் படைப்புலகம் அதுவரை வந்த புனைவுகளின் மனவெளியிலிருந்து விலகி, ரத்தமும் சதையுமான சமூக எதார்த்தங்களை நோக்கிச் சென்றது. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், அவர்களிடம் வந்து செல்பவர்கள், அதற்கான தரகர்கள் ஆகியோரின் வாழ்க்கைக்குள் அதிகம் எழுதினார்.

’குறத்தி முடுக்கு’ தமிழ் புனைவில் ஒரு புதிய திசையாக வந்தது. சுதந்திரம், சட்டம், சமூக ஒழுங்கு, காவல், நீதி, நிர்வாகம் என்ற நவீன சமூகத்தின் பிம்பங்களின் கவர்ச்சிகளுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் கசப்பையும், வன்மங்களையும் அது எழுத்தில் வடித்தது.

திருநெல்வேலியில் உள்ள வள்ளி குறத்தி முடுக்கு எனும் விலைமாதர் பகுதியில் இருக்கும் தங்கம், மரகதம்,செண்பகம், தேவயானை என்கிற நாலு விலைமாதர்களின் வாழ்க்கை, வலி, அவர்கள் சந்தித்த துரோகம், அவமானம், காதல் என நீளும் நாவல்தான் குறத்தி முடுக்கு. இது ஜி.நாகராஜன் நெல்லையில் இருந்தபோது பார்த்த மாடத்தெருவின் வாழ்க்கைதான் என்றும் கூறுகிறார்கள்.

இதில் தங்கத்திற்கும் அவளிடம் வாடிக்கையாளனாக வரும் நான் என்ற பத்திரிக்கையாளனுக்கும் இடையிலான காதல்தான் மையம். அதை சுற்றித்தான் கதைக்களம். அதில் தனக்கு கரு உருவாகி குழந்தை பெற வேண்டும் என்று விரும்புகிற செண்பகம் உள்ளிட்ட மற்ற பெண்களின் கதையும் சேர்க்கப்பட்டு பிண்ணப்பட்டதுதான் நாவல். தங்கத்திற்கும் பத்திரிகையாளனுக்குமான உறவு, பயணம், உணர்ச்சி, போராட்டம் இவைதான் காதல். 

அதுவரையில் தமிழ் நவீன இலக்கியத்தில் பேசப்பட்ட உடல் இச்சையில் இருந்து காதலை நோக்கிய பயணம் இது. முதல் சந்திப்பில் தங்கம் அதீத அன்பைக் காட்டுகிறபோது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று சந்தேகத்துடன் பார்ப்பவன்தான் அவளை திருமணம் செய்ய தேடி அலைபவனாக மாறுகிறான்.

அவரது இன்னொரு நாவலான ’நாளை மற்றுமொரு நாளே’ என்பதும் அப்படியானதுதான். சராசரிக்கும் கீழாக வாழும் கந்தன் எனும் மனிதன். காலையில் எழுந்ததும் சாராயமும், காமமும் அவனது வாழ்க்கை. ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையில் ஏற்படும் காதல், காமம், ஏமாற்றம், கோபம், குற்றம் இவைதான் அந்த நாவல். 

தன் மனைவியை காசு கொடுத்து சோலை என்பவனிடம் வாங்கும் கந்தன், இறுதியில் அவள் மீதான அன்பில் ”அவளுக்கு வேற நல்ல இடமாக பாரு” என்று சொல்வதும் காதல்தான். 

’நாளை மற்றொரு நாளே’ ஆங்கிலத்தில் ‘Tomorrow One more Day’ என்ற பெயரில் எழுத்தாளர் சி.மோகன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.

மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல. அப்போதுதான் ஏமாற்றங்கள் குறையும் என்பார் ஜி.நாகராஜன்.

”அடுத்து வருபவன் ஆணா, கிழவனா, வாலிபனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்பாடாமல் அவனிடத்தில் தன்னை ஒப்படைக்கிறாளே, அந்த சிறுமியிடத்தில் ஒரு தெய்வீக உணர்வை யாரும் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிக்கு இரையாகமால் இருப்பவன் ஒருவனே அதைப் புரிந்துகொள்ள முடியும்” என்று பரத்தையர் குறித்து குறிப்பு எழுதுகையில் எழுதியவர் ஜி.நாகராஜன்.

கதைகளில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது, கதாபாத்திரங்கள் வழியாக உணர்ச்சிகளைக் கொட்டாது, கதையையும் கதாபாத்திரங்களையும் சர்வ சாதாரணமாக உணர்ச்சிவசப்படுத்தும் சந்தர்ப்பங்களில் கடத்திச் செல்வது இவரது எழுத்தின் பாணியாகும்.

அவரது வார்த்தைகளில் இன்று அதிகம் பயன்படுத்தப்படுவது, ”மனிதனைப் பற்றி ஏதேனும் சொல்லச் சொன்னால் மனிதன் ஒரு சல்லிபய என்றுதான் சொல்வேன்” என்றார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 19, 1981-ம் நாளன்று மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் ஜி.நாகராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *