தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
பொதுவுடைமை சிந்தனைகளையும், தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் புனைவுகளாக்கியவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி.
விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூருக்கு அருகில் உள்ள கே.மேட்டுப்பட்டியில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார். கலை மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்று சாத்தூரில் உள்ள ஆரிய வைசியா உயர்நிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தன்னுடைய இலக்கிய நடவடிக்கைகளுக்கு தலைமையாசிரியர் பணி இடையூறாக இருப்பதாக உணர்ந்ததால் அப்பணியைத் துறந்து அதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றினார்.
துவக்க காலத்தில் தனித்தமிழ் இயக்கம் மற்றும் காந்தியக் கொள்கைகளின் ஆதரவாளராகவும் அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். பின்னர் அவர் பொதுவுடைமை சிந்தனையாளராக மாறினார்.
அவரது முதல் சிறுகதை ’சிம்ம சொப்பனம்’ 1978-ம் ஆண்டில் வெளிவந்தது. 1985-ம் ஆண்டில் எழுதப்பட்ட தோழர் என்ற நாவல் இவரது சிறந்த படைப்பாகும். இவரது சிறுகதைகள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தன.
1990-ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வெளியீட்டு அங்கமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இவருக்கு ’சிறந்த தமிழ் சிறுகதை எழுத்தாளர்’ என்ற விருது வழங்கியது. 1992-ல் ’தீம்தரிகிட’ என்ற இவரது நாவலுக்காக லில்லி தேசிகமணி நினைவு விருதினைப் பெற்றார்.
ராமசாமி அவர்களின் கதைகள் மற்றும் நாவல்கள் கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழி போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாட்டுப்புறக் கதை என பல இலக்கிய வடிவங்களில் பங்காற்றியவர்.
இவரது கதைகள் நாட்டார் மரபு வழிப்பட்ட கதைகள், குறிப்பாக செந்தட்டிக்காளையை வைத்து எழுதப்பட்டவை; ஊர்ப்புற வெள்ளந்தியான மனிதர்களை மையப்படுத்தியவை.
தங்கள் குடும்பத்திற்காக தங்களுடைய படிப்பு, எதிர்காலம், விளையாட்டுத்தனம், பிள்ளை வயது, குறும்புத்தனம் என அனைத்தையும் துறக்கும் குழந்தைத் தொழிலாளியின் துன்பத்தினை ‘கந்தகக் கிடங்கிலே…’ கதையில் ஆசிரியர் சித்தரித்துள்ளார்.
‘‘நாலு மணிக்கு முன்ன பஸ்ஸை எதிர்பார்த்துப் புள்ளையார் களத்துக்கு ஓடுனா… ராத்திரி எட்டு மணிக்குத்தான் திரும்பக் கொண்டாந்து அந்தப் பஸ் கொட்டிட்டு போகும்.
பயராபீஸ்காரனும், தீப்பெட்டி ஆபீஸ்காரனும் பிள்ளைகளை மட்டுமா அள்ளிப்போட்டுக்கிட்டு போனாங்க…? கூடவே… இந்த ஊர் விளையாட்டையும், சிரிப்பையும், அழகையும் அள்ளிட்டுப் போயிட்டாங்களே” என்று பதிவு செய்திருப்பார்
இந்த கதைப்பகுதியில் கல்வி கற்காமல் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு வறுமையை ஆசிரியர் காரணமாக்கியுள்ளார்.
தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய இயலாத பெற்றோரே, தங்கள் குழந்தைகளைக் குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்குகின்றனர். இதனை, தான் வாழ்ந்த சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களைக் கண்டு எழுதியவர்
வேலைக்கு செல்வதால் உடன் பிறந்தவர்களை அன்புடன் பாதுகாக்கும் மூத்த குழந்தைகள், இருக்கும் உணவை தன் தம்பி தங்கைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து ஒரு தாயைப் போல பரிவுடன் நடந்து கொள்வதைத் தனுஷ்கோடி ராமசாமி கதைகளில் காணலாம்.
கந்தக பூமியின் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாடுகளை இலக்கியமாக்கிய தனுஷ்கோடி ராமசாமி 2004-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் இன்று!