புலவர் குழந்தை

இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்களை அறிவோம்

புலவர் குழந்தை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

ஈரோடு மாவட்டம் ஓலவலசை எனும் கிராமத்தில் தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி ஆகியோருக்கு 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். 

இவரின் கல்வி திண்ணையில் தொடங்கியது. 1937-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசை கிராமத்தில் முதன்முதலாக கையெழுத்து போடத் தெரிந்தவர் இவரே. இவருக்கு முன் அங்கு யாரும் படிக்கவில்லை.

பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் பணியாற்றினார். பவானி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.  

இளம் வயதிலேயே கவி பாடும் திறன் கொண்ட இவர் மரபுக் கவிதைகளில் பெரும் திறன் படைத்தவராக இருந்தார். 

ஆரம்பத்தில் ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு, வெள்ளக்கோவில் வீரகுமாரசாமி காவடிச்சிந்து என்று எழுதிக்கொணடிருந்த  புலவர் குழந்தை, சுயமரியாதை இயக்க அறிமுகத்திற்குப் பின் பகுத்தறிவுப் பாவலர் ஆனார். 1938-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் 1948, 1965 ஆகிய அனைத்து இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.

1946 முதல் 1958-ம் ஆண்டு வரை ‘வேளாண்’ இதழை தொடர்ந்து நடத்தி வந்தார்.

1948-ம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டில் குறளுக்கு உரை எழுத ஒரு குழு அமைக்கப்பட்டது. நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் புலவர் குழந்தையும் இருந்தார்.

புலவருக்கு திருக்குறள் மீது இருந்த ஆழ்ந்த புலமையால், அவர் 25 நாட்களில் திருக்குறளுக்கு ஓர் அருமையான உரையை எழுதி முடித்தார். அது ‘திருக்குறள் குழந்தையுரை’ என்று அழைக்கப்பட்டது.

‘யாப்பருங்கலக் காரிகை’ சற்று கடினமாக இருந்ததால், அதை எளிதாக்கி ‘யாப்பதிகாரம்‘ என்ற நூலை எழுதினார். பவணந்தி முனிவரின் நன்னூலை எளிமையாக்கி ‘இன்னூல்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘தொடையதிகாரம்’ என்பது இவரின் இன்னொரு இலக்கண நூல்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு இவர் எழுதிய முழு உரை ‘தொல்காப்பியம் குழந்தை உரை’ என்று அழைக்கப்படுகிறது.

ஆரியர்களின் சமூக ஆதிக்கப் பண்பாட்டைத் தடுத்து நிறுத்தி தகர்த்தெறிந்த இராவண காவியம் வெளியான ஆண்டு 1948. இவரது இலக்கியப் பணிகளில் மிக பெரிதாக பார்க்கப்படுவது ராவண காவியம்.  திராவிட இயக்கத்தினர் கம்ப ராமாயணத்தில் உள்ள பிற்போக்குத் தனங்களையும், ஆரியத் தன்மையையும், ஆபாசங்களையும் எதிர்த்தபோது சில தமிழறிஞர்கள் அதில் உள்ள கவிநயம், இலக்கியச் சுவை ஆகியவற்றை புறம்தள்ள முடியாது என்றனர். அதனால் கம்பனை விட இலக்கியச் சுவையான காவியத்தை படைத்தவர் புலவர் குழந்தை என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர்கள் கூறுவர்.

கம்பர் 12 ஆயிரம் பாடல்களைப் பாடி இருப்பார். தனது இராவண காவியத்தில்  3100 பாடல்களைப் பாடினார் புலவர் குழந்தை. புலவர் குழந்தை பாடிய இராவண காவியத்தை தடை செய்தது அன்றைய காங்கிரஸ் அரசு. பின்னர் 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அத்தடை நீக்கப்பட்டது.

“தமிழ் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக் கதைகளையே பாடிவந்தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்” என்று 1971-ம் ஆண்டு விழுப்புரத்தில் புலவர் குழந்தையை பாராட்டினார் தந்தை பெரியார்.

இராவண காவிய நூலில் அறிஞர் அண்ணா எழுதிய அணிந்துரையில், “இராவண காவியம் பழைமைக்குப் பயணச்சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு”  என்று கூறியிருப்பார்

ராவண காவியத்தின் 5 காண்டங்கள்

தமிழ்க்காண்டம்
இலங்கைக் காண்டம்
விந்தக் காண்டம்
பழிபுரிக் காண்டம்
போர்க் காண்டம்

ஆகியவை இராவண காவியத்தின் 5 காண்டங்கள்.

57 படலங்கள், 3100 பாடல்களைக் கொண்ட இராவண காவியத்தின் தலைவர் இனமான இராவணன்.

அரசியலதிகாரம், காமஞ்சரி, நெருஞ்சிப்பழம், ஆடிவேட்டை, கன்னியம்மாள் சிந்து, புலவர் குழந்தை பாடல்கள் என 13 கவிதை நூல்களும், யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன்னூல் என முன்று இலக்கண நூல்களும், திருக்குறள் குழந்தையுரை, தொல்காப்பிய பொருள்திகாரம், குழந்தையுரை, நீதிக்களஞ்சியம் உள்ளிட்ட உரை நூல்களும், தொல்காப்பியர் காலத்தமிழர், திருக்குறளும் பரிமேலழகரும், புவாமுல்லை, கொங்கு நாடு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குநாடும் தமிழும் உள்ளிட்ட பதினைந்து உரைநடை நூல்களும் எழுதியவர் புலவர் குழந்தை.

பேச்சாளராக, பெரும்புலவராக விளங்கிய புலவர் குழந்தை1972-ம் ஆண்டு செட்டம்பர் 22-ம் நாள் மறைந்தார். அவரது நூல்கள் 2006-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது. ராவண காவியம் தந்த புலவர் குழந்தை நினைவு நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *