கவிஞர் மருதகாசி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் அய்யம்பெருமாள் – மிளகாயி ஆகியோருக்கு மகனாக 1920-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் நாள் பிறந்தார் மருதகாசி. இது திறைகவி திலகம் மருதகாசியின் நூற்றாண்டு ஆகும்.
உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.
நாடக சபையில் பாடல் எழுதினார்
மருதகாசி இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் “தேவி நாடக சபை”யின் நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதி வந்தார். அந்த காலகட்டத்தில் மு.கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதியவர் ஆவார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றிய போது, இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார்.
திரைப்படப் பாடல்கள்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் 1949-ம் ஆண்டு மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்த படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். ஜி.ராமநாதன் இசை அமைத்த மெட்டுகளுக்கு தனது முதல் திரைப்படப் பாடலை மருதகாசி எழுதினார். ”பெண் எனும் மாயப் பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ” என்று தொடங்கும் அந்த பாடல் மருதகாசியின் முதல் திரையிசைப் பாடலாகும்.
அதைத் தொடர்ந்து பொன்முடி (1950) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்…நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் அவரின் திறனுக்கு சான்றாக அமைந்தன.
உவமைக் கவிஞர் சுரதாவின் கதை-வசனத்திலும், எப்.நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி.
தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
எல்லாவிதமான சூழலுக்கும் விரைவில் எழுதக் கூடிய கவிஞர்
அந்தக் காலகட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் திரையில் எழுதியிருக்கிறார். எல்லாவிதமான சூழலுக்கும் மெட்டுக்கும் விரைவாக எழுதக்கூடிய ஒரே கவிஞராகவும் அவரே அக்காலத்தில் இருந்திருக்கிறார்.
காலத்தால் அழிக்க முடியா பாடல்கள்
’சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’, ’சமரசம் உலாவும் இடமே’, ’முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’, ’ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை’, ’மணப்பாறை மாடுகட்டி’, ’ஆனாக்க அந்த மடம்’, ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’, ‘காவியமா? நெஞ்சின் ஓவியமா?’ முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் இன்றும் நிலைத்திருப்பவையாகும்.
பட்டுகோட்டையாரும் கண்ணதாசனும் எழுதியதாக இளம் தலைமுறையினர் நம்புகின்ற பல பாடல்களை எழுதியவர் மருதகாசி ஆவார். உதாரணமாக ‘வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே’ என்னும் பாடல் கண்ணதாசன் எழுதியதாக பலர் எழுதுகிறார்கள். ஆனால் ஆதை எழுதியவர் மருதகாசி.
எம்.கே.டி.பாகவதரின் “புதுவாழ்வு” படத்திற்கு எழுதிய “சீனத்து ரவிக்கை மேலே” என்று ஆரம்பிக்கும் பாடல் கலைவாணவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குற்றாலக் குறவஞ்சியின் பாதிப்பில் எழுதப்பட்ட அப்பாடல், நாடக பாணியில் அமைந்த நாட்டார் பாடல் வகையை ஒத்திருக்கிறது.
அதன் பின் கலைவாணரின் படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர்களில் ஒருவராக மருகாசியும் சேர்ந்தார். என்.எஸ்.கே-வின் புகழ்பெற்ற பாடலான “சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமானது சிரிப்பு” எனும் பாடல் மருதகாசி எழுதியதே.
பாராட்டி கட்டுரை எழுதிய அண்ணா
தங்கரத்தினம் படத்தில் “இன்னொருவர் தயவெதற்கு இந்நாட்டில் வாழ்வதற்கு இல்லையென்ற குறையும் இங்கே இனிமேல் ஏன் நமக்கு” என்று எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காக மருதகாசி எழுதிய வரிகளைப் புகழ்ந்து, “திராவிட நாடு” பத்திரிகையில் ஐந்து பக்கங்களுக்கு அண்ணா ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.
மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாச்சாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி.
’திரைக்கவித் திலகம்’ என்னும் பட்டம் பெற்றவர் மருதகாசி. மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மருதகாசி, 29.11.1989-இல் காலமானார். திரையிசைப் பாடல்களில் இடம்பெற்ற பாகவதத் தமிழ், படிப்படியாகப் பாமரத் தமிழுக்கு முற்றிலும் தொனி மாறிய காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் மருதகாசி என்பது குறிப்பிடத்தக்கது.
மகத்தான கவி மருதகாசி !