ராஜா சாண்டோ

புராணங்கள் இல்லாத சினிமாவை உருவாக்கிய முன்னோடி தமிழர் ராஜா சாண்டோ

ராஜா சாண்டோ நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

இந்தியத் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த தமிழர் ராஜா சாண்டோ ஆவார். 

புதுக்கோட்டையில் பிறந்த இவருக்கு பெற்றோர் வைத்த இயற்பெயர் பி.கே.நாகலிங்கம் ஆகும். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் மும்பையில் எஸ்.என்.பதங்கரின் நேஷனல் ஃபிலிம் கம்பெனியில் சண்டை காட்சிகளில் வரும் நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக ஜெர்மானிய பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார்.

ராஜா சாண்டோ

மவுனப் படங்களில் நடிகராகத் துவங்கினார்

1922-ல் பதங்கரின் ’பக்த போதனா’ படத்தில்தான் இவருக்கு முதன்முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்ததற்கு இவருக்குக் கிடைத்த வருமானம் ரூபாய் 101 ஆகும். வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற மவுனப் படங்கள் இவருக்கு நல்ல நடிகரெனப் பெயர் வாங்கிக் கொடுத்தது . 

சில மவுனப் படங்களில் நடித்த பின்னர் ரஞ்சித் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் இயக்குனராக மாத சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார். இவர் இயக்கிய முதல் மவுனப் படம் ’சினேஹ் ஜோதி’ ஆகும். 

தமிழ்நாட்டில் இயக்கி நடித்த மவுனப் படங்கள்

தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர்.பத்மநாபனின் அசோசியேட் ஃபிலிம் நிறுவனத்திற்காகப் பல மவுனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார். பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான மவுனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன.

பேசும் படங்களில் நடிகர்களின் பெயரை திரையில் வரச் செய்தார்

1931-ல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியவுடன் மறுபடியும் மும்பைக்குச் சென்று ஹிந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் நடிகராக ராஜா சாண்டோ

1935-ல் பேசும் தமிழ்த் திரைப்படம் இயக்குவதற்கு மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். இவர் இயக்கிய முதல் தமிழ் பேசும் படம் மேனகா. இப்படத்தில் இயக்குனர் செய்த புதுமை நடிகர், நடிகைகளின் பெயர்களை திரையில் இடம்பெறச் செய்தது. அதற்கு முன்பு வரை தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் தொழில் வல்லுனர்களின் பெயர்களையே திரையில் காட்டி வந்தார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான முதல்படம் இது.

தொடர்ந்து பல தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களை இயக்கி நடித்தார். வசந்தசேனா, சாலக் சோர், சந்திரகாந்தா, விஷ்ணு லீலா, திருநீலகண்டர், சூடாமணி ஆகியவை அக்காலகட்டத்தில் இவர் இயக்கி நடித்த திரைப்படங்களுள் குறிப்பிடத்தக்கவை

ராஜா சாண்டோ இயக்கிய சந்திராகாந்தா மற்றும் ஆராய்ச்சி மணி படங்களின் போஸ்டர்கள்

புராணங்கள் இல்லாத சமூகக் கருத்துகளை படமாக்கிய முன்னோடி

புராணக் கதைகளை மட்டுமே திரைப்படமாக்கிக் கொண்டிருந்த நிலையினை மாற்றி சமூகக் கருத்துகளைக் கொண்ட கதைகளையும் திரைப்படங்களாக உருவாக்குவதில் இவர் முன்னோடியாக விளங்கினார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய அனாதைப் பெண் கதையை அதே பெயரில் திரைப்படமாக 1931-ல் எடுத்தார். புதினம் ஒன்று திரைப்படமாக எடுக்கப்பட்டது அது தான் முதல் முறையாகும். அதற்கும் முன்னோடியாக  ராசா சாண்டோவே திகழ்கிறார்.

ராஜா சாண்டோ 31 மவுனப் படங்களும், இந்திப் படங்களும் என தன் கலை பங்களிப்பினை செய்துள்ளார். பாரிஜாத புஷ்பஹாரம், மேனகா,

வசந்த சேனா உள்ளிட்ட 9 தமிழ் படங்களும் இயக்கியிருக்கிறார். 

திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் ராஜா சாண்டோ குறித்து

இவரது திரைப்படங்கள் குறித்து திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் எழுதும் போது, ”நடிகர், இயக்குனர், திரைக்கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் ராஜா சாண்டோவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். 1940 மற்றும் 1950-களிலிருந்த பெரும்பாலான நடிகர் நடிகையர் அவரோடு வேலை செய்திருக்கிறார்கள். நடிகர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இவர் திறமையானவர். தனது படங்களை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கண்டிப்பானவராக இருந்ததால் விலங்கு சாகசப் பயிற்சியாளரென அழைக்கப்பட்டார். இவரால்தான் திரைப்படங்களில் முக்கியத்துவம் பாடல்களிலிருந்து வசனத்தை நோக்கித் திரும்பியது” என்று கூறுவார். 

கடும் நோய்வாய்ப்பட்டிருந்த ராஜா சாண்டோ 1943-ம் ஆண்டு நவம்பர் 25 ஆம் நாள் இறந்தார்.

தமிழ்த் திரையின் முன்னோடியான இவரை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு இவரது நினைவாக திரைப்படத்துறையில் சிறந்த சேவை புரிந்தோர்க்கு ஆண்டு தோறும் ”ராஜா சாண்டோ நினைவு விருது” வழங்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *