ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு புகழ்பெற்ற நடிகராக வளரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படங்களில் பெண்களுக்கென்று அறிவுரைகள் வழங்கும் வசனங்களை Exclusive ஆக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான definition-ஐ தமிழ்நாட்டு பெண்களுக்கு வகுத்தளிப்பதில் ரஜினிக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் உண்டு. அந்த வரையறைகள் பெரும்பாலும் அபத்தமானவையாகவே இருந்திருக்கின்றன. தன் வரையறைகளை நியாயப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது ஆன்மீகத்தை துணைக்கு அழைத்துக் கொள்வார் ரஜினி. 

கடந்த நூற்றாண்டு முழுதும் தமிழ்நாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் வெகுவாக நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக மனுசாஸ்திரத்தில் எழுதப்பட்ட  சட்டங்களை தூக்கியெறிவதற்கான தொடக்கப் புள்ளியை தமிழ்நாடுதான் வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வங்காளத்தில் பெண்கள் வாக்குரிமை கேட்டு போராடிக் கொண்டிருந்த சமகாலத்தில் முத்துலட்சுமி ரெட்டியை சட்டமன்றத்தில் அமரவைத்தது தமிழ்நாடு. 

பெரியாரின் கீழ் திரண்ட பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், இந்தியை எதிர்த்தும், சாதி ஒழிப்பிற்காகவும், வகுப்புவாரி உரிமைக்காகவும் தீரத்துடன் சிறைகளுக்குச் சென்றார்கள். இப்படிப்பட்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் 1980களில் தொடங்கி தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக அறியப்பட்ட ரஜினிகாந்த், நல்ல பெண்கள் என்றால் மனுசாஸ்திரத்தில் சொல்லப்பட்டதைப் போலத்தான் இருக்க வேண்டும் எனும் பரப்புரையினை மிக வேகமாக தனது திரைப்படங்களினூடாக செய்தார்.

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் பேசிய வசனங்களுக்கெல்லாம் திரையரங்குகளில் விசில் பறந்தது. பெண்களுக்கான அட்வைஸ்கள் கொடுப்பதை திரைப்படங்களில் ஒரு கலாச்சாரமாக மாற்றி நிறுத்தியதில் ரஜினிகாந்திற்கு முக்கியப் பங்கு உண்டு. 

இப்படி பெண்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் காட்சிகள், பல ஹீரோக்கள் நடித்த படங்களில் வந்திருந்தாலும், தனது பெரும்பாலான படங்களில் இத்தகைய வசனங்களை வேண்டுமென்றே திணித்து ஒரு ட்ரெண்ட் செட் செய்ததில் ரஜினி முக்கியமானவர். இன்று ‘கலாச்சார காவலர்கள்’ என்று பலராலும் கலாய்க்கப்படும் சங்கிகளுக்கு வசதியாக, தானே ஒரு கலாச்சாரக் காவலராக மாறி, அப்போதே தன் படங்களின் வாயிலாக ட்ரெண்ட் அமைத்துக் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

இதற்காகவே ரஜினியின் படங்களில் ஒரு கம்பீரமான பெண் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த பெண்ணின் கம்பீரத்தினை உடைத்து அவளை அடக்க ஒடுக்கமான குடும்பப் பெண்ணாக மாற்றுவதற்காக ரஜினிகாந்த் செய்யும் ஆக்‌ஷன்கள் அப்படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். அந்த பெண் கதாபாத்திரத்திடம் பேசுவதாக வரும் சீன்களில், சைட் கேப்பில் மொத்த பெண்களும் எப்படி இருக்க வேண்டும் என்று பஞ்ச் பேசிவிட்டுச் செல்வார் ரஜினி. 

அப்படி ரஜினி பெண்களுக்கு அளித்த 5 அட்வைஸ்கள் இதோ!

அட்வைஸ் 1

”ரங்கா படத்தில் வரும் சீன். பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும். ஒரு 9 முழம் புடவையாவது ஒடம்ப சுத்தி இருக்கனும். இங்கிலீஷ்காரன் நம்ம நாட்டவுட்டு எப்பவோ பூட்டான். நீ என்னடான்னா அவன் உட்டுட்டுப்போன ட்ரஸ்ச எடுத்து மாட்டிகிட்டு…நீ ஆயிரந்தான் சொன்னாலும் பொம்பள பொம்பளயா இருக்கனும், ஆம்பள ஆம்பளயா இருக்கனும். அப்போதான் பொம்பளைக்கும் மரியாதை. ஆம்பளைக்கும் கவுரவம்”

பெண்களுக்கு மரியாதைதான் முக்கியமாம். பெண்கள் மரியாதையை மட்டும் வாங்கிட்டு போகிடனும். ஆனால் ஆண்களுக்கு மட்டும் கவுரவம் முக்கியமாம். அதுவும் பெண்களின் அடக்க ஒடுக்கமான மரியாதைக்குள் தான் ஆண்களின் கவுரவம் இருக்குன்னு தலைவர் சொல்றாரு. அடுத்ததா வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன ட்ரஸ்னு சொல்றாரே, அப்டின்னா தலைவர் கதர் ஆடை உடுத்திகிட்டு இல்ல இந்த சீன்ல பேசி இருக்கனும்.

அட்வைஸ் 2

அதிசயப் பிறவி படத்தின் இந்த வீடியோவில் 12:32 முதல் 12:41 மணித்துளிகள் வரையுள்ள காட்சிகளில் தலைவர் உதிர்க்கும் முத்தான வசனங்களைப் பார்க்கவும்.

”இத பாருங்க, பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும், வெளில எவ்ளோ பெரிய வேலைல இருந்தாலும், எவ்ளோ பணம் வசதி இருந்தாலும், வீட்டு வேலை செய்யாத பொம்பளை பொம்பளையே கிடையாது”.

அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி
” என்று பெண்கள் அச்சம், நாணத்தை எல்லாம் விட்டெறிய வேண்டும் என அப்போதே பாடினார் பாரதிதாசன். ஆனால் ரஜினிகாந்த் பாரதிதாசனுக்கு அடுத்த தலைமுறை பெண்களைப் பார்த்து, பெண்களோ எவ்ளோ படிச்சாலும் வீட்டு வேலைதான் செய்யனும்னு சொல்றாரு.

அட்வைஸ் 3

மன்னன் படத்தில் ஆக்ரோசமாகக் கொடுக்கும் இந்த அட்வைசை கவனியுங்கள். ”பெண்ணுக்கு அழகை விட அடக்கம்தான் முக்கியம்.” சரி இதக் கூட விட்டுடலாம். அடுத்து சொல்றத கேளுங்க. “அறிவை விட அமைதிதான் முக்கியம்”. இதென்ன சார் போங்காட்டமா இருக்கு. தலைவருக்கு அறிவெல்லாம் செகண்டரி தான் போல.

அட்வைஸ் 4

படையப்பா படத்தில் வரும் மிகப் பிரபலமான வசனம். ”ஏன் இப்டி கோவப்படுறீங்க, பொம்பளைன்னா பொறுமை வேணும். அவசரப்படக் கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக் கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக் கூடாது. கட்டுப்பாடு வேணும், இப்டி கத்தக் கூடாது. பயபக்தியா இருக்கனும், இப்டி பஜாரித்தனம் பண்ணக்கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கனும்.”

மேலே சொன்ன குவாலிட்டி எல்லாம் ஆண்களுக்கு தேவையில்ல போல. பெண்கள் அடக்கம், அமைதி, கட்டுப்பாடு, பயபக்தியோடவே இருக்கனுமாம். பயபக்தியோட இல்லைனா அதுக்கு பேரு பஜாரித்தனமாம். அப்புறம் கடைசியா மறுபடியும் ”பொம்பள பொம்பளயா இருக்கனும்”ங்கிற பழைய வசனத்துக்கு வந்துட்டாரு.

அட்வைஸ் 5

மாப்பிள்ளை படத்தின் இந்த வீடியோவில் 1:59:16 மணியிலிருந்து 1:59:42 மணித்துளிகள் வரை வரும் காட்சியைப் பாருங்கள்.

படத்தில் ரஜினிகாந்த் தன் மாமியாரான ஸ்ரீதேவியுடன் சவால் விட்டுக் கொண்டிருப்பார். பணத்தால எதையும் வாங்க முடியுமா அப்டின்னு கேட்பார். கார், பங்களா, எஸ்டேட், சொத்து என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டே வருவார். ஸ்ரீதேவி எல்லாவற்றையும் வாங்குவேன் என சொல்லிக் கொண்டே வருவார்.

திடீர்னு ஃப்ளோவுல நிறுத்தி ‘மஞ்சள் குங்குமம்’ அப்டின்னு கேட்பார். எல்லாவற்றுக்கும் படபடவென்று பதிலளித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி பட்டுன்னு ஷாக்காகி பதில் பேச முடியாமல் நிற்பார். தலைவர் சிரித்துக் கொண்டே ”நீங்க கோடி கோடியா தூக்கி எறிஞ்சாலும் இந்த உலகத்துல வாங்க முடியாத சில பொருட்கள் இன்னும் இருக்கு, ஆனா அதெல்லாம் ரொம்ப புனிதமானது” என்பார். இந்த சீனைப் பார்த்தவுடன் உங்களுக்கு “ஒன்னாரூபா குடுத்த பொட்டி கடையிலே குடுப்பான்” அப்டிங்கிற சந்தானம் காமெடி ஞாபகத்துக்கு வந்தா கம்பெனி பொறுப்பல்ல.

இது சும்மா ட்ரைலர் தான்ம்மா..! தலைவர் பெண்கள் எப்டி இருக்கனும்னு கொடுத்த definitionகளைத் தொகுத்தோம்னா ஒரு படமே எடுக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *